REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Thamizh magan Dr.S. Dhandapani - India
Entry No:
436
தமிழ் கதை (Tamil Kadhai)
நகலாகும் அசல்கள்!
"ஏம்பா கோபி, காலேஜுக்கு கிளம்பாமல் உட்கார்ந்துட்டு இருக்க"
"இன்னிக்கு நான் காலேஜுக்கு போகலம்மா!"
வீட்டிலிருந்து பார்க்கிற அளவுக்கு முக்கியமான வேலை என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
"இன்னிக்கு என் நண்பனோட பர்த்டே. அதான் காலேஜ கட் அடிச்சுட்டுப் பிரண்ட்ஸ்ங்களோட சேர்ந்து, பர்த்டே பார்ட்டிக் கொண்டாடப் போறோம்!"
"படிக்கிற வயசுல ஏம்ப்பா இப்படித் தறிகெட்டுத் திரியரீங்க. எதற்கெடுத்தாலும் பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ்னு அப்படி என்ன, நாங்க பார்க்காத ஃப்ரெண்ட்ஸ நீங்க பாத்துட்டீங்க?"
"உனக்குச் சொன்னா புரியாது, நீ போய் வேலைய பாரும்மா!"
"வேணாம்டா! ஏற்கனவே அப்பா உன் மேல பயங்கர கோபத்தில் இருக்காரு. தேவையில்லாமல் பிரச்சினையை வளர்க்காத!"
"நான் பிரச்சினையை வளர்க்கலமா, நீங்கதான் இப்பப் பிரச்சினையைப் பெருசாக்குறீங்க!"
"தோளுக்கு மேல வளர்ந்திட்ட!அதான் குரல ஒசத்திப் பேசற! உட்கார்ந்து சாப்பிடும் போது உழைப்போட அருமை புரியாது. நீ உழைத்து சம்பாதிக்கும் போது தான் காசோட அருமையும், காலத்தோட பெருமையும் உனக்குப் புரியும்! நான் எது சொன்னாலும் உன் மரமண்டைக்கு ஏறப்போறதில்ல. எப்படியாச்சும் போ!" என்று திட்டியபடியே மனசுக்குள் வேதனையோடு பாத்திரங்களைப் புலம்பியபடியே கழுவி அடுக்கிக் கொண்டிருந்தாள் பத்மா!
வண்டியை எடுத்துக்கொண்டு பார்ட்டிக்கு புறப்பட்டான் கோபி!
காத்திருந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் 'ஹாய்' சொல்லிக் கையைக் குலுக்கிக் கொண்டனர். பர்த்டே நண்பனுக்கு ஆளுக்கொரு அடியைச் செல்லமாய்க் கொடுத்துப் பார்ட்டியைக் கொண்டாடினர்.பகல் முடிந்து இருட்டு வரத் தொடங்கியதால் அவரவர்கள் வீட்டிற்குத் திரும்பினர்.
வீட்டிற்கு திரும்பிய கோபியிடம், எதுவுமே கேட்காமல் முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் கோபியின் அப்பா சந்தானம்.
சந்தானத்தின் பார்வைக்குச் சற்றும் சளைக்காதவனாய்ப் பார்த்துவிட்டுப் படுக்கச் சென்றான் கோபி!
பெற்ற பிள்ளைகளிடம் பொறுப்பை வளர்ப்பதற்குத் தினமும் வெறுப்பைச் சம்பாதிக்கும் பல பெற்றோர்களின் நிலைமை இப்படித்தான் மதிப்பிழந்து, மரியாதையிழந்து தலைகவிழ்ந்து கிடக்கிறது.
பெற்றோர்களை விட, நண்பர்களிடம் அதிகம் நேசமும் அன்பும் பாசமும் வைத்துப் பழகுகின்ற இக்காலப் பிள்ளைகளுக்குச் சந்தானத்தின் மனதைப் புரிந்து கொள்ளும் பக்குவமில்லை.
நாட்கள் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தன. கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வு நெருங்கியது. அப்போதும் கோபி பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரியவே ஆசைப்பட்டான்.அதுமட்டுமன்றி அப்படி நண்பர்களாகப் பழகிய ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டான்.
நிலைமை கைவிட்டுப்போனதை அறிந்து,பத்மாவும்சந்தானமும் மிகவும் வருந்தினர்.பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்தில் யார் சொல்லிக் கேட்பான் இவன்? என்று புலம்பலானார்கள்.
சட்டென அவர்கள் நினைவில் பக்கத்துத் தெரு பக்தவச்சலம் ஆசிரியர் நினைவுக்கு வந்தார். சிறுவயதிலிருந்து பக்தவச்சலம் ஆசிரியர் கோபியின் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டியவர். கோபியும் பக்தவச்சலம் ஆசிரியருக்கு அடிபணிவது வழக்கம்.
மறுநாள் சந்தானமும் பத்மாவும் பக்தவச்சலம் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று, அவரிடத்தில் நிலைமைகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லிக் கோபிக்குத் தகுந்ததொரு அறிவுரையை வழங்குமாறு வேண்டினார்கள்.
"திருமண விஷயத்தில் நான் எப்படித் தலையிடுவேன்? பெற்றோர்களையே மதிக்காதவன் என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பானா?"என்றார் பக்தவச்சலம் ஆசிரியர்.
"நிச்சயம் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவான். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்காக இந்த ஒரு முறை நீங்கள் பேசிப் பாருங்கள்" என்றனர் பத்மாவும் சந்தானமும்.
மறுநாள் காலை பக்தவச்சலம் ஆசிரியர் சந்தானம் வீட்டிற்கு வந்தார். கோபியும் அவரை அன்போடு வரவேற்றான். இருப்பினும் அவன் மனதிற்குள் இவ்வளவு நாள் வராத பக்தவச்சலம் ஆசிரியர் இன்று ஏன் வருகிறார்? ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது என்று மனசுக்குள் சிந்திக்கலானான்.
அவன் நினைத்தது போலவே பக்தவச்சலம் ஆசிரியர் மெல்ல பேச்சை ஆரம்பித்து திருமணத்தில் வந்து நின்றார். கோபிக்கு நடந்தது புரிந்தது. பெற்றோர்களைப் பார்த்து ஒருமுறை முறைத்தான். ஐயா, "அவளை நான் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து விட்டேன். என் நண்பர்கள் திருமணத்தை நடத்தித் தருவதாக எனக்கு வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள். எனவே யார் தடுத்தாலும் திருமணம் நடக்கும் தயவு செய்து நீங்கள் இந்த விஷயத்தில் தலையிடாதீர்கள் "என்றான் பக்தவச்சலம் ஆசிரியரிடம் கோபி!
நாம் சொல்லித் தானே ஆசிரியர் வந்து கேட்கிறார். அவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறானே, என்ற கோபத்தில்" உன் இஷ்டப்படி நடப்பதற்கு இது உன் வீடு அல்ல ;இங்கு இருக்கும் வரை எங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டும் .இல்லையென்றால்".. என்று பேச்சை நிறுத்தினார் சந்தானம்.
சந்தானத்தின் வார்த்தைகளைக் கேட்ட கோபிக்கு ஆத்திரம் தாங்காமல் பேச ஆரம்பித்தான். "என்ன சார்? எதுக்கு எடுத்தாலும் இவங்க இதே மாதிரி தான் பண்ணிட்டு இருக்காங்க. என்னால சுயமா எந்த முடிவும் எடுக்க முடியல. அடிமையாகத்தான் இந்த வீட்ல நான் இருந்துட்டு இருக்கேன். எதற்கெடுத்தாலும் அந்த காலத்தில் நான் இப்படி இருந்தேன்,அப்படி இருந்தேன், இப்படியே சொல்லிச் சொல்லி என்னை எதையுமே செயல்படுத்த விடமாட்டேங்குறாங்க.நண்பர்களோட பழகறத தப்புன்னு சொல்றாங்க!.நாளைக்கு எனக்கு ஏதாவது பிரச்சினைனா, நண்பர்கள் தானே வந்து நிப்பாங்க.இந்த வீட்ல எனக்கு இருக்கவே பிடிக்கல ஐயா! நான் என் வழியைப் பார்த்துட்டுக் கிளம்பிப் போறேன். அவங்க நிம்மதியா இருக்கட்டும்!" என்றான் கோபி.
சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த பக்தவச்சலம் ஆசிரியருக்கு இது சரியான நேரமாகப் பட்டது. உடனே அவர் கோபியிடம் பேசலானார்.
"தம்பி கோபி! கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா, நிதானமா காதுகொடுத்துக் கேளு. கோபப்படாத.என்னோட வயசுல எனக்கும் என் அப்பா,அம்மா சொன்னது எரிச்சலாகத்தான் இருந்தது. அவர்களைப் பார்த்தால் கோபங்கோபமாகத்தான் வந்தது. ஒரு கட்டத்தில் அவர்களோடு வாழவே பிடிக்காமல் கிளம்பவும் முடிவு செய்தேன். அப்போதுதான் என்னுடைய ஆசிரியர், எனக்கு அறிவுரை சொன்ன விதம் இன்றுவரை அந்த வீட்டை விட்டு, அவர்களை விட்டு நான் பிரியாமல் இருக்கின்றேன்.அன்று அந்த வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு எனக்குப் பல காரணங்கள் இருந்தது..பிறகு யோசித்துப் பார்க்கின்றபோது ஒரு காரணமும் சரியில்லை என்று தெரிந்தது. அப்புறம் என் மனதை மாற்றிக்கொண்டேன். இன்று வரை அவர்களோடு ஒன்றாக இருக்கின்றேன். நன்றாகவும் இருக்கின்றேன்!"
"என் ஆசிரியர் எனக்குச் சொன்னதை, ஒரு ஆசிரியராய் நான் உனக்குச் சொல்கிறேன். அசலும் நகலும் ஒன்று போல இருந்தாலும் அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் உண்டு. உலகத்தில் எத்தனை உறவுகள், சொந்தங்கள், நட்புகள் இருந்தாலும், முதலில் போற்றி வணங்க வேண்டியவர்கள் பெற்றோர்களே! அவர்களால்தான் நாம் இந்த உலகை பார்க்கின்றோம். அவர்களால்தான் நமக்கு அனைத்து உறவுகளும், சொந்தங்களும், நட்புகளும் கிடைக்கின்றன. இந்த உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்தி இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை வடிவமைத்துக் கொடுத்து, நல்ல உறவுகளையும் நட்புகளையும் நமக்குத் துணையாகக் கொடுத்து, நம்மை நல் முறையில் வாழ வைப்பதற்காகத் தம்முடைய வாழ்க்கையைத் தியாகம் செய்து கடைசி வரையில் நமது வாழ்க்கைக்காகப் போராடும் பெற்றோர்களே, இந்த உலகத்தில் இறைவன் நமக்குக் கொடுத்த "அசல்"என்ற உண்மை ஆகும். பெற்றோர்களின் வழியாகக் கிடைக்கப்பெற்ற அனைத்துமே நமக்கு "நகல்"என்ற போலி போன்றதே!. நம்மை வாழ வைப்பதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எப்படி நமக்கு தீங்கிழைக்க முற்படுவார்கள்? கட்டுப்பாடுகளும், அடக்குமுறைகளும், கோபத்தாபங்களும் நம்மை நல்லப் பாதைக்கு கொண்டுச் செல்வதற்காகவே, என்பதை நாம் முதலில் உணர வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் இந்த முறைகளை சரியாகக் கையாண்டுப் பிள்ளைகளிடமும் நல்ல பெயரை வாங்கிக் கொள்கிறார்கள். சில பெற்றோர்களுக்குக் கையாளும் விதம் தெரியாமல் கெட்டப் பெயரை வாங்கிக் கொள்கிறார்கள்!"
"உனக்கான வாழ்வை, நீ தேடிக்கொள்ள நினைப்பது போல், அவர்களுக்கான வாழ்வைஅவர்கள் தேடிக்கொண்டிருந்தால் உன்வாழ்க்கை எந்த நிலைமையில் இருந்திருக்கும்? என்பதை மட்டும் நீ யோசித்துப்பார்! இப்போதும் நான் உனக்கு அறிவுரைக் கூறவில்லை. என் அனுபவத்தைச் சொல்லவே முற்பட்டேன். உன்னைச் சார்ந்தவர்கள், உன்னோடு இருக்க வேண்டும், உனக்குள் இருக்க வேண்டும் என்று நீ நினைப்பது போல் ,உன் பெற்றோர்கள் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!"
"இக்காலப் பிள்ளைகள் சுதந்திரமான வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டு, அனைத்தையும் இழந்து தங்களையும் அறியாமல் அனாதைகளாக உருவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! உலகம் உன்னை நல்லவன் என்று சொல்வதைவிட, உன் பெற்றோர்கள் உன்னை நல்லவன் என்று சொல்வது தான் உண்மையான வாழ்க்கை. அந்த உண்மையான வாழ்க்கையை நீ வாழ நினைத்தால் இன்று முதல் உன் பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு நல்லதொரு வாழ்க்கையை வாழ முற்படு.அப்படி ஒருவேளை நீ மாறியதைக் கண்டு, அவர்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால், நீ விரும்பிய அந்தப் பெண்ணையே கூட, உனக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். எப்படிச் சொல்கிறேன் என்றால், ஒரு பிள்ளையின் சந்தோஷத்தை விடப் பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை என்று நினைப்பவர்கள் தான் பெற்றோர்கள். அதே சமயத்தில் பிள்ளைகள் நினைப்பதை விட பெற்றோர்கள் பலமுறை யோசித்து, அதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்ப்பவர்கள். அவர்களுக்கு நல்லது என்று பட்டுவிட்டால் கண்டிப்பாக ஒத்துழைப்பைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் சொன்னேன்" என்றார் பக்தவச்சலம் ஆசிரியர்.
கோபியின் மனம் சாந்தமடைந்தது, சற்று யோசிக்கவும் தொடங்கியது .பெற்றோர்களை நம்பிக்கையோடு பார்த்தான். அவர்கள் கண்ணில் வழிந்த கண்ணீர் அவன் மனதை மாற்றியது. அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் தெரியாதவனாய் வாழ்ந்ததை எண்ணி வருத்தப்பட்டான் கோபி .
கோபியின் மாற்றம் சந்தானத்திற்கும் பத்மாவிற்கும் மிகுந்த ஆறுதலைத் தந்ததோடு பக்தவச்சலம் ஆசிரியர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.
பக்தவச்சலம் ஆசிரியரிடம் பத்மாவும் சந்தானமும்" நீங்கள் என் மகனுக்கு மட்டும் அறிவுரைக் கூறவில்லை, எங்களுடைய பெற்றோர்களை நாங்கள் உணர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பினைத் தந்தீர்கள்.மிக்க நன்றி ஐயா!" என்றனர் கண்ணீர் சிந்தியபடி.
"கோபி மிகவும் நல்லவன். இல்லையென்றால் உடனே மனம் மாறி இருக்க மாட்டான்! எந்தப் பிள்ளை அறிவுரைக் கேட்டுத் திருந்த நினைக்கிறதோ, அந்தப் பிள்ளை வாழ்க்கையில் கண்டிப்பாக நல்ல நிலைமைக்கு வருவான். உங்கள் பெற்றோர்கள் உங்களை நன்முறையில் வளர்த்திருக்கிறார்கள். ஆதலால் தான் நீங்கள் உங்கள் பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து இருக்கிறீர்கள். நீங்களும் பிள்ளை மீது நம்பிக்கை வையுங்கள். இக்காலப் பிள்ளைகளும் பெற்றோர்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை! பெற்றோர்களும் பிள்ளைகளின் மீது நம்பிக்கை வைப்பதில்லை. அதனால் உண்டாகும் பிரச்சனைகள் தான் இன்று குடும்பங்களையே துண்டுத் துண்டாக்கிக் கொண்டிருக்கின்றது. அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடு தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றது! நாம் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதைவிட நல்லதைச் செய்ய, நாமும் துணை நிற்போம்! என்ற எண்ணம் அனைவருள்ளும் ஏற்பட்டால், குடும்பங்கள் குழப்பமின்றி இயங்கும்!" என்று கூறிவிட்டு கிளம்பினார் பக்தவச்சலம் ஆசிரியர்.
முனைவர் சீனு. தண்டபாணி,
தமிழ்த்துறைப் பேராசிரியர்,
சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி- 4 .
கைபேசி : 9025495244
மின்னஞ்சல் :seenudhanda@gmail.com