REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Jayanthi Mohan - India
Entry No:
168
தமிழ் கதை (Tamil Kadhai)
கனவு காதலன்!
"அந்த முகத்தை இன்று நிச்சயம் பார்த்து விட வேண்டும்' என்று கனவுலகத்தில் இருந்த சந்தியாவை அவளுடைய அம்மா வழக்கம் போல துயிலெழுப்ப செய்தார்! ஏன்மா இப்படி பண்ற??? ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்திருக்க கூடாதா! கிட்ட போயிட்டேன், முகத்தை பார்க்கிறதுக்குள்ள வந்து எழுப்பிட்ட! "தூக்கத்துல ஏதாவது உளராம எழுந்து போ! அப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமா!"
"ம் சரி போறேன்"
"அப்படியே போயிடாத டி.... பல்ல விளக்கிட்டு முகத்தை கழுவிவிட்டு போ"
சரி! சரி!!
அப்பா கூப்பிட்டீங்களா! வாடா வந்து இப்படி உட்காரு, "சொல்லுங்கப்பா!" அது வந்து... நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க பையன உன் சித்தப்பா கூட்டிட்டு வராங்க! நானும் அவன்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்,ஆனா நல்ல இடம் கைவிட்டுப் போகக் கூடாதுன்னு சொன்னான், அதாம்மா வர சொல்லிட்டேன். நீ என்னம்மா சொல்ற? "அதான் நீங்களே முடிவு பண்ணிட்டீங்களே அப்புறம் எதுக்குப்பா என்னை கூப்பிட்டு உட்கார வெச்சு பேசுறீங்க!" என்னமோ பண்ணுங்க என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். ஆனால் மனதுக்குள் சிறிது வருத்தம்தான், ஒரு வார்த்தைக் கூட நம்மிடம் ஆலோசிக்காமல் அவர்களாகவே முடிவு எடுத்துக்கொண்டார்கள் என்று!
அடுத்தநாள் வேண்டாவெறுப்பாய் அலங்காரம் செய்துகொண்டு அமர்ந்து இருந்த சந்தியாவை, அவளுடைய தோழிகள் சீண்டிக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவள் மனமோ...தன் கனவில் வந்தவன் முகத்தை காண முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தது. சிறிது நேரத்தில் வீட்டுக்குள் புதிதாக ஒரு குரல் கேட்க அவளும் செவிசாய்க்க ஆரம்பித்தாள்! கண்கள் நோக்கும் முன்னே அந்தக் குரல் அவளின் மனதை சிறை பிடித்தது! தன் அம்மாவின் குரல் கேட்டு காபி கோப்பைகளை கையில் எடுத்து சென்றாள்! அந்த நொடி அவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது..! கண்கள் படபடத்தது..! எதிரில் இருப்பவரின் முகத்தை பார்க்க வேண்டும் என்று மனம் சொல்லியது, ஆனால் திரும்பிப் பார்க்காமல் உள்ளே வந்து விட்டாள்! வந்தது அவள் உடல் மட்டும்தான், மனமோ...அந்த இடத்திலே இருந்து நகரவில்லை!
சிறிது நேரத்தில் அவளை சிறைபிடித்த அந்த குரல் அவளை நோக்கி வருவதை அவளால் உணர முடிந்தது. அதே நேரத்தில் உடன் இருந்த தோழிகள் பட்டாளம் கலைந்து சென்றது, மீண்டும் அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "இது போன்ற ஒரு உணர்வை இதற்கு முன்பு உணர்ந்ததே கிடையாது" என்று அவளின் மன ஓட்டம் இருக்க, எனக்கு உங்களை பிடித்திருக்கிறது! உங்களுக்கு...? என்ற கேள்வி அவள் எதிர்திசையில் இருந்து வர, அதிர்ந்துபோய் நிமிர்ந்து ஒரு முறை பார்த்து ஆம் என்பது போல தலையை ஆட்டினாள். அடுத்த நொடியே அவர் அந்த இடத்தைவிட்டு நகர "ஆமா இப்ப இங்க என்ன நடந்தது? நான் எதுக்காக பிடிச்சிருக்கு அப்படின்னு தலையாட்டினேன்!!!" என்ற கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள்.
பிறகு ஒருவித குழப்பத்தோடு அசதியிலும் உறங்க சென்று அவள் கண்களுக்கு மீண்டும் அந்த உருவம் தென்பட, பின் தொடர ஆரம்பித்தாள்! திடீரென காணாமல் போன அந்த ஆண்மகனை அங்குமிங்கும் தேட ஆரம்பித்து, தடுமாறி விழ சென்றவளை ஒரு கை தாங்கிப் பிடித்தது, "ஆம்! இது அவன் தான், இதே உடை தான்" என கூறிக்கொண்டே முகத்தை பார்த்த அவளுக்கு பேரதிர்ச்சி!!!
"சந்தியா!" என்ற குரல் கேட்க அலறியடித்துக்கொண்டு விழித்த அவளுக்கு ஒரே ஆச்சரியம்!!! ஆம் கனவில் வந்தது அவர் முகம் தான். ஆனால் இது எப்படி சாத்தியம்?
இதற்குப் பெயர்தான் காதலோ!!!