top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Hemalatha Srinivasan - India

Entry No: 

78

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு
----------

பொங்கிப் பிரவாகமாக பெருகிடும் அன்பை
பொத்தி வைக்க முடியுமோ
பெட்டகத்தில் பூட்டி
அது மடைதிறந்த வெள்ளம்போல்
அடங்காமல் பாயும் அனைவரையும் நோக்கி

அன்பின் அர்த்தம் வார்த்தைகளில் இல்லை
அது அடிமன உணர்வின்றி வேறில்லை
அன்புக்கு இல்லை ஒரு எல்லை
அதனால் உண்டாகாது தொல்லை.
அன்பின் எடை அளக்க கருவியில்லை
அன்பிற்கு சமமானதொரு பொருளுமில்லை
அன்பை விரித்து வைக்க ஆகாயம் போதாது
அன்பை மடித்து வைக்க
அகிலமெனும் அலமாரி போதாது
அன்புக்கு விலை ஒன்று நிர்ணயிக்க முடியாது
அன்பை விலைக்கு விற்கும்
அங்காடியும் கிடையாது.

அன்பால் சாதிக்கமுடியாதது ஏதுமில்லை
அன்பின் சாதனைக்கு அளவுகோல் இல்லை
அருகில் இருப்பதால் அன்பு அதிகமாவதில்லை
விலகி இருப்பதால் அன்பு குறைவதுமில்லை.
அன்பு என்பது
காட்டாற்று வெள்ளம்
அதில் மூழ்கி
முத்தெடுக்க
விழைகிறது உள்ளம்

சிலருக்கு அன்பு காட்டத்தெரியாது
சிலருக்கு அன்பு காட்டுவது புரியாது
சிலரின் அன்பு காலத்தை மறக்க வைக்கும்
சிலரின் அன்பு மனதை மயங்க வைக்கும்.

அன்புக்கு இன்னதென உருவமில்லை
அன்புக்கு இன,மொழி,மத, பேதமில்லை
அன்புக்கு இல்லை ஒரு இலக்கு
அன்பில்லாதவர் நெருக்கத்தை விலக்கு
அன்பில்லா மானிடர்கள் கொஞ்சமில்லை
அன்புடன் அணுகினால்
அடி பணிவோர்க்கு பஞ்சமில்லை.

அன்புக்காக எதையும்
அளவின்றி விட்டுக்கொடுக்கலாம்
அன்பானவர்களை எதற்காகவும்
அடுத்தவர்க்கு விட்டுக் கொடுக்கலாகாது.
அழகாகப் பேசும் பல வரிகள்
அடுத்த தினங்களில் மறந்து விடும்
அன்பாகப் பேசும் ஒற்றை வரி
ஆழமாக மனதில் ஊடுருவி நிற்கும்.

கிடைத்த அன்பை விரும்பினாலும்
கிடைத்தது நிரந்தரமானதல்ல
கிடைக்காத அன்புக்கு ஏங்குவது
கிளரிவிடும் வேதனயை நிரந்தரமாக.

நெஞ்சக் கிணற்றிலிருந்து இறைத்த
அன்பெனும் நீரை
நெடுந்தூரம் கிளைபரப்பி வார்த்தாலும்
நெஞ்சக் கிணற்றில் அன்பெனும் நீர்
நெடுங்காலம் வற்றாது ஊறி மேலெழும்பும்.
அன்பு பொறுப்பதில் பெருகும்
புரிதலில் செழிக்கும், விதைப்பதில் விளையும்.

உயிர் கொடுத்து உள்ளத்தில் சுமந்து
உதிரம் ஊட்டி உடல் வளர்த்து
உள்ளது எல்லாம் அள்ளிக் கொடுத்து
எதற்கும் குற்றம் காணாது
எங்கும் நிழலாய் தொடர்ந்து
செய்யும் தவற்றைப் பொறுத்து
செயலில் வெல்லும் சக்தி கொடுத்து
மனம் வலிக்கும் போது கண்ணீர் துடைத்து
தனக்கென ஒதுக்காமல் தியாகம் செய்து
தன்னலம் பாராமல் சேவை செய்து
தாங்கிடும் உன்னதமே தாயன்பு.
தந்தையின் அன்பு தம்பட்டம் அடிக்காதாது
தந்தை சுமக்கும் பாரம்
தனித்ததொரு அன்பின் இலக்கணம்.

தந்தையின் அன்பு தன்னம்பிக்கை அளிக்கும்
ஆசானின் அன்பு அறிவை கொடுக்கும்
நண்பனின் அன்பு அல்லல்களைத் தீர்க்கும்
சகோதரர்களின் அன்பு சாகாவரம் தரும்
சகோதரிகளின் அன்பு சங்கடம் நீக்கும்
மூத்தோரின் அன்பு முறையாக
வாழ வைக்கும்
மற்ற உறவுகளின் அன்பு உற்சாகம் தரும்.

மகான்களின் அன்பு
மனிதநேயத்தை வளர்க்கும்
மண்டியிட்டால் குருவின் அன்பு
மன அமைதியை கொடுக்கும்
மனிதன் இறைவனிடம் வைக்கும் அன்பு
மறு பிறவியை உன்னதமாக்கும்

அடிமனதிலிருந்து ஆழமாகத் தோன்றும் அன்பு
ஆயுட்காலம் வரை தொடர்ந்து வரும்
அப்படித் தோன்றாத அன்பு
இரயில் சினேகம் போல்
அப்போதே மறைந்து விடும்
அன்பிற்கு உண்டோ
அடைக்கும் தாழ்
அன்பில்லா வாழ்க்கை
அத்தனையும் பாழ்

அன்பே சிவமென உணர்ந்தால்
ஆனந்தம் நெஞ்சில் எப்போதும் நிறையும்.

Entry No: 

79

தமிழ் கதை (Tamil Kadhai)

அலைபேசி
----------------------------
காலை எழுந்தது முதல் பரபரவென்று வீட்டு வேலைகளை முடித்து, கணவனுக்கும் எட்டு வயது மகளுக்கும் காலை டிபன், லஞ்ச் பாக்ஸ், எல்லாம் ரெடி பண்ணி அவர்களை அனுப்பிவிட்டு தானும் ரெடிஆகி அலுவலகம் புறப்படும் சமயம் வசந்தி யின் அலைபேசி அலறியது. எடுத்து ஹலோ என்றாள். நீங்க ரம்யாதானே என்றது எதிர்முனை. இல்லைங்க ராங் நம்பர் என்று சொல்லி கட் பண்ணி,
இருக்கற அவசரத்துல இந்த ராங் நம்பர் தொல்லை வேற என்று அலுத்துக்கொண்டே அலைபேசியை ஹாண்ட் பாக்கில் போட்டாள். மறுபடி அலறியது. அதே ரம்யாதானே என்ற கேள்வி. நான் தான் ராங் நம்பர்னு சொல்லிட்டேனே! திரும்ப திரும்ப ஏன் தொந்தரவு பண்றீங்க என்று சொல்லி தொடர்பைத் தூண்டிக்கும் முன் கடைசி மூன்று நம்பர்களைப் பார்த்துக்கொண்டாள்.

இனி இந்த நம்பர்ல இருந்து கால் வந்தா கட் பண்ணிடணும்னு முடிவு செய்தாள். மறுபடி கால்.
பார்த்தால் அதே நம்பர். எவனோ விளையாடுகிறான் என்று புரிந்தது. கால் வர வர கட் பண்ணிக்கொண்டே இருந்தாள். ஒரு யோசனை தோன்றியது. அட்டென்டு பண்ணி விட்டு பேசாமலே இருப்போம். வெறுத்துப்போய் தானே அழைப்பதை நிறுத்தி விடுவான் என்று நினைத்தாள். நான்கு முறை அதேபோல் செய்ததும் கால் வருவது நின்றது. ஆனால் மெசேஜ் வந்தது "கால் மீ என்று. அதை அலட் சியப்படுத்தினாள். தொடர்ந்து முப்பது மெசேஜ். வெறி பிடித்தவன் போல் அனுப்பிக் கொண்டிருந்தான். ஏதோ பைத்தியக்காரன் அல்லது எக்கச்சக்கமாக குடித்து விட்டு கண்மண் தெரியாமல் செய்கிறான் என்று நினைத்தாள்.
டெலிட் ஆல் பண்ணினால் ஏற்கனவே முக்கியம் என்று சேமித்து வைத்திருக்கும் எல்லா மெசேஜ் களும் போய்விடும். எனவே இன்னொரு நாள் பொறுமையாக வேண்டாததை எல்லாம் அழித்து விடலாம் என்று முடிவு செய்து தன் வேலையைப் பார்க்கத்தொடங்கினாள்.

இரவில் கணவனிடம் இதை எல்லாம் சொன்னபோது அவன்
" நாட்டில் இதுபோன்ற வேலை இல்லாதவங்க எண்ணிக்கை கூடிப்போச்சு. ஏதாவது நம்பருக்கு போன் போட்டு, பெண் குரல் வந்தால் கடலை போட்டு கரெக்ட் பண்ண முடியுமான்னு பார்ப்பா ர்கள்.இனி இது மாதிரி கால் வந்தால் போனை சுவிட்ச் ஆப் பண்ணிடு "
என்றான்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வாசலில் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
வசந்திக்கு ஒன்றும் புரியவில்லை. கணவனை எழுப்பி அழைத்து வந்தாள்.
உக்காருங்க இன்ஸ்பெக்டர். என்ன விஷயம்? யாரைதேடி வந்தீங்க?
இன்ஸ்பெக்டர் ஒரு அலைபேசி எண்ணை க்காட்டி இது யாரோட நம்பர் என்றார். வசந்தி தன்னுடையாதுதான் என்றாள்.
ஏம்மா உங்களுக்கும் சேகருக்கும் என்ன தகராறு?
சேகரா? யாரது? எனக்குத் தெரியாதே!
என்னம்மா விளையாடறீங்களா,
நீங்க ரம்யாதானே?
இல்லைங்க, எண் பெயர் வசந்தி.
என்னம்மா சொல்றீங்க?
அந்த சேகர் நேத்து தூக்குல தொங்கிட்டான்.
அது கொலையா
தற்கொலையானு தெரியல. அவன் அலைபேசில இருந்து நேத்து பன்னிரண்டு கால், முப்பது மெசேஜ் உங்களுக்குப் போயிருக்கு.ரம்யாங்கர
பெயர்லதான் உங்க நம்பர சேவ் பண்ணி வெச்சுருக்கான். உண்மையா சொல்லுங்க. அவனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? கண்டிப்பா அவன் சாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. உண்மையை சொல்றீங்களா இல்லை ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிக்கிற விதத்துல விசாரிக்கணுமா. உங்க அலைபேசியைக் குடுங்க என்று வாங்கிப் பார்த்தார். முப்பது மெசேஜ் அப்படியே இருந்தது.
இதுக்கென்ன சொல்றீங்க? முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட இருந்து இவ்வளவு மெசேஜ் வருமா?

வசந்திக்கு தலை சுற்றி மயக்கமே வரும்போல இருந்தது. வசந்தியும் அவள் கணவனும் முதல் நாள் நடந்த விஷயங்களை தெளிவு படுத்த படாத பாடு பட்டனர். இன்ஸ்பெக்டர் நம்புவதாக இல்லை. மறுபடி வருவேன் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

அன்று இரவு முழுவதும் இருவரும் தூங்கவில்லை. எப்படி தூக்கம் வரும்? கண் மூடினால் இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் வாரண்ட் மற்றும் விலங்குடன் வந்து கதவைத் தட்டுவது போல் காட்சி தோன்றியது. காலை யார் காலிங் பெல் அடித்தாலும் பயத்துடனே கதவைத் திறந்தனர்.
மதியமாகியும் இன்ஸ்பெக்டர் வரவில்லை. தனக்கு எதிராக இன்னும் ஸ்டராங் எவிடென்ஸ் தேடுகிறார் போல. தன் மீதி வாழ்க்கை இனி சிறைக் கம்பிகளுக்குள் தான் என்று முடிவே செய்து விட்டாள். சமைக்கவோ சாப்பிடவோ பிடிக்காமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பயத்தில் உறைந்து போய் இருந்தனர்.

மாலை ஆறு மணிக்கு இன்ஸ்பெக்டர் வந்தார்.
இருவரையும் பார்த்து பயப்படாதீங்க, நான் கைது செய்ய வரலை.
உங்களுக்கும் இந்த இறப்புக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லத்தான் வந்தேன் என்றார். பின் எப்படி இறந்தான் என்று வசந்தி கேட்க இன்ஸ்பெக்டர் விரிவாக சொன்னார்.

அந்த சேகர் ரம்யா என்ற பெண் மேல் ஒருதலைக் காதல் கொண்டு அவள் பின்னால் சுத்தி இருக்கான். அது பிடிக்காத ரம்யா தன் தோழியிடம் சொல்வது போல் வாய்க்கு வந்த அலைபேசி எண்ணை
சத்தமாகச் சொல்லி அதுதான் தன் புது அலைபேசி எண் என்று அவன் காதில் விழும்படி சொல்லி இருக்கா. அது வசந்தியின் அலைபேசி எண்ணாக அமைந்து விட்டது. அது தெரியாமல் அவன் வசந்திக்கு திரும்பத் திரும்ப போன் பண்ணியும் நிறைய மெசேஜ் அனுப்பியும் பயனில்லாமல் போனதால் ரம்யாவின் கல்லூரி வாசலில் காத்திருந்திருக்கிறான்.
அவன் அங்கு இருப்பதைப் பார்க்காத ரம்யா தன் தோழியிடம்
எனக்கு எண் அப்பா அமெரிக்க மாப்பிள்ளையை நிச்சயம் செய்திருக்காரு. என் படிப்பு முடிஞ்சதும் மூணு மாசத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்கா போய்டுவேன். என் பின்னாடியே நாய் மாதிரி சுத்துமே அந்த லூசு நான் சொன்ன அலைபேசி நம்பரை வெச்சு யார் உயிரை வாங்குதோ தெரியலை என்று சொல்ல தோழிகள் இருவரும் சிரித்திருக்கிறார்கள்.
அந்த நிமிடம் ஏற்பட்ட அதிர்ச்சியும், அவமானமும், ஏமாற்றமும் அவனைத் தற்கொலைக்குத் தூண்டி இருக்கு.தூக்குல தொங்கிட்டான்.

இதுதாம்மா நடந்திருக்கு.
இதுல வசந்தி மாட்டாம தப்பிச்சது அவனுடைய டைரி எழுதும் பழக்கத்தாலதான்.
அத்தனை விவரங்களையும் டைரில எழுதி அந்த டைரியை பெட்டிக்குள்ள வெச்சுருக்கான். நாங்க அவன் வீடு முழுவதும் தேடினதுல அந்த டைரி கிடைத்து நீங்க தப்பிச்சீ ங்கம்மா. இல்லைனா உங்களைத்தான் சந்தேகப்பட்டு கைது பண்ணி இருப்போம்.
கடவுள் டைரி ரூபத்துல உங்களைக் காப்பாத்தி இருக்காரும்மா.
என்று சொல்லி முடித்துக் கிளம்பினார்.

வசந்திக்கும் அவள் கணவனுக்கும் போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருந்தது.

bottom of page