INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
K. Ramganesh - India
Entry No:
75
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அம்மாவின் நினைவு
காய்தல் உவத்தல் இன்றி
கட்டிலின் அங்கமாய்
கிடக்கிறாள் அம்மா ...
அவ்வப்போது பிரக்ஞை மட்டும்
நீண்ட தூர உறவினராய்
எப்போதாவது வந்து செல்கிறது
ஞாபகங்களின் சிறையில்
சிக்கித் தவிக்கிறாள் ...
நனவுலகிற்கு வரும்போது
ஒவ்வொருவராய் வரிசை கட்டி நிற்கிறார்கள்
என்னைத் தெரிகிறதா எனக் கேட்டு கேட்டு
பூட்டிய சிந்தனையில்
பொருந்தாத சாவி போட்டு
திருகித் திருகிப் பார்க்கிறார்கள்
பொருந்தாத பதில்களே கிடைக்கின்றன ...
18 வயதிலிருந்து 85 வயதுவரை
பலகாரம் சுட்டு விற்றவள்
எப்போதாவது ஒருமுறை
பலகாரம் கேட்பாள்
வாங்கி வந்து கொடுத்தால்
கொஞ்சம் தின்றுவிட்டு
நல்லா இல்லை என்பதாக
சைகை செய்கிறாள் ...
வடை எப்படி செய்வது
எனக் கேட்டால்
பருப்பை ஊற வைத்து பதமாக ஆட்டி கறிவேப்பிலை போட்டு
பக்குவமாக ...
ஒருமுறை அல்ல பலமுறை
பிசிறில்லாமல் சொல்கிறாள்
எல்லாவற்றையும் மறந்தவள்
இந்த நினைவுகளுடனாவது இருந்து விட்டுப் போகட்டும்
தொந்தரவு செய்யாதீர்கள் ...
- உடுமலை கி.ராம்கணேஷ்