top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Vennila Nallamuthu - India

Entry No: 

518

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு

அநாதை விடுதிகளின் -
ஜன்னல் ஓரமாய்,
எனை எதிர்பார்த்து
ஏங்கும் விழிகள்
தேடியும் கிடைக்காப்
புதையல் - நான்!

பலநேரங்களில் -
தினசரி வாழ்க்கையெனும்
யதார்த்தங்களினூடே,
அடையாளம் கண்டுகொள்ளப்படாப் -
பொக்கிஷம் - நான்!

உங்களது உறவுகளெனும் -
கிளை பரத்திப் பெருத்த மரத்தின்,
அடிவேர் - நான்!

அவனின்றி அசையாது,
ஓர் அனுவும் - என்பர் பலர்.
அவனே நான் என்றும் கூறுவர்,
விவரம் அறிந்த சிலர்!

சாதிமத பேதமொன்றும் -
எனக்கில்லை.
ஈ,எறும்பு, புல்பூண்டு, பணங்காசென்று -
பாரபட்சம் பார்க்காமல்,
சகலரையும் அரவணைக்கும்
சாமி - நான்!

ஊற்றி வைத்த பாத்திரத்தின்
உருவெடுக்கும் நீர் போல -
எந்தன் உருவு - வடிவிலா வடிவு!

போர்க்களம் ஊடே -
பூச்செடி நடலாம்,
என் தயவிருந்தால்!

மனிதர்கள் மத்தியில் -
மானுடம் மலரும்,
என் வழி நடந்தால்!

ஏடெடுத்துப் படித்து -
எதுகை மோனை பூட்டி -
எக்களிக்கத் தேவையில்லை,
என் மொழி புரிந்தால்!

இன்னும் என்ன சொல்ல -
என்னைப்பற்றி?
அண்டத்தின் அளவிலா நீட்சி போல,
முடிவிலியாகிய நான் -
இச்சொற்களுக்குள் சுருங்கிடுவேனா?

இருப்பினும் இறுதியாய்,
முடிவிலியின் முடிவாய் -
இக்கவிக்கும் கருவாகிப்போன,
வாழ்க்கை என்னும் -
கவிதையின் கரு - நான்
நான் - அன்பு!

Poem by : Vennila.N




bottom of page