REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kasiraman R - India
Entry No:
128
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
சீக்கிரம் காதலித்துவிட்டு போ
********* ************ ****** ****
*
உன் வீட்டிற்கு
வரலாமென்றிருந்தேன்
நீயே வந்துவிட்டதால்
வரவேற்பு நிகழ்த்த
கதவை சாத்திக் கொள்கிறேன்..
*
சாத்தியிருக்கும் கதவை
திறக்காமல்
உட்புகுந்த கள்வனே
கதவு திறக்கபடுமுன்னே
காதலித்துவிட்டு போ..
*
நீ பொய்க்காரன்
நிலாவென
என்னைச் சொல்லிவிட்டு
வானத்தைப் பார்க்கிறாய்..
*
கோபித்துக் கொள்ளாதே
உன்னுடன் பேச
மவுனம் உடைத்தால்
நானும் நீயும்
சேர்ந்தே மாட்டிக்கொள்வோம்..
*
கண்கள்
மூடிக்கிடக்கிறது - சீக்கிரம்
காதலித்துவிட்டு போ..
*
காலோடு பேசும்
கொலுசு
கையோடு பேசும்
வளையல்
காதோடு பேசும்
தொங்கல்
என்னோடு பேசும்
இதயம் - எல்லாம்
கழட்டி வைத்துவிட்டேன்
ஓசையில்லை... ம்
பேசத்தொடங்கு..
*
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது - என்
உள்ளே வந்துவிட்டு
வரவா எனக்கேட்க..
*
உன் வருகையின்
போதெல்லாம்
சடமாகிப்போகும் என்னை உயிரே என அழைத்தே அசிங்கம் செய்கிறாய்..
*
நேற்று
என்னைத் திருடிப்போனாய் இன்று
எதைத் திருடிப்போவாய்..
*
பேசுயென்றால்
ஊர்ச்சுற்ற அழைக்கிறாய்
உறவினர்கள்
உறக்கம் கலைந்தால்
உளறிக்கொட்டி விடுவேன் சீக்கிரம்
காதலித்துவிட்டு போ..
*
அடேய் போதும்
கிடைக்கும் நொடிகளை
விரல்களால் நகர்த்து..
இடையை விட்டு
மேலே வந்து
துடிக்கும் உதட்டுக்கு - ஒரு
முத்தம் கொடு..
*
சரி சரி
கடைசி வரை
நீயும்
பேச மாட்டாய்
நானும்
பேச மாட்டேன் - என்
விழிக்கதவு
திறந்துக் கொண்டால்
நினைவு
வெட்கப்பட்டுவிடப் போகிறது
சீக்கிரம்
காதலித்துவிட்டு போ..!
- காசிராமன் ரா