top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

P.Deepa Velu - India

Entry No: 

319

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

எனக்குள்ளும் காதல்

பார்த்தவுடன் காதல்
என்பதில்
நம்பிக்கை இல்லாமலிருந்த
என்னை,
பார்த்தவுடனே
காதல் கொள்ள
வைத்த
என் அன்பானவனே!

உன்னை பற்றி
நான் என்ன சொல்ல?
நீ அழகன் என்பதால்!
உன் மீது காதல் கொண்டேனோ?
நீ அன்பானவன்
என்பதில் மயங்கி விட்டேனோ?
பெண் பார்க்க வந்த அன்று,
அனைவருக்கும் நீ கொடுத்த
மரியாதையை கண்டு
என்னை நான் இழந்து விட்டேனோ?
என்ன தான் காரணம்?
இதுதான் காரணம்,
என்று என்னால்
இன்றுவரை
கணிக்க முடியவில்லை
இத்தனை நாளாய்
காதல் என்றாலே
பிடிக்காமல் இருந்தது எனக்கு!

ஆனால் உன்னை
கண்ட நொடி முதல்
எனக்குள்ளும்
காதல் வந்து
உட்கார்ந்து கொண்டு
ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டது!
இல்லை இல்லை
ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது!
ஆம் அப்படித்தான்
சொல்ல வேண்டும்!
அதுதான் சரி

உன் துணை இருந்தால்,
எத்தனை துயரத்தையும்
கடந்து விடலாம்
என்ற நம்பிக்கையை
உன் ஒற்றை பார்வை
கொடுத்து விட்டதடா
தினமும் நீ என்னை
போனில் அழைக்கும்
நேரத்திக்காக
ஒவ்வொரு நொடியும்
காத்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்காகவே
கடவுள் உன்னை
படைத்தாரோ?
என் அன்பானவனே!
உன் அன்பினால்
என்னை சிறை
பிடித்து விட்டாய்.
உன் ஒற்றை பார்வை
சொல்லிவிடுகிறது
உன் மனதில்
நினைப்பவற்றை!

உனக்கு பிடிக்காதவற்றை
செய்து உன் கோபத்துக்கு
ஆளாகி விடுவேனோ?
என்று அடிக்கடி
என் பேதை மனம்
கலங்குகிறது!
உன் கோபம்
எப்படி இருக்கும்?
என்பதை கூட
என்னால்
கண்டு கொள்ள முடியவில்லை!
ஒருவேளை
உனக்கு கோபமே வராதோ?
இல்லை என்னிடம்
மட்டும்தான் வராதோ?
இதை எப்போதடா
நான் கண்டு கொள்வேன்?
தெரியவில்லையே!

உன்னைப் பற்றிய
சிந்தனைகளிலேயே
மூழ்கிப் போகிறது
என் நாட்கள்!

நான் செய்யும்
ஒவ்வொரு செயலையும்
நாளை உன் வீட்டிற்கு
வந்த பின்பு
இல்லை இல்லை
நம் வீட்டிற்கு
வந்த பிறகு
எப்படிச் செய்வேன்?
உனக்கு பிடித்த மாதிரி
செய்ய வேண்டுமே?
என்று என் மனதிற்குள்
நீதானடா நிற்கிறாய்!

உன்னை
உரிமையோடு டா
போட்டு கூப்பிட
எனக்கு நீ அனுமதி தருவாயா?
என்னவோ தெரியவில்லை!
ஆனாலும் எனக்கு
நானே கொடுத்துக் கொண்டேன்.

என் செல்ல கணவா!
இன்னும் சற்று நாள்
காதலர்களாகவே இருப்போம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்,
காதலோடு மட்டுமே இருக்கும்,
திருமணத்திற்கு முந்தைய
இந்த நாட்கள் இனிமையானவை
நாம் இருவரும்
ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டால்
மட்டும் போதாது
உன்னுடைய குடும்பத்தை
நான் என்னுடைய தாக நினைக்க
சிறிது அவகாசம்
வேண்டும் அல்லவா?

நான் உன்னவள்
ஆகும் நாளுக்காக
ஒவ்வொரு நாளும்
ஒத்திகை பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!

நம்முடைய காதல்,
இன்று போல்
என்றும் இனிமையாக,
பாசத்தோடு ,
பலகாலம் திகட்டாமல்,
இன்புற்று வாழ்ந்திருப்போம்!

Entry No: 

327

தமிழ் கதை (Tamil Kadhai)

தீராக் காதல் இது தானோ


"அமுதன் உங்களுக்கு மகாலட்சுமி பிறந்து இருக்கா" என்று கையில் குழந்தையை கொண்டுவந்து நர்ஸ் கொடுத்தவுடன், அந்தக் குழந்தையை உச்சிமுகர்ந்து ஆனந்தப்பட்டான் அமுதன்.

"சிஸ்டர், நித்யா எப்படி இருக்கா?" என்று குழந்தையின் அம்மாவை பற்றி விசாரிக்க, "அவங்க நல்லா இருக்காங்க" என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார் நர்ஸ்.

அன்று மாலை நித்யாவை அட்மிட் செய்திருந்த ரூமிற்கு வந்த டாக்டர், "உங்க ரெண்டு பேரையும் முதன்முதலா ஹாஸ்பிடல்ல பார்த்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு" என்று சொன்னார்.

"அப்படி என்ன டாக்டர், அந்த நாள்ல விசேஷமா நடந்தது? இவ்வளவு கரெக்டா, ஞாபகம் வச்சிருக்கீங்க?" என்று நித்யாவின் அக்கா ஆச்சரியத்தோடு கேட்டார்.

வாங்க கொஞ்சம் ஃபிளாஷ் பேக் போயி பார்த்துட்டு வந்துடலாம்.

நித்யாவிற்கும், அமுதனுக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லாததால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்து, காரில் சென்று கொண்டிருந்தனர்.

"என்னங்க, டாக்டர் என்ன சொல்லுவாங்க? நம்ம ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டா பரவால்ல. ஒருவேளை பிரச்சனை இருக்குன்னு சொல்லிட்டா, என்னங்க பண்றது?".

"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இருக்காது. நீ மனசை போட்டு குழப்பிக்காத, நித்தி. அப்படியே பிரச்சினை இருக்குன்னு சொன்னாலும், எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும். சரியா? நீ ரொம்ப கவலைப் படாத".

"சரிங்க" என்று சுரத்தே இல்லாமல் பதில் சொன்னாள்.

டாக்டரின் ரூமிற்குள் இருவரும் சென்றனர். வழக்கமாக கேட்கும் சில கேள்விகளை கேட்டு டாக்டர் எழுதிக்கொண்டார்.

"உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் முடிஞ்சிடுச்சி. அதனால உங்க ரெண்டு பேருக்கும் எல்லா டெஸ்டும் நம்ம எடுத்து பார்க்கணும்".

"எந்த டெஸ்ட் வேணாலும் எடுங்க டாக்டர்" என்று சொன்னான் அமுதன்.

நித்யாவுக்கு ஸ்கேன் பாக்கணும், அதனால நீங்க கொஞ்சம் வெளிய இருங்க, என்று டாக்டர் சொல்லவே, அமுதன் அந்த ரூமை விட்டு வெளியே சென்றான்.

நித்யா சற்று தயங்கியபடியே டாக்டரிடம், "டாக்டர் அவருக்கு குழந்தைனா ரொம்ப புடிக்கும். டெஸ்ட்ல அவருக்கு எதுவும் குறை இருந்தா, நீங்க அவர்கிட்ட சொல்ல வேண்டாம். எனக்கு குறை இருக்கிறதா சொல்லிடுங்க. அவர் கிட்ட குறை இருந்தா, அவரால அதை தாங்கிக்கவே முடியாது. அதனால் தான் ப்ளீஸ் டாக்டர்"

"என்னமா நித்யா பேசுற நீ? இன்னும் டெஸ்டே பார்க்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள நீ ஏன் இப்படி எல்லாம் சொல்ற?".

"அதில்லைங்க டாக்டர், உங்க கிட்ட தனியா பேசறதுக்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது சொன்னேன், அவ்வளவுதான். ரிப்போர்ட் எல்லாம் நல்லா இருந்துச்சுன்னா ரொம்பவே சந்தோஷம் தான் எனக்கும்".

"நிச்சயம் ரிப்போர்ட் நல்லதாவே வரும். நல்லதே நடக்கும்னு நம்புவோம். சரியா?".

நித்யாவிற்கு ஸ்கேன் பார்த்தபின்பு, அமுதனை மட்டும் கவுன்சிலிங்காக தனியே வரச் சொன்னார் டாக்டர்.

அமுதன் டாக்டரிடம், "டாக்டர் எங்களுக்கு குழந்தை சீக்கிரம் கிடைக்கணும் அப்படிங்கறது தான் எங்க ரெண்டு பேரோட ஆசையும். ஆனால் இந்த டெஸ்டில் நித்யாவுக்கு எதாவது குறை இருந்தாலும், அவ கிட்ட சொல்லிடாதீங்க. என்கிட்ட குறை இருக்குற மாதிரி சொல்லிடுங்க. ஏன்னா அவ கிட்ட குறை இருந்தா அதை அவளால தாங்கிக்கவே முடியாது. அப்புறம் இந்த விஷயத்தை நான் சொன்னதாக நித்யா கிட்ட சொல்லிடாதீங்க".

இதுதான் அன்னைக்கு நடந்தது...

டாக்டர் சொன்ன விஷயங்களை கேட்டு, அமுதனும், நித்யாவும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நானும் இருக்கேன் என்றேன் குழந்தையும் சிணுங்கியது.

bottom of page