top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sibi Chakaravarthi - India

Entry No: 

282

தமிழ் கதை (Tamil Kadhai)

ஏழு வகை தட்டு வரிசையோடு மாப்பிள்ளை வீட்டார்கள் வந்தாயிற்று.விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளம் நிரம்பியது.ஒரு வழியாக இந்த நிலை வரைக்கும் வந்து விட்டதன பெருமூச்சு விட்டான் ராம். கூட்டத்தின் குரலாக “பொன்ன வர சொல்லுங்கப்பா” என்றாள் சிவகாமி சித்தி.ஆர்வம் இருக்கும் அல்லவா. அழகாய் தங்க நிறப் பட்டு புடவை உடுத்தி அளவாய் நகை அணிந்து அன்ன நடைப் போட்டு வந்தாள் ஜானு. இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதையாக விழுந்து வணங்கினாள். வெட்கத்துடன் போய் தூணின் பின்னே நின்றுக் கொண்டாள் வீடே ஒரே பேச்சு சத்தம். புது சொந்தம் கிடைத்த மகிழ்ச்சியைப் பரிமாற்றிக் கொண்டிருந்தார்கள். அவரவர் வயதிற்கு ஏற்றவர்களை கண்டுகொண்டு பரிச்சயம் ஆனார்கள். குழந்தைகளுக்கு மாமா, அத்தை, பெரியப்பா, சித்தி என்று புது உறவுகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. மீண்டும் கூட்டத்தில் ஒரு குரல் “பொன்னு நல்லா பாடுமாமே, ராம் சொல்லிருக்கான். கொஞ்சம் பாடேன் மா கேப்போம்” என்று ராமின் அலட்டல் அத்தை ஆனந்தி வத்திப் போட்டாள். பெரியவங்க கேட்டதுக்காக இல்லாம எப்போ கேட்பார்கள் என காத்திருந்தது போல “யமுனை ஆற்றிலே …….” பாட்டை ரொம்ப நேர்த்தியாக ரெக்கார்டிங்ல கேட்பது போல பாடி முடித்தாள். அவள் யமுனை ஆற்றிலே பாடுவதற்கு பின்னாலும் ராம் எப்பொழுதும் அந்த பாடலை விருப்பமாக பாட சொல்லி கேட்பது தான் காரணம். முடித்த உடனே ” ஜானகி பேர் வச்சது என்ன சும்மாவா!” என்று பெருமையாக சிரித்துக் கொண்டே சொன்னார் ஜானுவின் ஓட்டவாய் சித்தப்பா. தட்டு மாற்றப்பட்டது. கல்யாணத்துக்கு தேதி குறிக்கப்பட்டது. அடுத்ததாக மாப்பிள்ளை வீட்டார் கை நனைக்கும் சம்பிரதாயம் தான் பாக்கி. இவ்வளவு கலகலப்புக்கும் சலசலப்புக்கும் நடுவே இருவர் மட்டும் அமைதியாக தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். ஷாப்பிங் எங்கு போவது என ஆரம்பித்து கல்யாணம் முடிந்து கிட்டதட்ட அரை நூற்றாண்டு சந்தோஷமாக கடத்தி 80 வயதில் எங்க செட்டில் ஆகி ஓய்வெடுக்க வேண்டும் என்று ராமும் ஜானுவும் கண்களிலே கதைப் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது. திடிரென ஒரு அதிர்ச்சி ராமின் உடம்பில் பாய்ந்தது. “என்னடா கடைசி நாளா பாத்து இவ்வளவு நேரம் தூங்குற? என்ன பகல் கனவா?” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தான் சதிஷ். அப்போது தான் ராமிற்கு நிலைமையே புரிந்தது.இன்று 09-05-1996 என்றும் பள்ளியின் கடைசி நாளென்றும் பொட்டி படுக்கை கட்டிக் கொண்டு ஹாஸ்டல காலி செய்ய வேண்டும் என்று. ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் ராமிற்கு வேற வழி இல்லையே. பள்ளி வாழ்க்கை முடிய போகுதே என்கிற கவலையை விட ஜானுவை இனி எப்போ பார்போம்னு தான் அவனுக்கு கவலையே.‌ஒரு வழியாக தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கிளம்பினான்.

பல வருடங்களுக்கு பிறகு,

கனவில் கண்டது போல கல்யாணம் நடந்நது, குழந்தைகள் பிறந்தன, சிங்கப்பூரில் செட்டில் ஆகி மகிழ்ச்சியான வாழ்க்கையை ரொம்ப அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தாள் ஜானு. ஆனால் வேறு ஒருவரோடு. இனி நடக்காது என்று தெரிந்தும் அந்த காதல் (பகல்) கனவோடு மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் ராம் இன்றும்!

bottom of page