top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Kathambari Indrajith - India

Entry No: 

326

தமிழ் கதை (Tamil Kadhai)


அடுக்களை அமானுஷ்யம்

அழகான விடியல் ஆரம்பமானது!

கதிரவன் செங்கதிரொளியில் கண் கூசியபடியே, தேவி கண் விழித்தார்.
எழுந்து, காலைக் கடன்கள் முடித்துக் கொண்டு, நேராகச் சமையலறை நோக்கிச் சென்றார்.

காலை உணவு தயாரிக்க வேண்டுமே!

ஆனால் சமையலறைக்குள் நுழையும் முன், தேவியின் முகத்தில் ஒருவித தயக்கம்… பயம் தெரிந்தது. எனினும் உள்ளே நுழைந்தார்.

சற்று நேரத்திற்குப் பின், நடைப்பயிற்சி முடிந்து கண்ணன் வரும்போது, தேவி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.

'இன்றும் இவள் இப்படித்தான் அமர்ந்திருக்காளா?' என்று நினைத்தபடியே உள்ளே வந்தவர், "என்ன தேவி, இன்னைக்கும் சமைக்கலையா?" என்று கேட்டு, அவர் அருகில் அமர்ந்தார்.

'ஆம்' என்று தலையசைத்தவர், சமையலறையில் நடந்ததைக் கணவருக்குக் கூற ஆரம்பித்தார்.

கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன.

அடுக்களைக்குள் நுழைந்த தேவி, 'முதலில் காஃபி குடிக்கலாம்' என நினைத்துப் பால் பாக்கெட்டை எடுத்தார். பாக்கெட்டை வெட்டி, பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றினார்.

அந்தப் பால், மலை மேலிருந்து பலத்த இரைச்சலுடன் நுரை பொங்கி வரும் அருவியாக மாறி பாத்திரத்தில் மளமளவென்று கொட்டியது.

அவ்வளவுதான்! பால் பாக்கெட்டை அப்படியே வைத்துவிட்டார்.

பொங்கி வரும் நீர்வீழ்ச்சியாக பால் மாறியதைக் கண்டவர், 'சரி, காஃபி வேண்டாம்! காலை உணவாவது சமைக்கலாம்' என நினைத்தார்.

அப்படி நினைத்ததும், வாணலிகள் வரிந்து கட்டிக் கொண்டு சமையலறை மேசையின் மீது வந்து அமர்ந்தன. 'ஏன் இப்படி?' என நினைத்தாலும், அதில் ஒன்றை எடுத்து அடுப்பின் மேல் வைத்தார்.

'அடுத்து! எண்ணெய் என்னவாகப் போகிறதோ?' என்ற பயத்துடனே எண்ணெய் பாட்டிலை எடுத்து வாணலியில் ஊற்றினார்.

நல்லவேளை எண்ணெய் எதுவாகவும் மாறவில்லை!

அடுத்து! தாளிப்பிற்காகக் கடுகை எடுக்கும் போது, சட்டென்று அது சிறு சிறு கருமணிகளாக மாறித் தரையில் உருண்டோடியன.

மஞ்சள்தூள் கோலப்பொடியாக… பெருங்காயம் வெண்மணலாய்…
வெள்ளைப்பூண்டு சோவிகளாய்… மாறின.

காஃபி கோப்பை அச்சிடப்பட்ட டைல்ஸிலிருந்த, ஆவி பறக்கும் சூடான காஃபி நீட்டப்பட்டது. மேலும் முள்கத்திகளும், கரண்டிகளும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வரும் இசைக்கேற்ப நடனமாடின!

அவ்வளவுதான்! தேவி சமையலறையிலிருந்து வெளியேறிவிட்டார்.

கடிகாரத்தில் இந்த நிமிடம்…

'இதுதான் நடந்தது' என்று, தன் கணவரிடம் தேவி கூறினார்.

‘ஏன் இப்படி நடக்கிறது!?! தன் வீட்டுச் சமயலறையில் என்னதான் இருக்கிறது?' என்று கண்ணன் யோசித்தார். நிறைய யோசித்த பின், தேவியை மருத்துவமனை அழைத்து வந்தார்.

மருத்துவர் ஒருமுறை இருவரையும் பார்த்துவிட்டு, கண்ணனை வெளியே இருக்கச் சொன்னார்.

கண்ணன் சென்றதும், மருத்துவர் தேவியிடம் பேசினார். பின் தேவியை அனுப்பிவிட்டு, கண்ணனை அழைத்துப் பேச ஆரம்பித்தார்.

"இதுக்கு முன்னாடி இப்படி ப்ராப்ளம் வந்திருக்கா?"

"இல்லை டாக்டர்”

"நீங்க பார்க்கிறப்போ இப்படி நடந்திருக்கா?"

"இல்லை டாக்டர். இப்படி நடக்குது, அதனால சமைக்கலைன்னு சொல்லுவா. அவ்வளவுதான்! ரொம்ப நல்லா சமைப்பா. எனக்கு இந்த இருபத்தியேழு வருஷமா வீட்டுச் சாப்பாடுதான். ஹோட்டல்ல சாப்பிட்டு பழக்கமே இல்லை. இந்த நாலு நாளாத்தான் இப்படி" என்று புலம்பினார்.

மருத்துவரிடம் ஓர் அமைதி!

"என்ன ப்ராப்ளம் டாக்டர்?"

"இத்தனை வருஷமா சமைக்கிறதால, உங்க வொய்ஃப்க்குச் சமையல் செய்ய ஒரு சலிப்புத் தன்மை… ஒரு பயம்… வந்திருக்கு. அதை இப்படி வெளிப்படுத்திறாங்க. இதுக்கு மெஜைரோகோபோஃபியா-ன்னு பேரு"

"இதுக்கு மருந்து டாக்டர்"

"உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?" என்று மருத்துவர் கேட்டார்.

கேள்விக்கான விடை மட்டுமல்ல, மருந்துச்சீட்டும் கண்ணனே எழுத வேண்டும்!!

*****

bottom of page