REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Kalavathi Mariyappan - India

Entry No: 

305

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தலைப்பு: அம்மா

தரணியில் என்னை தவழவிட்டு என் தனித்துவம் தெறிக்கவிட்டு!

எனக்கான அடையாளமாய்!
என் அகிலத்தின் ஆணிவேராய்!

தன் சுகம் மறந்து
என் சுகம் ஒன்றே உணர்ந்து
நடைபோடும் என் வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரமான என் அம்மாவிற்கு இக்கவிதையை சமர்ப்பிக்கின்றேன்!


உன் உதிரம் நீ
உதிர்த்து பூமியில்
என் உயிரை உதிர்த்தவளே!

உசுரோட உசுராக
என்னை நீயும் சுமந்தவளே!

உறங்கும் நேரம் கூட
என் நினைப்பு சுமப்பவளே!

என் நினைவின்றி
வேறு நினைப்பு ஏது
உன் நெஞ்சுக்குழி கூட்டுக்குள்ளே!

நான் எட்டும் உசரத்திற்கு நீ வேண்டுவ சாமிய!

தினம் ஒரு வார்த்தைக்கு நீதானே ஏங்குவ!

நாலுகழுத வயசானாலும் நான்
உனக்கு குழந்தைதான்!

அறுபது வயதானாலும்
பணிவிடையில் நீ
எனக்கு அம்மாதான்!

குழந்தையா கொஞ்ச காலம் உன்ன சுமக்க நினைக்கிறேன்!

ஆனாலும் அம்மாவா
எப்போதும் நீதானே
ஜெயிக்கிற!

மரணம் வரையில்
உன்ன மகிழ்விக்க நினைக்கிறேன்!

மனித மனங்களின் நெருக்கடியில்
சிக்கித் தான் நீ
தவிக்கிற!

சினத்தில் சில நேரம்
சீறத்தான் நினைக்கிறேன்!

பக்குவம் என்னும் வார்த்தையால்
பரிதவித்து நிற்கிறேன்!

தூரம் நின்று துன்பங்கள
தவிர்க்க தான் சொல்லுறேன்!

அதிலும் அம்மாவா
உன் அன்பு தானே ஜெயிக்குது!

உன்னோட அறிவுரையால
என் கோபம் கூட மறையுது!

உன் துணையோடு நீ இருக்கும்போது
துணிச்சல் தான் உன்னிடம் கற்றேன்!

இன்று நீ தனிமையோடு
இருக்கும்போது
உன் தனித்துவம் தான்
நான் கற்றேன்!

அன்பின் ஆசானாக மட்டுமல்ல
நீ எனக்குள்ள!

என் கற்றலின்
ஆசானும் நீதானே
என்ன சொல்ல!

உன் அன்பில் மட்டும்
எனக்கு படிப்பினை
இங்கு இல்ல!

உன் அனுபவமும்
கத்துத் தருது
என் வாழ்விற்கான எல்லை!

வயசாகிக்கிட்டே போகும் உன்னை
வாசிக்க வாசிக்க!

என் வாழ்க்கைப் புத்தகமோ திறந்து
கொண்டேயிருக்கிறது
அதன் பக்கங்களை நிரப்ப முடியாம!

வாழும் காலம் வரை
உன் பேர் சொல்லும்
பிள்ளையாய்!

வாழ்வதைத் தவிர
வேறென்ன கைம்மாறு
நான் உனக்கு செய்ய!

கலாவதி மாரியப்பன்

Entry No: 

307

தமிழ் கதை (Tamil Kadhai)

தலைப்பு: அந்த "இருபது நிமிடங்கள்"


இரவின் நிலவொளியில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க, அந்த அறையில் ஒரு பெரிய போர்டின் முன் அமர்ந்து தூரிகையை கையில் எடுத்துக்கொண்டு, அருகிலிருந்த வண்ணக் கலவையில் முக்கி எடுத்தாள் நேகா.

அதை அப்படியே அந்த போர்டின் மேல் தெளித்து, தன் மனதிலுள்ள கோபம் தீரும்வரை கலைத்து தள்ளினாள்.

கோபங்கள் எல்லாம் கலையின் கைவண்ணத்தில் ஓவியக் கிறுக்கல்களாயின.

கண்களில் கண்ணீர் வழிய, அந்த கிறுக்கல்களையே உற்றுப் பார்த்து கொண்டிருந்தாள். நேரமோ 2.30 ஆகியிருந்தது. எப்போது கண் அயர்ந்தாள் என்று தெரியவில்லை.

கண் விழித்த போது நேரம் காலை 6 மணி. எழுந்தவுடன் அவள் கண்கள் முதலில் நாடியது அந்த கிறுக்கல்களைத் தான்.

ரூமை விட்டு வெளியே வந்தவுடன் எதிரில் அவளது அம்மா, இன்னைக்கும் தூங்கலையா நீ? என்ற கேள்வியுடன் அவளை முறைத்தாள்.

கண்டு கொள்ளாதது போல், வேகமாக பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் நேகா.

குளியலுக்கு பின், பெயருக்கு ஒரு தோசையை கொறித்து விட்டு, தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி வெளியே வந்தாள்.

அங்கே அவளது நெருங்கிய தோழி சுதா அவளுக்காக காத்திருந்தாள்.

போலாமா நேகா? என்று கேட்டபடியே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

சிறிது தூரம் கடந்தவுடன், நைட்டு சரியா தூங்கலையா நீ? கண்ணெல்லாம் சிவந்திருக்கு என்று கேட்டாள் சுதா.

பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் இருந்தவளைக் கண்டதும் அவளுக்கு கோபமாக வந்தது.

எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கப் போற நீ? என்று திட்டிக் கொண்டே அந்த பள்ளியின் காம்பவுண்ட்க்குள் நுழைந்து ஒரு மரத்தடியின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தாள்.

உணர்ச்சிகளின்றி உள்ளே சென்று கொண்டிருந்த நேகாவை பார்த்து மனம் வலித்தது.

அந்தப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தாள் நேகா.

மதியம் வகுப்பறையில் உருவங்கள் வரைவது பற்றி சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.

ஒரு மாணவி எழுந்து, டீச்சர்! எனக்கு கண்கள் வரைய சொல்லி கொடுங்க என்று கேட்டாள்.

கண்களை எந்தெந்த விதத்தில் வரையலாம் என்று சொல்லி கொடுத்தாள்.

அந்த மாணவி எழுந்து, டீச்சர்! எனக்கு இரண்டு கண்களையும் முழுசா மூடியிருக்க மாதிரி வரையணும் என்று கேட்டாள்.

அதனை வரைந்து காண்பித்தாள் நேகா! அந்த குழந்தையின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

அவளை மேலும் குஷிப்படுத்த, அந்த ஓவியத்திற்கு இன்னும் அழகூட்டினாள்.

அதனை உற்று ரசித்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் மலர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

அந்த மூடிய கண்கள் அவளுக்குள் ஏதோ சலனத்தை ஏற்படுத்த..............

வகுப்புகள் முடியும் நேரத்திற்காய் காத்திருந்தாள். மணி அடிக்கும் ஓசை கேட்டதும் பள்ளியை விட்டு வெளியே வந்தவள், விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்.

அப்போது, அவள் மனதில் அந்த நினைவுகளின் சலனங்கள்!

ஒரு மாலைவேளை, ஓவியக் கண்காட்சி வளாகத்தில் அவளது ஓவியமும் இடம் பெற்றிருந்தது.

ஒரு சிறுவனும், சிறுமியும் கைகோர்த்து, விகல்பமில்லாமல் தங்கள் நட்பை பறைசாற்றும் ஓவியம்.

அனைவரும் அந்த ஓவியத்தை பார்த்து பாராட்டினர். அப்போது நேகாவை நோக்கி "நைஸ் டிராயிங்" என்று கூறி ஒரு கை நீண்டது.

கையை நீட்டியவனைப் பார்த்து ஒரு கணம், இவன் எப்படி இங்கே! என்று திகைத்துப்போய் நின்றாள் நேகா.

"ஹலோ! நட்பு டிராயிங்ல மட்டும் தானா? நீங்க பார்க்கிற எல்லா இடத்திலும் நான் தெரியறேனே, என்கூட கிடையாதா என்று அவளிடம் வம்பிழுத்தான் அவன்.

கண்களில் கோபம் கொப்பளிக்க அவனை கடக்க முயன்றவளின் கையை எடுத்து தன் நெஞ்சின் மேல் வைத்து, அவள் கண்களை ஊடுருவியவாறே கேட்டான் எப்பொழுது தான் என்னை புரிந்து கொள்வாய் என்று.

அவன் கண்களின் மொழி வழியாகவே அவள் தன் விருப்பத்தை தெரிவித்தாள்.

இதனை சற்றும் எதிர்பாராத அவன், சிறிது நேரம் கண்கள் மூடி பேச்சிழந்து நிற்க, அந்த அழகிய தருணத்தை அப்படியே வரைந்து "காதல் பரிசாக" அவனுக்கு அளித்தாள்.

கண்கள் பிரகாசிக்க காதல் பரிசை மார்போடு அணைத்துக் கொண்டு, சுற்றம் மறந்து சந்தோஷத்தில் அவன் துள்ளிக் குதிக்க,

ஹேய்! உன் பெயர் என்ன என்று இவள் கேட்கவும், எதிரில் சாலையை கடந்து கொண்டிருந்த வண்டி இவன் மேல் மோதவும் சரியாக இருந்தது.

அவளின் காதல் பரிசை அந்த கைகள் இன்னும் இறுகப் பற்றிக் கொண்டுதானிருந்தது.

"அந்த இருபது நிமிடங்கள்" அவள் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்று நேகா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். சிலர் ஓடி வந்து, அவனை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனார்கள்.

இப்போது அவன் மருத்துவமனையில் கண்கள் திறந்தபடி படுத்திருக்க......

காதல் பரிசோடு அவள் கைகள் காத்திருக்கின்றன...

அவன் கண்கள் மூடி, அவள் காதலை ரசிக்கும் அந்த ஒரு கணத்திற்காக!

கலாவதி மாரியப்பன்