top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ponmani Valluvan - Singapore

Entry No: 

271

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

என் காதலே நெருக்கமாய் நீ...
உருக்கமாய் நான்...
சுருக்கமாய்...... என் கவிதைகள்!....

எளிமையாக கவிதை சொல்ல
என் ஆழ்மனதை தீண்டவேண்டுமா நீ..(?)
உன் கண்கள் எனை நோக்கினால் போதாதா!...

உயிர் தூண்டிடும் கவிதை ஒன்றை எழுதிட உன் உதவி வேண்டும்..
உன் இதழ் மை கொண்டு என் இமைகளில் கற்பனையை வார்த்திடு!...

யார் செய்த புண்ணியமோ
உன்னிடம் சரண் அடைந்தாயிற்று..
நான் மட்டுமல்ல என் கவி வரிகளும் தான்!...

நீ இல்லாமல் ஏது காதல்?
நீ இல்லாமல் ஏது நான் எழுதும் கவிதைகள்!...

அன்பே நீ தான் என் பெரும் கவிதை..
அதனால் உன் இதயத்தை துளையிட நினைத்தேன்;
என் கற்பனை எழுதுகோல் கொண்டு!...

உன் ஓரப்பார்வை பட்டதும் என் உடல் முழுவதும் கவிதை ஆனது!
நீ படிக்கத் தொடங்கியதும் உடலின் உயிர் களவு போனது...

நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வது போல
காதலோடு சேர்ந்து கவிதையும் வளர்கிறதே!

வாசிக்க மட்டுமே தெரிந்த என்னை
வர்ணிக்கவும் செய்தது நீயடா!...

என் எண்ணச் சிறகுகளை விரிக்க
உன் சின்னப் புன்னகை போதும்!..

நீ வாசிக்கத் தொடங்கினாய்..
என் வரிகள் சுவாசிக்கத் தொடங்கியது!...
தொடர்ந்து வாசி....
என் வரிகள் முடிவில்லா கவிதைகளாக தொடரட்டும்..

உன் விழியோடு உரையாடும்
கவியாக நான் மாற
என் மனதோடு மன்றாடுதே
என் இதயம்..!

விண்ணோடு மண்பேசும்
மொழியாக வந்தாய்!
மொழியிலே தேன்பொழியும்
முத்தமிழுக்கு முரணாக,
காதல்மொழி மெளனமொழி
பேச நீயும் வந்தாய்!

என்னுள் உன்னையும் தேடி,
உன்னுள் என்னையும் தேடி!
இருவரும் தொலையும்,
ஆட்டமுமாடி ஆட்சி செய்ய வந்தாய்....!

நம் காதல் பாகத்தில்
என் வேடிக்கைகளும்,
உன் குறும்புகளுமே
நேசத்தின் வெளிப்பாடாய்
மோகம் கொள்கிறதே
என் கண்ணாளனே..!

ஏவுகணை இல்லாமல் ஏறுகின்றேன் வான்வெளியில்
உன் கருவிழியின் காதல் தீ கொண்டு!...

புதியதோர் உலகம்
காதல் கவிஞன் கையில்....
படைக்கின்றான் கவியை
இரசிக்கின்றான் காதலை
ஏன், அதிலேயே வாழ்கின்றான்....

நீண்ட தார்ச்சாலையில்
ஒரு நெடும்பயணம்
பொடி நடையாய்
உன் கரம் பற்றி....
பாதை எங்கும்
உவமைகளும் உருவகங்களும்
சிதறிக் கிடக்கிறது,
காதல் பற்றி கவி எழுத
நானும் முற்படுகின்றேன்...!!!

கொஞ்சம் அன்பு;
கொஞ்சம் அக்கறை;
கன்னம் சுருங்கி கால்கள் தள்ளாடும் வயதிலும்
நீரில் பற்றி எரியும் காதல் கவிதைகளால்
பூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு ...!

- பொன்மணி வள்ளுவன்.

bottom of page