REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Rajini Beulah Shobika - India
Entry No:
433
தமிழ் கதை (Tamil Kadhai)
மாசற்ற அன்பு
மதிய வெயில் மக்களை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. ராகினி தன் குழந்தையோடு கடையிலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாள். குழந்தை இன்பா சுற்றுமுற்றும் பார்த்தபடி கையிலிருந்த இனிப்பையும் தின்பண்டத்தையும் சுவைத்துக் கொண்டே நடந்தாள். திடீரென்று தன்னை யாரோ கவனிப்பது போன்ற உணர்வு தோன்ற திரும்பிப் பார்த்தாள். நடைபாதையில் தன் வயதையொத்த ஒரு சிறுமி மெலிந்த தேகத்தோடும் கந்தல் ஆடைகளோடும் பரிதாபமாக தன்னையும் தன் கையிலுள்ள பதார்த்தங்களையும் பார்ப்பது கண்டு திடுக்கிட்டாள். இதை கவனித்த ராகினி இன்பாவிடம், "அந்தப் பிள்ளைய பாக்காத." என்றவள் அந்த சிறுமியிடம், "ஏய் என்ன வேணும்? போ அந்தப் பக்கம்." என்று விரட்டி விட்டாள். பயந்துபோன அந்த சிறுமி எழுந்து சென்றாள். இன்பாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. "ஐயையோ, அந்தப் பிள்ளை பாவம்! அம்மா இப்படி திட்டி விரட்டிட்டாளே? நமக்கு தினமும் பிஸ்கட், சாக்லேட் எல்லாம் அம்மாவும் அப்பாவும் வாங்கித் தர்றாங்க. அவளுக்கு யார் வாங்கித் தருவா?", யோசித்தவளுக்கு தின்பண்டங்கள் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. அவற்றை உண்ணாமல் கையில் வைத்துக் கொண்டே அச்சிறுமியை ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல பலமுறை தேடினாள். அவள் தென்படவில்லை. " என்ன தேடுற?", ராகினி இன்பாவிடம் கேட்க, "ஒன்னுமில்லயே" கண்களைச் சிமிட்டி சமாளித்தாள். எதிரே தன் சிநேகிதி சந்தியாவை கண்டதும் ராகினி புன்னகைத்தாள். மகிழ்வோடு, " ஏய் சந்தியா, உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு!" இருவரும் நலம் விசாரித்து அளவளாவ ஆரம்பித்தனர். இன்பா மீண்டும் அச்சிறுமியை அங்குமிங்கும் தேடினாள். எதிர்ப்புறத்தில் அவள் இருப்பதை கண்டவள், மெதுவாக ராகினி அறியாவண்ணம் அவளருகே தின்பண்டங்களை வைத்துவிட்டு வேகமாக வந்தாள். " அம்மா, கைக்குட்டை பறந்துடுச்சு அதான் போய் பிடிச்சேன்" என்றவளது கைகளைப் பிடித்துக்கொண்டு ராகினி மீண்டும் சந்தியாவோடு பேச ஆரம்பித்தாள். இன்பா அச்சிறுமியை திரும்பிப் பார்த்தாள். மலர்ந்த முகத்தோடு தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், இன்பாவைக் கண்டு சிரித்தாள். இன்பாவும் மகிழ்ந்தாள். குழந்தைகளின் கள்ளமற்ற சிரிப்பில் மாசற்ற அன்பு மிளிர்ந்தது.