REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Thamizh Magan Dr.S.Dhandapani - India
Entry No:
527
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தாய்
தாயைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசு என்றார்கள்!
எதனைப் பேசுவது?
எப்படிப் பேசுவது?
எண்ணங்கள் கண்முன்னே வண்ணங்களாய் ஒளிர்ந்தன ;
அலைகளாய் எழுந்தன; காட்சிகளாய்த் தொடர்ந்தன!
அடுக்கடுக்காய் நினைவுகள்; அத்தனையும் நிகழ்வுகள்!
வாழ்நாளெல்லாம் பேச வரமளித்த தாயைப்பற்றி
ஓரிரு வார்த்தைகளா? உள்ளுணர்வு கோபப்பட்டது!
வார்த்தை வரவில்லை ;
வந்தது கண்ணீர்!
கருவில் சுமந்தவளைக், கண்ணுறக்கம் இழந்தவளைக்,
கண்ணீரில் குளித்தவளைக் கண்முன்னே கொணர்ந்தது!
சாய்ந்து நடந்தவளைச்,
சறுக்கி விழுந்தவளைச்,
சருமம் இளைத்தவளைச், சன்னதிக்குள் வைத்தது!
வலியொடு துடித்தவளை, வாய்விட்டு அழுதவளை,
வளைக்கரத்தில் தாங்கியவளை,
வணங்கியே அழைத்தது!
உயிர் கொடுத்தவளை,
உணர்வு அளித்தவளை,
உதிரம் தந்தவளை,
உள்ளத்தில் தியானித்தது!
ஈன்று எடுத்தவளை,
ஈ-படாது காத்தவளை
இரவெலாம் விழித்தவளை, இதயத்தில் இறுத்தியது!
பத்தியம் உண்டவளைப், பத்திரமாய்க் காத்தவளைப்,
பாசத்தில் அணைத்தவளைப், பக்கத்தில் அழைத்தது!
சேயாக்கிப் பார்த்தவளைச், செய்திகள் சொன்னவளைச்,
சேவையில் சிறந்தவளைச், செவிகுளிர அழைத்தது!
பாலூட்டி வளர்த்தவளைப், பண்பூட்டி அணைத்தவளைப்
பாராட்டிப் பார்த்தவளைப், பார்வைக்குள் கொணர்ந்தது!
மார்மீது சாய்த்தவளை,
மடிமீது சுமந்தவளை,
மறுஜென்மம் எடுத்தவளை, மனத்துள்ளே நினைத்தது!
தாலாட்டுப் பாடியவளைத் தாயன்பு கூட்டியவளைத்,
தன்னையே மறந்தவளைத், தலைதாழ்த்தி வணங்கியது!
கைப்பிடித்து நடந்தவளைக், கால்பிடித்து விட்டவளை,
நூல்படிக்கச் சொன்னவளை, நூறுமுறை யோசித்தது!
அறிவுரை சொன்னவளை, அரவணைத்துக் காத்தவளை,
அகிலத்தைக் காட்டியவளை, அகத்துள்ளே அழைத்தது!
சீராட்டி வளர்த்தவளைச், சீர்தூக்கிப் பார்த்தவளைச்,
சிறப்பெல்லாம் தந்தவளைச், சித்தத்தில் நிறுத்தியது!
பசியோடு துடித்தவளைப், பட்டினியால் மெலிந்தவளைப்,
பருவத்தைத் தொலைத்தவளை, உருவத்தில் உள்ளிட்டது!
சண்டை தடுத்தவளைச்,
சமரசம் செய்தவளைச்,
சத்தியம் காத்தவளைப், புத்தியில் கொணர்ந்தது!
சக்கரமாய்ச் சுழன்றவளைச், சர்க்கரையாய் இனித்தவளை,
அக்கறை கொண்டவளை, அன்போடு அழைத்தது!
உலகைப் படைத்தவளை, உறவைக் கூட்டியவளை,
உத்தமப் பத்தினியைச், சித்தத்தில் சிலையிட்டது!
அனைத்தும் தந்தவளை, அன்பைப் பொழிந்தவளை,
அன்னையாய் ஆனவளை, அகங்குளிர நினைத்தது!
என்னைத் தந்தவளை, எனக்காகத் துடித்தவளை,
என்னுள்ளே புதைந்தவளை எடுத்துப்பேச முனைந்திட்டேன்!
அன்பின் அடையாளத்தை, ஆலயத்தின் கருவறையைத்,
தேசத்தின் தனித்துவத்தைப், பாசத்தின் பந்தத்தைப்,
புன்னகையின் புனிதத்தை, வாழ்வின் வசந்தத்தை,
மொத்தமாக்கிய
அன்னையைப் பற்றி
ஓரிரு வார்த்தைகளில்
எப்படிச் சொல்வேன்? நான்!
உலகையே அடக்கியவள்,
என் ஓரிரு வார்த்தைகளில் அடங்கிடுவாளா?
இது சாத்தியமா ?
சத்தியமாய் என்னால் இயலவில்லை!
உங்களால் முடியுமா? யோசியுங்கள்!
அன்னையை நேசியுங்கள்!
முனைவர் சீனு. தண்டபாணி,
தமிழ்த்துறைப் பேராசிரியர்,
சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி-4
அலைபேசி எண் : 9025495244. மின்னஞ்சல் முகவரி : seenudhanda@gmail.com