top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Muneeswaran Muneesh - India

Entry No: 

151

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

புளியமரத்தாள்...!

தூக்கனாங்குருவிக்கூடாய்
தொங்கிக்கிடக்கும்
அவள் துளைக்காதுகளில்
பாம்படங்கள்....

சடைசடையாய்
பழுத்துக்கிடக்கும்
அவள் மரத்தினில்
புளியம்பழங்கள்....

அவளின்
இயற்பெயர் சொன்னால்
சொந்தபந்தம்கூட புரியாமல்
தலைமயிர் சொரியும்!

பட்டப்பெயர்
புளியமரத்தாளென்றால்
நண்டுசிண்டுகளெல்லாம்
ரெண்டுகால்நடுங்க
உடுத்திய ஆடையிலேயே
ஒன்னுக்குப்போகும்!

வெட்டவெளியில்
நிற்கும் மரத்திற்கு
அவள்தான் வேலி!

முட்டக்கண்ணால்
முறைத்திட்டால்
காளியெல்லாம்
அவள்முன் காலி!

கக்காயிருப்பதுபோல்
முக்கால்மணிநேரம்
முக்கிநடித்தாலும்
நக்கித்தின்ன முடியாமல்
நாவில் எச்சிலுடன்
நெடுநாட்கள்
திரும்பியிருக்கிறோம்!

கருவேலமர மறைவில்
புளியங்காய்ப்பறிக்க
புதுத்திட்டம் போடுகையில்
காட்டுவேலைக்குப்போனவளின்
காதில்பட்டு களைவாரியோட விரட்ட
காலிரண்டிலும் காக்காமுள்குத்தி
கடும்வலிக்கொண்டிருக்கிறோம்!

நோயில் கிடந்தாலும்
நோஞ்சான் மகனை
காவலுக்கு வைத்துவிட்டுத்தான்
வாயில் மாத்திரை வைப்பாள்!

நிழலுக்கு ஓடிவரும்
வெள்ளாடுகளுக்கு
நீட்டிப்படுக்க
இடம்கொடுப்பாள்!

நித்திரையிலிருந்தாலும்
கைநீட்டி பழம்பறித்தவரை
"கோனாரே!
இந்தக்குசும்புதான ஆகாதன"
குரலால் எச்சரிப்பாள்!

கண்ணுக்குப்படாமல்
கிளைப்பிடித்து
மேலேறியவனைக்கண்டு
உடைமறைவில் நின்னுக்கிட்டு மூத்திரம்போனவள்
பாதியில் நிறுத்திவிட்டு
பாய்ந்தோடிவந்து
பயத்திலயேவனுக்கு
ரெண்டுக்கு வரச்செய்தாள்!

அக்காளோருத்தி
புளியமரத்தில்
புடவைக்கட்டி
காதல்தோல்வியில்
தூக்குமாட்டி
துடித்தவளை
தூக்கிப்பிடித்து
உயிர்காத்திருக்கிறாள்!

எங்களில் பலர்
உதைப்பழம் பறித்து
அவளிடமுதைப்பட்டிருக்கிறோம்!

பழுத்தப்பழம் பறித்து
பச்சைமட்டையால்
குண்டிப்பழுத்திருக்கிறோம்!

தீட்டுப்பட்ட
வீட்டுப்பொம்பளைங்க
காட்டுப்பக்கம் ஒதுங்கும்போது
தொட்டுவிட்டால்
மரம்பட்டுபோய்விடுமென்று
கருக்கலிலும் காவல்
காத்திருக்கிறாள்!

உச்சிவெயிலுக்கு
மச்சிவீட்டில்
ஆச்சி புளியமரத்தாள்
அசந்துறங்கிருப்பாளென்று
எச்சில்வாயோடுச்சென்ற
எங்களுக்குக்கெல்லாம்
மரத்தின்மூட்டின்கீழே
மாவிசக்கியாய்
காட்சியளித்தாள்!

புள்ளைத்தாச்சி
பூமணி மைதினி
புளியம்பழம் தின்னும்போது
"நீளப்புளிய
நிறையத்திங்காதடி
நீளக்குஞ்சானோடு
புள்ளப்பொறந்திருமடி"
என சிலநேரங்களில்
நீலப்பட நைய்யாண்டியும்
செய்திருக்கிறாள்!

புருஷன்
புள்ளைக்குட்டி
பூமி
சாமி
எல்லாமேவளுக்கு
புளியமரம் தான்!

ஒருநாள்
பழம் பொறுக்கும்போதே
கிழம் அவள்
விழிகள் மேல்செருகி
வியர்வை உடல்பரவி
மரத்தடியிலயே
மல்லாக்காப்படுத்து
மரணித்துபோய்விட்டாள்!

மழைக்காலங்கள் முடிந்து
வெயில்காலங்கள் தொடங்கிய
ஒரு அதிகாலையில்
அவளினைப்புதைத்த
இடத்தினை ஏதேச்சையாக
பார்த்தேன்!

மரத்தடிச்சுற்றிலும்
புளியங்கன்றுகளாய்
முளைத்திருந்தாள்
புளியமரத்தாள்....

8940331912.





bottom of page