top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Siva Shankar - India

Entry No: 

415

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

எனையிழந்தேன்
---------------------------
ஒண்கதிர் மேற்றிசை ஒடுங்கிட்ட
நேரம்;
தண்ணிளந் தென்றல் தழுவிடும்
காலம்;
பெண்ணொருத்தி என்னருகே
பொருந்தாமை எண்ணி
வெண்மணற் பரப்பில்
வெதும்பினேன் நானும். 1

காளையென் பேரில்
கழிவிரக்கம் கொண்டு
ஆளைத் தேற்றவே வாலைக்
குமரிநீ
கருநீலத் திரைநீக்கிக்
கண்களைத் தாழ்த்தி
வருங்கோலங் கண்டநான்
வாய்மொழி இழந்தேன்! 2

கண்ணுயர்த்தி என்முகத்தைக்
கன்னிநீ கண்டு,
வெண்முகம் சிவக்க வெட்கமும்
கொண்டு,
பொன்மேகத் துகிலுள் பூமுகம்
மறைத்தே
இன்னேரம் போகாமல்
எனையெட்டிப் பார்த்தாய்! 3

காலங் கடந்திடவே நாணந்தான்
விடுத்துக்
கோல முகத்தினிலே குங்கும
நிறம்நீக்கி
ஓலக் கடலருகே ஒன்றியாய்
எனைக்கண்டு
சீலக் குறைவின்றிச் சிறுநகை
செய்தாய்! 4

நிறைமதி யுனைக்கண்டு
நெஞ்செலாம் நாணி,
மறையவே செறிவான
மஞ்சினைத் தேடிக்
கதவிலா அரங்கில்
கண்கலங்கும் மீன்கண்(டு)
இதய மிரங்கிநான் இளகவும்
செய்தேன். 5

கருமைச் சீலைபோல்
காட்சிதரும் கடலிலே
உருகும் தங்கமாய் உன்னிழல்
கண்டு,
வண்ணக் கடலாய் மாறிட
இயலாமை
எண்ணி யெண்ணிநான்
ஏக்கமுங் கொண்டேன்! 6

இணையிலா உன்முகம்
இன்பமாய்க் கண்ணுற்(று)
அணையிலா உன்னழகை
அணைக்கவே எண்ணி,
அலைக்கர மாயிரம் ஆசையாய்
வீசும்
நிலக்கடலின் ஆவல்
நிலைகண்டு நகைத்தேன்! 7

சிரித்தவென் முகத்தைச்
சீற்றமற நோக்கி
வரித்தவெம் பகையொடு
வசைபாட வெண்ணி
ஆங்காரங் கொண்டவ் வாசைக்
காதலன்
ஓங்கார வோசையோ டோவென்
றிரைந்தான்! 8

விண்ணகத் திலேநீ
தண்ணாட்சி செய்தும்
மண்ணகத்து மாந்தன்மேல்
மையல் மேவத்
தங்கக் கதிர்வீசித் தழுவும்
தனியெழில்
மங்கையே, உன்மேல் மயக்கமே
கொண்டேன்! 9

வென்றாய் என்மனத்தை
வெண்மலரே! விண்விளக்கே!
என்றாவ தொருநாள் இறந்திடும்
பொழுதில்
உன்னழ குருவமென்
கண்ணிரண்டி லேந்தி
மண்ணுலகை நானும் மறந்திட
வேண்டும்! 10

---- ஶ்ரீமுஷ்ணம் சிவா.





bottom of page