REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
mathi yalagan - India
Entry No:
451
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
துடித்துக்கொண்டிருக்கும் என் இதயம்
நொடிக்கு நொடி உன்னை
பெயர்சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறது
கரையிடம் தனது
காதலை தெரியப்படுத்த
அலுத்துக் கொள்வதில்லை அலைகள்
உன் பாதம்படும்
ஒவ்வொரு தடவையும்
புனிதப்படுகிறது பூமி
உனக்கு நிழல்தர
மேகம் சிலையாகிறது
பெளர்ணமியன்று வெளியில்
சென்றுவிடாதே உன்னையும்
சேர்த்து பூமிக்கு இரண்டு நிலவென்று
முடிவெடுத்துவிடுவார்கள்
மின்னல் என்பது
உன்னை நனைப்பதற்கு முன்
வானம் எடுக்கும் புகைப்படமா?
காதல் என்பது
மந்திரச் சொல்தான்
அது என்னை கவிஞனாக்கிவிட்டதே
உன் ஓரவிழிப்பார்வை
கல்லைக்கூட கடவுளாக்கிவிடுகிறது
விடியலில் நான் குயிலாக
கூவிக்கொண்டிருக்கிறேன்
அதற்கு அர்த்தம் புரிந்தும் இரக்கமற்ற
கல்லாக நீ இருக்கிறாய்
வெவ்வேறு வானத்தில்
பறந்த இரண்டு
காதல் பறவைகளுக்கு
அடைக்கலம் அளிக்கும்
விசாலமான உள்ளம்
இங்கு யாருக்குத்தான் இருக்கிறது
வண்ணத்துப்பூச்சியின் தடத்தை
பின்தொடர்ந்தால் அவள் வீட்டை
சென்றடையலாம்
ஒருமுறைதான் இறப்பென்றார்கள்
நான் பலமுறை இறந்துவிட்டேன்
எப்படி என்னை நீ
உயிர்த்தெழ வைத்தாய்
இருகரைகளுக்கு மத்தியில்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
காதல் கடலில் சங்கமமாக
இந்தப் பனித்துளி
நீ கோலமிடும் அழகை
பார்த்து ரசிக்கவே
வாசலில் காத்துக்கிடக்கிறது
விலகி இருந்தாலும்
நெருங்கியே இருக்கிறோம்
உன் சுவாசக்காற்றை
நான் சுவாசித்துக் கொண்டு
நீ கறுப்பு குடை பிடித்து
எதிர்ப்பை தெரிவித்ததால்தான்
வானம் மழையை நிறுத்தியது
நீ எப்போதா கடந்து
சென்றுவிட்டாய்
மல்லிகையின் வாசம்
பலமணிநேரங்களாய்
கமழ்ந்து கொண்டிருக்கிறது
நீ நடந்து செல்லும்
பாதையெங்கும் உன் மெளனத்தால்
எனது இதயம்
உடைந்து கிடக்கிறது
சீதையின் கண்கள்
இப்பிறவியில் ராமனைச்
சந்திக்காதா
கோகுலத்தில் சீதையாக
அவள் காலம்தள்ளிவிட
முடியுமா என்ன
காதல் சாபமென்றால்
நான் எத்தனை
பிறவி வேண்டுமானாலும்
என்னவளுக்காக எடுப்பேன்
இந்த காதல் ஏக்கத்தால்
வாடிப்போனவனை எங்கேயாவது
நீங்கள் காண நேர்ந்தால்
வேறெதையும் உங்களிடம்
நான் எதிர்பார்க்கவில்லை
ஒரு புன்னகையை பரிசளியுங்கள்
அதுபோதும் எனக்கு!
Entry No:
475
தமிழ் கதை (Tamil Kadhai)
காதல்
காதல் எல்லோருக்கும் வாலிபத்தில் வந்து போகும் ஒன்றுதான். அவளைப் பார்த்தவுடன் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். தூங்கப் பிடிக்காது பித்துப் பிடித்தது போலிருக்கும். ஆத்மாவை இழந்த ஜீவனைப் போலத்தான் அலைவோம். அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த மலர், பஸ்டிக்கெட், மயிலிறகு, வளையல், ஹேர்பின் என அவளது நினைவாக ஒவ்வொன்றையும் பத்திரப்படுத்தி இருப்போம். முதன்முதலாக ஆணுக்கு சிறகுகள் தருவது காதல்தான். சில பேருக்கு அதுவே டேக்ஆஃப் ஆகவும் அமையலாம். காதலை உணராதவர்கள் கண்களுக்கு கடவுள் தென்படமாட்டார். அவள் மீது அதீதமாக அக்கறை எடுத்துக்கொள்வோம். அவள் நம்மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வாள். எல்லோரும் காதலில் ஜெயம் காண்பதில்லை. சிலர் போராடப் பயந்து பின்வாங்குவார்கள். சிலருக்கு காதலிக்கும் பெண்ணிடம் விருப்பத்தை தெரியப்படுத்தவே தைரியம் இருக்காது பின் எப்படி ஜெயமாகும். காதல் தோல்வி என்பது கப்பல் கவிழ்ந்தாற் போல் துக்கத்தைத் தரும். இனிமேல் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கே நம்மை கொண்டுபோய் விட்டுவிடும்.
மத்திம வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு எல்லாவற்றையும் மறந்து ஓடிக்கொண்டிருப்போம். ஏதோவொரு சமயத்தில் கல்லூரியில் பயிலும் போது வெளிவந்த சினிமாவிலிருந்து எதேச்சையாக பாடல் ஒலிக்கும்போது முதல்காதல் நினைவடுக்குகளிலிருந்து எட்டிப் பார்க்கும். அவள் சாயலிலுள்ள பெண்களைப் பார்க்கையில் மனம் தரையில் விழுந்த மீனாக துள்ளும். வாழ்க்கை காயம்பட வைக்கிறது. மேலும் மேலும் சுமைகளை நம்மீது ஏற்றுகிறது. உடம்புக்கு சரியில்லாத போதுதான் இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சற்றே விடுபடுகிறோம் ஏதோவொரு விசைக்கு ஆட்பட்டு அந்த டிரங்க் பெட்டியை திறக்கிறோம். அந்த தூசி படிந்த கறையான் அரித்த பழைய நோட்டில் காய்ந்த பூ, பஸ்டிக்கெட், மேற்பூச்சி உதிர்ந்த வளையல், மயிலிறகு மீண்டும் இவனை சிலுவையில் அறையும்.
வாலிபம் கடந்து போய்விட்டது நினைவுகளாக சிலுவையைக் கொடுத்துவிட்டு. ஏதேதோ இடர்பாடுகளால் கஷ்டங்களில் அல்லாடும்போது காதல் மயிலிறகென மேனியை வருடிப் போகும். ஆனால் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை அல்லவா. இளைப்பார தாய்மடி தேவைப்படும் போது தான் சபிக்கப்பட்ட ஒருவனாகவே அவன் தன்னை கருதுவான். காதல் என்ற இந்த வசீகரமான சொல்லுக்கு பின்னால் எவ்வளவோ துயரக்கதைகள் பொதிந்துள்ளன. கடலில் இறங்கும்போது வசீகரிக்கும் அலைகள் நம்மையே இழுத்துச் செல்வதில்லையா? காதல் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் மரணஓலமே கேட்கிறது. நீதிதேவதையைப் போல காதல்தேவதைக்கும் கண்ணில்லைதான். கடவுளுக்கு தெரியும் இணையை இழந்தவுடன் இறந்துவிடும் அறுதலிப்புறாக்கள் தான் காதலர்கள் என்று. காதல் உன்னை தொலைக்கவே பார்க்கும். உன் காதல் உண்மையானது என்றால் அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும்போது கூட பிடிக்க கிளைகள் தென்படும். காதல் ஒரு தெய்விகம், கல் உளியால் சிலையாக தன்னைத்தானே செதுக்கிக் கொள்வது போலத்தான் அது. வலிகள் பொறுத்தால் தானே தெய்வச் சிலையாக முடியும். வாழ்க்கையில் எப்போதும் வசந்தகாலமாகவே இருக்காது. ஆனால் நினைவுப் பறவை ஏனோ வசந்தகாலத்தையே வட்டமிடும்.
மணி இரவு பன்னிரெண்டு. சரி இத்தோடு முடிப்போம் என்று பேனாவை மூடி வைத்தான் வசந்த். காதலர் தினத்துக்காக சொல்வெளி பத்திரிகையிலிருந்து அவனை காதலைப் பற்றி எழுதிக் கேட்டார்கள். தான் என்னென்னமோ எழுதப் போய் அதிகமாக சுயபுராணம் பாடிவிட்டேனா என நினைத்தபடி படுக்கையில் விழுந்தான் வசந்த்.