REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Narmadha Subramaniyam - India
Entry No:
220
தமிழ் கதை (Tamil Kadhai)
தலைப்பு - தூரமான வலி
------------
தேவி மற்றும் அவளின் சக பணியாளர் ராகவ் தங்களின் அலுவலகத்திலுள்ள உணவகத்தில் அமர்ந்திருந்து உண்டு கொண்டிருந்த சமயம், தேவியின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வழிந்தது.
ராகவ் பதறி, "என்னாச்சு தேவி, இவ்ளோ நேரம் நார்மலா தானே பேசிட்டு இருந்தீங்க" என்று கேட்டதும், "எவ்வாறு என் வலியையும் வேதனையும் இவரிடம் உரைப்பது" என தேவி மனதில் எண்ணிக் கொண்டிருக்கையில், அவளின் முகத்தில் சங்கடமான பாவனையை கண்ட ராகவ், அவளை பணியிடம் சென்று நிதானமடையுமாறு உரைத்தான்.
தேவி தனது பணியிடத்தின் மேஜையில் தலையை சாய்த்திருக்க, அவளருகில் மாத்திரை கவரை வைத்தவனை, நெற்றி சுருக்கி என்ன என்பது போல் ஏறெடுத்து பார்த்தாள் தேவி.
"இதுக்கு எதுக்கு சங்கடமா ஃபீல் செய்றீங்க தேவி. இது எல்லா பெண்களுக்கும் பார்ட் ஆஃப் லைஃப். என் அம்மாவுக்கும் மனைவுக்கும் இந்த நேரத்துல எவ்ளோ வலி இருக்கும்னு பார்த்திருக்கேன். நம்ம ஆபிஸ் மெடிக்கல் சென்டர்ல கன்செல்ட் பண்ணி என் மனைவிகிட்டயும் கேட்டுட்டு தான் வாங்கிட்டு வந்தேன் தேவி. மாத்திரை போட்டுட்டு நம்ம ஆபிஸ் நேப் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க"
அவனின் செயலில், "எவ்வாறு இது தெரிந்தது" என்பது போல் அவள் பார்க்க, அப்புறம் என் மனைவி இதையும் உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க, "கரை நல்லது. ஹேவ் எ ஹேப்பி பீரியட்ஸ்னு" சொல்ல சொன்னாங்க. டேக் கேர் என்றுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றான்.
-- நர்மதா சுப்ரமணியம்
Entry No:
200
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அத்தான்
--------------
ஒரு வார்த்தை
இத்தனையாய் என்னை
ஏங்க செய்யும்
வெறுமையாய் உணரச் செய்யும்
என அறிந்திருக்கவில்லை நான்!
தனது அன்றாட நிகழ்வுகளை
நிகழ்ந்த நொடிதனில்
நித்தம் புலனத்தில்
என்னிடம் புலம்பிக் கொண்டும்
எடுக்கும் அத்தனை
சுயமிகளையும்
எனக்கு அனுப்புவித்து
நன்றாய் இருக்கிறதாயென
கேட்டுக் கொண்டுமென
அவள் நாட்களின்
இருப்பத்தி நான்கு
மணி நேரமும்
என்னை சுற்றியே
சுழன்றிருக்கும்!
ஆசை, கோபம், சோகமென
இவ்வுணர்வுகள்
அனைத்தையுமே
அத்தான் என்னும் சொல்லில்
விதவிதமாய் தோய்த்தெடுத்து
அன்பு சூழ தான்
வெளிபடுத்துவாள் அவள்!
அதீத கோபத்தில்
அத்தானென இனி
அழைக்க மாட்டேனென
சபதமெடுத்து அவள்
மொழியாது இருந்த
இந்நாளில் உணர்ந்தேன்,
என்னதாய் அவ்வார்த்தை
என்னுள் மாயம்
செய்வித்திருக்கிறதென்று!
-- நர்மதா சுப்ரமணியம்