REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sudha Thirunarayanan Thirunarayanan - India

Entry No: 

157

தமிழ் கதை (Tamil Kadhai)


Title : *வாழ்வின் புரிதல்*

"சுலோச்சனா, சம்பந்தி போன் பண்றார்... வந்து பேசு" என்று என்னை அழைத்தார் மாதவன், என் கணவர். நான் வெடுக்கென்று இளக்காரமாக தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டேன். பஞ்சாபி சம்பந்தியோடு என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. சம்பந்தி மாமிதான் பஞ்சாபி. மாமா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான், மணிகண்டன். எங்கள் பெண்ணுக்கு மாமனாராக போகிறவர்.
எனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை விட சம்பந்தி மாமி பற்றிய கற்பனை தான் அதிகமாக நான் செய்து வைத்திருந்தேன். ஒரே பெண்ணான நான் புகுந்த வீட்டிலும் ஒரே நாட்டுப் பெண் ஆனேன். வார்த்தைகளை அளந்து மிகக்குறைவாக பேசும் குணமுடைய என் கணவருக்கு,லொட லொடவென்று பேசும் என் வம்பளப்புகளில் என்றுமே ஆர்வம் இருந்ததில்லை. எங்களுக்குப் பிறந்த ஒரே பெண் தீபா அப்பாவைப் போலவே இருந்தாள். மாமியார் மாமனார் கெடுபிடி எல்லாம் ஓய்ந்து 55 வயதுக்கு தான் நான் சுதந்திரம் ஆனேன். ஹையா, பொண்ணுக்கு கல்யாணம் ஆனா சம்பந்தி மாமி வருவா, சேர்ந்து சினிமா டிராமா கச்சேரி கோவில் எல்லாம் போகலாம், வளவளன்னு பேசலாம், அப்படி எல்லாம் நிறைய மனக்கோட்டை கட்டி வைத்திருந்தேன். பெண் காதலில் விழுந்ததால் என் கோட்டை எல்லாம் தூள் தூளாயிற்று. தீபாவை ரிசர்ச் செய்ய டில்லிக்கு அனுப்பியது தப்பா போயிற்று. ஹரி கிருஷ்ணனின் மையலில் விழுந்தாள். என் கணவருக்கு எல்லாம் ஓகே. எனக்குத்தான் சுத்தமாக எதுவுமே பிடிக்கவில்லை.
ஆனால் சம்பந்தி வீட்டாரை பார்க்க சென்னையிலிருந்து தில்லி வந்தாச்சு. வீடியோ காலில் ஹர்ஜித் கவுர், வரப்போகும் சம்பந்தி புன்னகையுடன் கூறினாள். "தேர் மத் கர்ணா. காடி ஆயேகி". என்ன சொல்கிறாள் இவள், கர்ணன் என்ன குல தெய்வமா? சென்னையில் இருந்து கிளம்பும் போதும் இதே தான் சொன்னாள். மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டு விட்டேன். என் பெண் கூறியிருந்தாள். "ஹரிகிருஷ்ணன் அப்பாவோட ஃபேக்டரிய போய் பாரு, அசந்து போயிடுவ " 'ஆமாம் இரும்பு பட்டறையை என்ன பார்வை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
ஆனால் இப்போது அங்கு தான் முதலில் போகிறோம். "ஆப்கேலியே " என்ற பலகை எங்களை வரவேற்றது. உங்களுக்காக என்று அர்த்தமாம், மணிகண்டன் கூறினார். சாதாரண பட்டறை என்று நான் நினைத்து நுழைந்த அந்த சிறிய ஃபேக்டரி அசாதாரணமான கலை கோயிலாகக் காட்சியளித்தது. மிக மெல்லிய இரும்பு கம்பிகளால் கீ செயின்கள், சாவிக் கொத்துக்கள் அதுவும் அழகழகான கிளி மைனா புறா குருவி போன்ற வடிவங்களிலும், தெய்வ உருவங்களிலும் உருவாக்கப்படும் ஓர் சிறிய தொழிற்சாலை. ஹைலைட், தொழிற்சாலையில் பணி புரிபவர்கள் அனைவரும் பெண்கள், ஏதோ ஒரு விதத்தில் மாற்றுத்திறனாளிகள். மணிகண்டன் எல்லோரையும் அறிமுகப்படுத்தினார். அங்கிருந்த எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பும் சுறுசுறுப்பும் தவழ்ந்தது. ஒருவருக்கு பேச முடியாது, ஒருவருக்கு காது கேட்காது, மற்றொருவரால் நடக்க இயலாது, ஆனால் எல்லோரிடமும் காணப்பட்டது புன்னகையும் பொறுமையும். ஆண்கள் இருவரும் பேசியபடி வந்தனர். நான் வாயடைத்துப் போய் பேசாமல் வந்தேன்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தோம். ஹர்ஜித் கவுர் "ஆயியே" என்று எங்களை வரவேற்றாள்.
டேபிளில் தட்டுப் போட்டு ஆலு பரோட்டாவும் விழுது நெய்யும் பரிமாறப்பட்டது. சாப்பிடுங்கள் என்று உபசரித்தாள்.
நான் ஹேண்ட் பேக்கிலிருந்து ஊரிலிருந்து எடுத்து வந்த புதிதாக வாங்கிய மத்தை அவளிடம் கொடுத்தேன். எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை. "மத்து மத்துன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தாங்களே" என்றேன். என் கணவர் குபீரென்று சிரித்தார். "மத் அப்படின்னா டோன்ட் அப்படின்னு அர்த்தம். தாமதம் பண்ணாதீங்கன்னு சொன்னாங்க" என்று விளக்கினார். எனக்கு வெட்கமாக இருந்தாலும் பஞ்சாபி சம்பந்தியிடம் இன்னொரு விஷயம் கூற விரும்பினேன். அவள் கைகளைப் பற்றிக்கொண்டு தமிழிலேயே கூறினேன் "உங்க ஃபேக்டரி ரொம்ப பிரமாதம். நம்ம குடும்பமும் உங்க தொழிலாளர்கள் குடும்பமும் ஆலம் விழுது போல் வளரும் " அன்புக்கு மொழி ஏது தடை. ஹர்ஜீத் என்னை புரிந்து கொண்டாள்.