REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SHANTHI MARIMUTHU - India
Entry No:
434
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்னை எனும் அன்பருவி !
எத்தனை உறவுகள்
நம் மீது எழுதப்பட்டாலும்
உதிரத்தால் உறவாடும் இந்த
ஒரு ஜீவனுக்கு ஈடாகுமா ?
மழலை எனும் கவிதையை
உதிர "மை" கொண்டு எழுத
இயற்கை அனுப்பி வைத்த
இயந்திர கவிஞர் !
விட்டில்பூச்சியாய் அன்று நீ
துன்பத்தில் துவண்டது ---
வண்ணத்துப் பூச்சிகளாய்
இன்பவானில் இன்று நாங்கள்
சிறகடிக்கவா ?
அதன் ஒவ்வொரு
வண்ணமும்
வழிமொழிவது உன்
எண்ணமல்லவா ?
அலாரம் மறந்தாலும் -உன்
அலைபேசி மறவாமல்
என் நாளின் நலம் விசாரிப்பது
உன்னில் அருவியாய்
ஓடுகின்ற வற்றாத
தாய்ப்பாசத்தால் தான் .
உலகின் ஆதாரம் தாய் என்று
உணர்ந்ததால் தானோ ....
மங்கையராய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமென்று
மகாகவியும் சொல்லிச் சென்றான் .
பள்ளிப் பருவத்தில் நீ
பாசம் வைத்தாய் !
பருவ வயதில் என்னிடம்
நேசம் வைத்தாய் !
தாயாகையில் உன்
சுவாசத்தை என்னிடம்
வாசம் வைத்தாய் !
எதிர்பார்ப்பில்லா அன்பை
ஏராளமாய் வழங்கிட -அன்னையே
உன்னையன்றி யாரால்
உலகினில் தந்திட முடியும் ?
மழலையில் மேல் எழ
தூக்கிய உன் கைகள்
மனது சோர்வடையும் போது இன்று
மயிலிறகாய் தலையை கோதுகின்றன !
தாயானவுடனேயே தன் ஆசைகளுக்கு -உள்
தாழிட்டுக் கொண்ட என் தாயே !
உணர்வுகள் கொண்டிருந்தும் எனக்காக -சுய
உயிரிழப்புச் செய்தாயோ ?
உருகுவதில் மெழுகுவர்த்தியாயினும்
என் தாயவள் - என்
உயிரினில் பரவிவிட்ட உயர்த் தீ !
சந்தோசத்தை மட்டுமே
பிரதிபலித்து
துக்கத்தை உள்கிரகிக்கும்
குழியாடி நீயோ ?
உன்னுள் சுமையாய் இருந்த போதும் - பின்
உலகின் சுமையாய் நான் ஆன போதும்
என்னுள் இமையாய் இருந்து காப்பவளே!
மண்ணின் சுமையாய் நான் மாறும் வரை
மனதினில் தியாக யாத்திரை தொடர்வாயோ ?
எதிர்கால ஆசைகளாய் நீ
எண்ணி வந்ததெல்லாம்
எங்கோ புதைந்திருக்க ...
என்
சின்னச்சிறு ஆசைகளுக்கு
சிறகு கட்டிப் பார்ப்பவளே !
உன் கனவுப் பயிரைக்
கருக விட்டு -எங்கள்
வாழ்வில்
வசந்தப் பூக்கள்
மலர விட்டாய் !
தோல்வி கண்டு
துவளாது
எதிர்கொள்ளும் என்
துணிச்சல் –
அன்று உன்
நம்பிக்கை மழையில்
நனைந்ததால் வந்ததுவே!
சுதந்திரப்பாலுடன் சுந்தரத்தமிழ்க் கரைத்து -நீ
புகட்டி விட்டதாலா- இன்று
சுழன்று வரும் சூறாவளியிடமும் என்னால்
சுகம் கேட்க முடிகிறது ?
தியாகநீர் கொண்டே என்னை
தினம் குளிப்பாட்டி வருபவளே !
தீர்க்கமுடியுமோ என்கடனை - உன்
ஒரு துளி உன்னத்திற்கேனும் ?
ஓ ! நீ
என் ஆசைகளுக்கு வரமளிக்க
இறைவனால் வழங்கப்பட்ட -என்
இனிய தேவதை !
என் தேவதையே !
உன்றன் மடிமீது என்
உயிர் பிரியும்
இனிய வரத்தினையும்
இசைந்து அளிப்பாயா ?