top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

இந்துமதி சண்முகசுந்தரம் - India

Entry No: 

260

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நாகரீகம் வளர்ந்த இந்நூற்றாண்டில் கூட கலப்பு திருமணம் சாக்கடை என்றால் ,
உங்களது கட்டாயத் திருமணம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கௌரவம் கலந்த பாதாளச் சாக்கடையே ஆகும் !
இரு மனம் விரும்பியக் காதல் திருமணம் அவமதிப்பு என்றால்,
நீங்கள் கடமையென நினைக்கும் ஓர் நாள் ஒப்பந்தத் திருமணம் அவமதிப்பிற்கே அவமானம் ஆகும் !
முன்பின் தெரியாத ஒருவரிடம் பேசவேக் கூடாது என்று சொல்லி வளர்க்கும் நீங்கள் ,
முன்பின் தெரியாத ஒருவரிடம் என் வாழ்நாள் இரவுகளைப் பழகிக் கொள்ளச் சொல்வது எப்படி சரியாகும் ?
நாம் போகும் பொழுது எதைக் கொண்டு செல்லப் போகிறோம் என பணத்தை தாரை தாரையாக பிள்ளைகளுக்கு செலவு செய்த அப்பா விற்கு ,
இருக்கும் வரை சமூகத்தோடு ஒட்டி வாழ்ந்து விடனும் என்று மிரட்டும் பொழுது ஏன் புரிய வில்லை ?
இச்சாதி சமூகம் நம் கருவறையிலும் கல்லறையிலும் இல்லாமல் நடுவில் வந்தது என்று .
உறவினர்களை நம்பி வாழ்ந்து விடாதே என அறிவுறுத்திய அம்மா விற்கு ,
உற்றார் உறவினரின் ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகி விடக்கூடாது என்றுக் கலங்கும் பொழுது ஏன் புரிய வில்லை ?
நாம் இவ்வுலகத்தை விட்டு விடைபெறும் பொழுது உறவினர்கள் யாரும் உடன் வர மாட்டார்கள் , உற்றார் யாரும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்த மாட்டார்கள் என்று .
என் பிள்ளை என்னையோ எனது குடும்ப மானத்தையோ இழிவு படுத்தினால் அவளை அறுத்து போட்டிடுவேன் என்று நீங்கள் விஷ வார்த்தைகளை கக்கும் பொழுது ,
அப்பா என்றாலே பாசம் என்று வாழ்ந்த பிள்ளைக்கு அப்பா என்றாலே பயம் என்று மனதில் விஷம் பரவி விடும் .
பிள்ளைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டாள் அம்மா என்று வருந்தியப் பிள்ளைக்கு இப்பொழுது தான் புரிகிறது ,
தன் அம்மா தன்னையும் இச்சமுதாயத்திற்கு பலி ஆடாகா அர்ப்பணிக்க ஒப்புக் கொண்டாள் என்று .
இன்னும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களை எதிர்க்க மனம் இல்லை எனக்கு ,
ஆனால் நாளை கூட நிச்சயமில்லாத இவ்வுலகில் என்னை கலங்கடித்து சாதிக்கத் துடிக்கிறீர்கள் நீங்கள் .
மனிதன் வளர்ந்து மனிதம் வளராத இச்சமூகத்தில் எனக்கு அளித்த முழுமையடையாத சுதந்திரத்தை நான் மாற்றி உணர்த்திக் கொண்டேன் ,
சுதந்திரம் என்பது கிடைத்ததை ஏற்கும் வரை அல்ல , பிடித்ததை பழகும் வரை என்று .
தாயிடம் கண்ட தாய்மையை வேருவரிடம் காணும் பொழுது இம்மனிதனின் மனம் அதை ஏற்கச் சொல்லும் .
தந்தையிடம் கண்ட பாதுகாப்பை மற்றொருவரிடம் இருந்து உண்மையாக உணரும் பொழுது இம்மனிதனின் வாழ்க்கை அதை சொந்தமாக்கச் சொல்லும் .
ஏனென்றால் எவ்வுறவின் அடிப்படையும் அன்பே ! இது நம்பிக்கை துரோகம் அல்ல .
தாய்ப்பாலுடன் தைரியத்தையும் ஊட்டி வளர்த்த அம்மா விற்கும் ,
அரவணைப்புடன் அறிவையும் சீராட்டி வளர்த்த அப்பா விற்கும் நான் கற்றுக்கொடுக்க விரும்புவது ,
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு அல்ல ; வாழ விட்டு வாழ்வதற்கே !
ஜாதி இனம் சமுதாயம் எல்லாம் என்னோடு ஒழியட்டும் என்று என் வாழ்நாளைத் தியாகம் செய்யட்டுமா !
அல்லது இச்சாதி சமுதாயமற்ற வாழ்க்கை என்னிடமிருந்து தொடங்கட்டும் என்று ஓர் நாளாவது சிறகடித்து வாழ்ந்து செல்லட்டுமா !

bottom of page