REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Vel Murugan - India
Entry No:
459
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
ஒரு திருநங்கையின் குரல்!
நான்..
ஆண் உடலில் அடைபட்டிருக்கும் பெண்ணுமல்ல, பெண் உடலில் அடைபட்டிருக்கும் ஆணுமல்ல! எனெனில் ‘இது இல்லையெனில் அது’ என்ற குறிகிய வட்டத்தையும் மீறிய பாலினமே எனது விழைவு.
இதே காரணத்தினால் தான், விரும்பிய அடையாளத்தை தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும், நான் பெண் உடை அணியும் ஆணோ அல்லது ஆண் உடை அணியும் பெண்ணோ கிடையாது.
நான்..
ஆதியின்றி, அந்தமின்றி விரிந்து காணப்படும் பாலின வெளிப்பாடுகளில், எனது அடையாளமும் ஒன்று.
அன்றும் இருந்திருக்கிறேன், இன்றும் இருக்கிறேன், இந்த மனித சமுதாயம் இருக்கும் வரை, என்றும் இருப்பேன்.
நான்..
ஒரு போராளி. உங்களை போலவே, இயற்கையின் சீற்றத்தையும், மனிதனால் நடத்தப்படும் பேரழிவுகளையும் சந்திக்கும் ஒரு போராளி.
பேரழிவுகள் மட்டுமின்றி சிறிய மனம் படைத்தவர்களையும், குறுகிய மனப்பான்மையையும், வேற்றுமைபடுத்துதலையும் தினமும் சந்திக்கும் ஒரு போராளி.
நான்..
இத்தனை போராட்டங்களிலும், மனம் தளருவத்தில்லை. இவையெல்லாம் இன்றைய கஷ்டங்கள், நாளைய சமுதாயம் அன்பும், அரவணைப்பும் நிறைந்தது என்பது என் நம்பிக்கை.
அந்த நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து, தளர்சியற்று மலர்ச்சியுடன் தொடர்கிறது என் வளர்ச்சி.
எனக்கு ..
ஆக்கப்பூர்வமான அறிவும், அளவற்ற நம்பிக்கையும் கொண்ட எனக்கு, கல்வியறிவும், வேலைவாய்ப்பும் பெற இருக்கிறது உரிமை!
மருத்துவர், செவிலியர், பொறியியல் வல்லுநர்், ஆசிரியர், கவிஞர், தொழிலதிபர், தலைவர் என்று பல முகங்கள் எனது பெருமை.
எனக்கு ..
வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ அழகாய் ஒரு மனை
அலுத்து சலித்து அந்த மனைக்கு திரும்பும்பொழுது, அணைக்க ஒரு துணை
எங்கள் அன்பின் சின்னங்களாய் குழந்தைகள், நான் போற்றிக் காக்கும் எங்கள் பெற்றோர்கள்
ஆதரவாய் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உற்றோர்கள் – என்று
உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது உரிமை.
நானும் நீங்களும்..
சிரிப்பு, அழுகை, கோபம், தாபம், மலர்ச்சி, மருட்சி என்று உங்கள் உணர்வுகளும் என் உணர்வுகளும் ஒன்று
மானமும் மரியாதையும் எனக்கும் உண்டு, என்னையும் கௌரவத்துடன் நியாயமாய் நடத்துவது நன்று
நானும் நீங்களும்..
இன்ப துன்பங்கள் கலந்த, சுதந்திரமும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை எனது கனவு
இதுபோன்ற என் கனவுகளில் நீங்களும் பங்கு கொள்ளவேண்டுமென்பது எனது விழைவு
திருநங்கை என்ற அடையாளமோ, அல்லது வெறும் உடலோ மட்டும் அல்ல நான்
நான் யாரென்று, எதுவென்று என்னிடம் கேளுங்கள் –
மனிதம் நான் !
நானும் நீங்களும்..
மனித பன்மை போற்றும் இந்த வாழ்க்கை பயணத்தில் துணை
எனக்கு நீங்கள் மட்டுமல்ல நண்பர்களே, உங்களுக்கு நானும்தான் –
எனெனில், இது என் பயணமல்ல, நம் பயணம்!
இது என் பயணமல்ல, நம் பயணம்!