REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
MASSILAMANY GOVINDASSAMY - India
Entry No:
477
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
மனவிலங்கு
உறைந்துவிட்ட பனியைப்போல் உறவெல்லாம் இறுக லாச்சு
ஒட்டாதா உறவென்று உளம்கிடந்து உருக லாச்சு
சிறைவைத்த மானைப்போல் சிறுவர்கள் வாழ்க்கை யாச்சு
சிட்டாகப் பறக்கின்ற ‘இறக்கை’யெல்லாம் உடைந்து போச்சு!
இறைக்கொள்கை திசைமாறி உணர்ச்சிக்குத் தீனி யாச்சு
எப்போதோ புதைப்பதற்கு இப்போதே தோண்ட லாச்சு
‘நிறைவான வாழ்வெ’ன்றால் பணமென்று அர்த்த மாச்சு
நெடுந்தாரம் ஓடிடினும் நிற்குமிடம் தொடக்க மாச்சு!
மணமுடித்த சிலநாளில் மனவிலங்கு மாட்டு கின்றார்
மதியுரைக்க ஆளின்றி மனத்திரையைப் பூட்டு கின்றார்
மனத்திற்கும் உறவுக்கும் தொடர்பின்றிக் காட்டு கின்றார்
மணமொத்த காதலையே மறுநொடியில் மாற்று கின்றார்
கணப்பொழுது காக்கவைக்கும் காரணத்தால் நீங்கு கின்றார்
கண்கவரும் ஒருபரிசை மறந்ததற்கும் நீங்கு கின்றார்
கணக்கெடுக்க முடியவில்லை காரணங்கள் நீளு திங்கே
கண்டதற்கும் கோபமென்றால் காலமெல்லாம் வாழ்வ தெங்கே?
மனப்பொருத்தம் அத்தனையும் அனைவருக்கும் கூடல் கட்டம்
மனமுறிவே தீர்வுயெனில் மனிதகுல வாழ்வே நட்டம்!
அனலாகி அகிலமெலாம் கொதிப்பதைநாம் அறிய வேண்டும்
அன்றாடம் புதுப்பிறவி எடுத்தாற்போல் உணர வேண்டும்
மனம்விட்டுக் கொடுத்துறவை வளர்ப்பதற்கு முயல வேண்டும்
மாற்றாரும் நல்லவர்தான் என்றுமனம் எண்ண வேண்டும்
சினம்அறுத்துக் குணமென்னும் குன்றேறி நிற்க வேண்டும்
சீர்பெற்று நாடுயர நாமுயர்ந்து காட்ட வேண்டும்!
- BY GOVI MASSILAMANY