REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KEERTHANA SELVAM - India
Entry No:
103
தமிழ் கதை (Tamil Kadhai)
காதல் பார்வை
அன்று....
என்றும் போல் அலுவலகம் ஆரம்பமானது...
முதற்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டு இன்பாவைப் பார்க்க தயாராகினான் நம் கதையின் கதாநாயகன் செழியன்...
பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் போதுமான வருமானம்...
வெளியூரிலிருந்து சென்னை வந்து பணிபுரியும் சராசரி இளைஞனின் பிம்பம்தான் செழியனுடையதும்.
ஆனால் இன்பாவின் பிம்பம் வேறு...
அரசு உத்யோகம் புரியும் பெற்றோர்.
பூர்வீகம் இருவருக்கும் சென்னைதான்...
மேல்மட்ட நடுத்தர குடும்பம்.
வேலைக்கு செல்ல அவசியமற்ற நிலையிலும் அனுபவம்பெற வேலைக்கு வரும் இளம்பெண்ணிண் பிம்பம் இன்பாவினுடையது.
இருவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும்,
இருவருக்குமான தொடர்புகள் சில இருக்கத்தான் செய்தன...
வேலை நோக்கமாய் எத்துணை முறை அவளருகில் சென்றாலும் இவனது வாய்மொழிகளெல்லாம் அவளது தோழிகளிடம் மட்டுமே துணிவாய் வெளியேறின...
அவளுக்கோ இவனது பிம்பம் தன்னிடம் பேச விரும்பாதவனாய் மட்டுமே தெரிந்திருந்தது...
அன்னைத்தமிழில் அத்துணை வார்த்தைகள் இருப்பினும் அவளிடம் பேசுவதற்கு மட்டும் இவன் எத்தனித்தானில்லை...
காலமும் கடந்துபோனது...
இறைவனும் இரங்கல் காட்ட ஆரம்பித்திருந்தான்...
இவனது பார்வைகள் அவளது இதயத்தை துளைக்க ஆரம்பித்திருந்தன...
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பார்க்க வந்துவிடும் செழியனை அறியாமல் இருப்பாளா அந்த சுட்டிப் பெண்.
இருவருக்குமிடையே இருந்த ஒன்றிரண்டு வேலைத்தொடர்புகளையும் அவள் சாமர்த்தியமாய் புறக்கணிக்க எத்தனித்தாள்...
இந்த மடையனுக்கு அவையெல்லாம் விளங்காமல், பார்வைக் கணைகளை அந்த வேல்விழியாளிடமே தொடுத்துக் கொண்டிருந்தான்...
இரண்டுநாட்கள் கடந்த வேளையில்,
இருவருக்குமான மனோபாஷைகள் வேலை செய்ய ஆரம்பித்திருந்தன...
கொஞ்சம் முரண்பாடாய்...
அவளுக்குள் அவனது பிம்பம் நேர்மறையாய்...
அவனுக்குள் தம் காதலின் முயற்சி
எதிர்மறையாய்...
மறுநாள்...
அவளோ,
"அவனிடம் என்னதான் வேண்டுமென்று கேட்டுவிட வேண்டும்"
அவனோ,
"இனி எப்பொழுதேனும் அவளுக்கு தொந்தரவாய் இருந்துவிட வேண்டாம்"
நான்குமணிநேர போராட்டத்திற்கு பிறகு அவன் தனது கட்டுப்பாட்டினை இழந்து பார்க்க எத்தனித்தான்...
அவள் வீசியதோ "ஒற்றை கடைக்கண் பார்வை" தான்...
அவ்வேளையில் அது அத்துணை காதல் மொழிகளையும் ஒற்றை நொடியில் அவனோடு உறவாடி இருந்தது...