top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Rambo Kumar - India

Entry No: 

132

தமிழ் கதை (Tamil Kadhai)

சரி என்று சொன்னது போலதான் இருந்து அந்த மரத்தின் இலைகள் அசைந்தது அவளின் சொல்லுக்கு மறு சொல்

இலை கிளை கொண்டுள்ளதால் அதை மரம் என்றே சொல்லலாம் . பேரெல்லம் எதற்கு ... மரம் அவ்வளவே...
அவளுக்கும் மரம் ...

சுடுகாட்டுக்கு பக்கத்தில் இருந்ததால் பிணங்களின் வாடைகள் ஏற்று ஏற்று அதன் கிளைகள் இறுகிப் போய் கிடந்தது

எல்லா பிணங்களையும் தான்
அழுகல் பிணம் .. ஆரோக்கியமா இருந்து திடீர்னு செத்த பிணம் ... பணத்துக்குச் செத்தவன் . பொண்ணுக்குச் செத்தவன் ..
பார்க்காத பிணங்களே இல்லை அந்த மரத்துக்கு ...

மற்ற மரங்கள் உயிருள்ள மனிதனின் சுவாசத்தை மட்டும் தான் சுவாசத்திருக்கும்
ஆனால் அவளின் இந்த சுடுகாட்டு மரம் இருந்தவன் விட்ட காற்று இறந்தபின் எரிந்தவன் காற்று என எல்லாவற்றையும் சுவாசித்து சுவாசித்து இறுகிப் போய் காலத்தின் சாட்சியாய் இருக்கிறது இதே இவள் முன்னால் ...

இளகியது எதுவும் காலங்களை கடப்பது இல்லை ... இறுகிய இதைப் போன்றதே ... காலங்களின் சாட்சியாய் ... அல்லது காலத்தில் சாட்சியாய்

அவள் என்கின்ற மரகதத்திற்கு இந்த மரம் தான் எல்லாமே

அப்ப புருஷன் புள்ளக்குட்டிங்க...

இருக்குக...
இந்தா ஒரு இருநூறு அடி தூரத்துல ....

நோவு வந்த முன்னாள் குடிகாரபுருஷன் (இப்ப குடிக்க போக முடியல,)
நோவுக்காக காத்திருக்கும் இந்நாள் குடிகார மகன்கள் 2 பேரு ...
குடிகாரனா இருந்தாலும் 2 ஆம்புள புள்ளைக்குத்தான் அடை போட்ருக்கான்னு ஊருக்குள்ள தாயம்மா கிழவி அடிக்கடி சொல்லிக்கும்

மகனுக 17 &18 வயசுதான் 15 வயசுலேயே குடிக்க ஆரம்புச்சுட்டானுவ....
சட்டம் பார்த்து சரக்கு விக்குற சர்க்கார் இல்லையே நமக்கு என்ன பண்ண

படிப்பு வராம பந்தவேலைக்கு போனவங்களுக்கு குடிக்க மட்டும் பழகி வைச்சுருச்சு ... இந்த சர்க்கார்

உன் புள்ளக குடிக்குறதுக்கு சர்க்காரை ஏண்டி குறை சொல்றன்னு யாராவது மரகதத்தை கேட்டா
முக்குக்கு முக்கு கடை தொறந்து வைச்சா ...
மோப்பம் புடிக்கத்தான் செய்வானுகன்னு பதிலுக்கு பதில் சொன்னாலும்
உள்ளுக்குள்ள அழுதுக்குவா...
தினமும் அந்த மரத்துக்கிட்ட வந்து புலம்பிக்குவா...

மத்த மாமியா மாதிரி இல்ல மரகதத்துக்கு .. மாமியா இருக்குற வரை ஒத்த குறை கிடையாது

புருஷன் காரன் கூட அப்ப முச்சூடும் குடிக்குறவன் கிடையாது ...

புள்ளைக 2,3 வயசுல பின்னாடி புழக்கடையில சாமத்துல விழுந்தவ தான் ஒரு வாரம் கர் கர்னு இழுத்துக்குட்டு இருந்து ஒரு வெள்ளிக்கிழமை மகராசி போய் சேர்ந்துட்டா....

சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போற வழியில அந்த பிணத்தை ஏதோ ஒரு காரணத்துக்குக்காக அந்த மரத்து முன்னாடி வைச்சு திருப்பி தூக்கிட்டு போனதா ஒரு தகவல் கேள்விப்பட்டதுல இருந்து அந்த மரத்துக்கிட்ட பேச ஆரம்பிச்சா புலம்ப ஆரம்பிச்சா ... அழுக ஆரம்பிச்சா .. சிரிக்க ஆரம்பிச்சா இப்படி எல்லா ஆரம்பமும் அந்த சம்பவத்துக்கு பின்னாடி தான்

பொதுவா சுடுகாட்டுக்கு பொம்பளைக போக மாட்டாங்க
அந்த மரம் சுடுகாட்டுக்கும் வீட்டுக்கும் நடுவுல ... அங்கிட்டு 200 மீட்டர் ... இங்குட்டு 200 மீட்டர்
மரகதத்தை பொறுத்த வரை வீடும் சுடுகாடும் தூரம் மட்டுமில்ல சூழ்நிலையும் ஒண்ணு தான் ..

மாமியாக்காரி நல்லா பார்த்துக்குட்டுருந்த காலத்துல ஏதோ பிரச்சனையில புறந்த வீட்டை எதுத்து பேசினதால .. மாமியா காலத்துக்கு அப்புறம் அவுக கூடயும் அண்ட முடியல

10 ,12 வருசமா ஒத்த ஆளா அதுவும் பொட்டை ஆளா . இருக்குற கொஞ்சூண்டு நிலத்தையும் பாதுகாத்து கடனை வாங்கி கடலை போட்டு ... கடலை வித்து கடனை அடைச்சு ... மேற்கொண்டு கூலி வேலை ... கரும்பு காட்டு வேலை ... 5 வருசத்துக்கு ஒரு முறை தேர்தல் வேலை ..ன்னு எல்லாமே பார்த்து பார்த்து தான் இந்த குடும்பத்தை பார்த்துக்குட்டுக்கா மரகதம்

ஊரே சொல்லும் மரகதம் தேர்தல்ல நின்னா பஞ்சாயத்து தலைவியாவே ஆய்டும்னு
அந்த அளவுக்கு ஊர்ல எது நடந்தாலும் மரகதம் அங்க முன்னாடி நிப்பா ...
எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுவா ...
அந்த முன்னாடி நிக்குற பழக்கம் தான் அவள பொம்பளையா மட்டும் பார்க்காம இருக்க வைக்குது இந்த ஊரு ஆம்பளைகளை

மரகதத்துக்கு எதுவும் தேவையில்ல .. அன்னைக்கு பொழைப்பு . அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் குடிக்க கஞ்சி ....புலம்புறதுக்கு அந்த பேரில்லாத மரம் இது போதும்

நான் சாவுற வரைக்கும் உங்க மூணு பேருக்கும் கஞ்சி ஊத்திருவேன் .. நான் செத்ததுக்கு அப்புறம் நீங்க உங்களை பார்த்துக்கவாவது ஒழுங்கா இருங்க ன்னு தான் குடும்ப ஆம்பளை மூணு பேருககிட்டேயும் அடிக்கடி சொல்லுவா ...

பொம்பளை சொல்லு ஆம்பளை காதுக்குள்ள போயிருந்தா தான் எந்த இதிகாசமும் இருந்துருக்காதே ...

அதனால தான் மரத்துக்கிட்ட புலம்ப ஆரம்பிச்சா ...
மாமியா செத்த அந்த வெள்ளிக்கிழமைக்கு அடுத்த செவ்வாய் கிழமை ஆரம்பிச்ச பழக்கம் இன்னைக்கு வர தொடருது

மனுச பயலுவலுக்கு பழக்கம் தான் எப்படில்லாம் வருது ....
முதல்ல சும்மா ஆரம்பிக்கிறது . எதேச்சையா அது மறுநாளும் நடந்தா .. மூணா நாத்து நம்ம அதை தேட வைக்கும்

பழக்கம் பழக்கமாகி நம்மளோட ஒண்ணுக்கு ஒண்ணா பழக்கமாகி ...

அப்புறம் அந்த காரியத்தை செஞ்சாதான் நல்லது நடக்கும்னு மனசை நம்பவைக்கும்

எந்த நல்ல காரியத்துக்கு போகிறதுக்கு முன்னாடி அந்த பழக்கத்தை செஞ்சா தான் நல்லதுன்னு நினைக்க வைக்கும்

அப்படியே அது நம்மளை அடிமையாக்கி நாம பழக்கம் சொல்றத கேட்க ஆரம்பிச்சு றுவோம்.

அது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமான்றத பொறுத்து நம்ம அடையாளமே மாறிப் போகுது

அந்த பழக்கம்தான் அதே மாதிரி தான் மரகதம் அந்த மரத்துக்கிட்ட பேசி பேசி 4வது ஆம்பளையா .. இல்ல ஒத்த பொம்பளைக் கூட்டாளியா .. ஏதோ ஒரு உறவுக்குள்ள சேர்த்துக்கிட்டா

அவளுக்கு எப்போ வீட்டுக்குத் தூரம்ன்றது கூட இப்போ அந்த மரத்துக்குத்தான் தெரியும்
வீட்டுல மூணு ஆம்பளைக பின்ன வேற யாருக்குத் தெரியப் போகுது

ஊருக்குள்ள எல்லாமே முன்னுக்கு நின்னாலும் தன்னோட சொந்த கதை சோகக்கதை யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைப்பா
ஆனா அந்த ஊருக்கு எல்லாமே தெரியும் . அந்த மரத்துக் கூட தான் இவ குடும்பம் நடத்துறான்னு கூட பேசும்

இப்படி தினம் தினம் காலையிலேயோ சாயங்கலமோ மட்ட மத்தியானமோ .. இந்த நேர முன்னு இல்லை எப்ப தோணுதோ அப்பல்லாம் மரத்துக்கிட்ட வந்துருவா

ஊருக்குள்ள எந்த சாவுன்னாலும் அந்த மரத்தை தாண்டி தான் எடுத்துட்டு போகணும் பிணத்தை....

எல்லா பிணத்தையும் பார்த்ததாலயோ .. இல்ல வீட்டு கவலை முத்திப் போனதாலேயே என்னவோ அவ கண்ணீர் விட்டு இந்த ஊரு பார்த்ததே யில்லை...அந்த மரத்தை தவிர

மரகதமும் ஒரு கல்லு தானே

மரகதம் தன்னோட உடல் தேவையை ரகசியமான குரல்ல அந்த மரத்துக்கிட்ட சொல்லிட்டுருக்கும் போது தான்
மரகதம் ன்னு குரலு கேட்டுச்சு அவளுக்கு
மரம் தான் பேசுதா இல்ல நம்ம மனசு தான் பேசுதான்னு ஒரே குழப்பம்

மறுபடியும் மரகதம் ன்னு கூப்பிடற மாதிரி குரலு...

நம்ம தேவையை மரம் புரிஞ்சுகிட்டுச்சோ ன்னு வெக்கம் வெக்கமா வந்துச்சு அவளுக்கு ...

வெக்கப்பட்டுக்கிட்டு இருக்கும் போது தான் மறுபடியும்
மரகதம் என்னா வெட்கப்பட்டுறுக்க
இங்க பாரு ன்னதும்
இடது பக்கம் எட்டிப் பார்த்தா பக்கத்து வீட்டு இசக்கியம்மா நிக்குதா

என்ன டின்னு பார்வையாலயே கேட்டா
மரகதம்

உன் புருசனுக்கு அங்க இழுத்துக்கிட்டு கிடக்குது... நீ இங்க நின்னு இந்த மரத்துக்குட்ட வெட்கப் பட்டு இருக்க ....வெரசா வா ... அப்படி என்ன தான் இருக்கோ அந்த மரத்துக்கிட்ட மனுசாள்ட்ட இல்லாததது ... புலம்பிட்டே

இசக்கியம்மா முன்னாடி ஒட ... இவ பின்னாடியே ஒட்டமும் நடையுமா வந்து சேர்ந்தா வீட்டுக்கு ...

வர்றதுக்கு 2 நிமிசத்துக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டாரு மரகதம் வீட்டுக்காரரு...



வீட்டுக்குள்ள வந்தவ
புருவுன் பொணத்தை பார்த்தா .. ஒரு நீள பெஞ்சை ஒத்த ஆளா தூக்கிட்டு வந்து நடுவுல போட்டா ... ஒரு பழைய போர்வை . ஒரு பழைய தலவாணி .. எடுத்து அந்த பெஞ்ச மேல போட்டா .. 2 இளந்தாரியை கூப்பிட்டு புருஷன் பொணத்தை பெஞ்ச மேல எடுத்து வைக்கச் சொன்னா ... ஒரு நெல் உழக்கு அதுக்கு மேல. ஒரு கை விளக்கு எடுத்து தலைமாட்டுல வலது பக்கம் வைச்சா . ஒரு வேட்டித்துணியை நாடாக்கணக்கா கிழிச்சி வலதுகால் இடது கால் கட்டுவிரலு , 2 காலையும் சேர்த்து கட்டினா ... நாடியை தலையோடு சேர்த்துக் கட்டினா ஒரு மூலையில குத்த வைச்சவ அதுக்கு அப்புறம் புருசன் பக்கத்துல கூட போகலை...

ஒரே இறுக்கமா உட்கார்ந்துருக்கா .. அந்த மரத்தோட இறுக்கம் இவளுக்குள்ள இறங்குன மாதிரி ...

தகவல் கேட்டு ஊரே கூடியிருச்சு..
சும்மாவே குடிப்பானுவ
புள்ளைக 2 பேரும் ... இப்ப கேட்கவா வேணும் அப்பன் செத்த துக்கம் ...
குடியோ குடி ....

மரகதம் தாய் வீட்டுலல்லாம் தாக்கல் சொல்லி எல்லோரும் வந்தாச்சு


ஊர் மொத்தமும் பாவப்பட்டு சாவு வேலை பார்த்துட்டுருக்கு ...
மகனுக குடிச்சுட்டு சலம்பிட்டுருக்கானுவ
மரகதம் மூலையில குத்த வைச்சுருக்கா ...


மரகதம் அழுகாம இருக்குறத ஊரே 2 விதமா பேசிச்சு

புருஷன் செத்தா பொண்டாட்டி கண்ணுல ஒரு 2 சொட்டு கண்ணீர் கூட வா வராதுன்னு ஒரு விதமாவும்

புருசனா அவன் என்னைக்கு நடந்துருக்கான் ...நல்லா ஆரோக்கியமா இருக்கும் போது குடிச்சே அவன் சம்பளத்தை எல்லாம் அழிச்சான் ..
படுக்கைக்கு போன பின்னாடி மருந்து மருந்து ன்னு இவ சம்பாதிச்சதையெல்லாம் அழிச்சான் ...

சுகம்னா 2 புள்ளக மட்டும் தான் அவனால ...

அந்த புள்ளைகளும் சரியில்ல ... அவ என்ன செய்வா ..
அழுகுறது எல்லாம் எப்பவோ அழுது முடிச்சுட்டா இப்ப எங்க இருக்கும் கண்ணீரு..முக்கு கிணறு மாதிரி தூர்விட்டு போச்சு அவ கண்ணுன்னு ஒருவிதமாவும் பேசுச்சு

2 விதமும் நியாயமா பட்டுச்சு இன்னும் கொஞ்ச பேருக்கு ...

எல்லா சடங்கும் முடிஞ்சு புணத்தை தூக்கப் போறாக...
மகனுக நீர்மாலை எடுத்தாச்சு
கோடி துணி போட்டாச்சு
பொம்பளைக எல்லாம் வாய்க்கரிசி போட்டாச்சு ...
எல்லா சடங்குலயும் மரகதம் இருந்தா ...
இருந்தான்னு மட்டும் தான் சொல்ல முடியும்
ஆம்பளைக எல்லாம் சேர்ந்து பிணத்துக்கு பவுடர்லாம் போட்டு தூக்கப் போகயில
மரகதமும் எந்திரிச்சு பிணத்து பக்கத்துல வந்தா ...
அவ அழப் போறான்னு
அதைப் பார்த்து ஊரே விசனப்பட்டு வழிவிட்டு அழுதுச்சு ...
அப்பவும் மரகதம் அழுகல
புணத்தை தூக்கியாச்சு
மூணு சுத்து சுத்தியாச்சு ...
மத்த எல்லாரும் அழுக கல்லு மாதிரி புணத்துக்கு பின்னாடி நடக்க ஆரம்பிச்சா மரகதம்
சொந்த பந்தமல்லாம் அவளை புடிச்சு வைச்சு அழுக ....
உதறிட்டு நடக்க பார்த்தா மரகதம்
அவளை யாரும் விடலை
செத்தது புருஷனா இருந்தாலும் பொம்பளைக சுடுகாட்டுக்கு போகக்கூடாதும்மான்னு எங்கயோ குரல் கேட்டது
அவ சுத்தும் முத்தும் பார்த்தா ..
வெட்டுறதுக்கு நிக்கிற கிடாக்கண்ணு மாதிரி அவகண்ணும் உருளுது மிரளுது . மறுபடியும் நடக்க பார்த்தா
ஒட்டு மொத்த பொம்பளைகளும் அவளை போக விடலை
தடுக்க தடுக்க ...அவ எகிறி
போக பார்க்க பார்க்க ...
ஒரு இழுபறி மாதிரி புழுதி கிளம்ப
அவளை வீட்டுக்குள்ள தூக்கிட்டுப் போங்க ... ன்னு யாரோ சொல்லவும்
பொம்பளைக அத்தனை பேரும் அவளை அலேக்கா தூக்கி விட்டு வாசலிலே வைக்கவும் ..
வாசல் தாண்டி வீட்டுக்குள்ள பாதி உடம்பும் வாசல்ல பாதி உடம்போடயும் விழுந்தா

அப்பதான் முத முறையா
ஒ.....ன்னு அவ கதறி அழுததை அந்த ஊரு பார்த்துச்சு ...

அந்த மரத்துக்கும் அது கேட்ருக்கும் ..
இலை அசையுது.......



Rambo kumar

bottom of page