top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Jayalakshmi Viswanathan - India

Entry No: 

472

தமிழ் கதை (Tamil Kadhai)

மாறியது நெஞ்சம்
அனுஷா சுலோகம் சொல்லி பூஜை முடித்து வெளியே வந்தாள். எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பாள்.
அவள் கணவன் சந்திரனுக்கும் அவளைப்பிடிக்கும். அன்பகலாத மனைவியாக இருப்பாள். ஆனால் சிலசமயம் சிடுசிடுப்பான். இவள் பொறுமையாகவே சமாளிப்பாள். சில நேரம் தோன்றும். இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று. அவன் வீட்டில் கலகலப்பாகவும் இன்முகத்துடனும் இருந்து பார்த்ததே இல்லை. அன்பு என்றால் என்ன விலை என்பான். அனுஷா அதற்கு நேர் மாறானவள். அன்பு தவிர ஒன்றும் தெரியாது. சொல்லிலும் செயலிலும் அவளுடைய சுவாசத்திலும் கூட அன்புதான் வெளிப்படும். அன்பு தான் அவள் சுவாசம்.
எம்.பி.ஏ படித்தவள் தான். ஆனால் வேலைக்குப் போகவில்லை. ஆனால் கல்யாணமாகி ஒரு மாதத்திலேயே அவள் நாகரீகமாக இல்லை என்று குறைப்பட்டான். நாகரீக யுவதியாக அவள் இருப்பாள் எனப் பெரிதும் எதிர்பார்த்தான். ஆனால் அவளோ குடும்பக் குத்து விளக்காக இருந்தாள். அதைப் பெருமையாக நினைத்தாள். பொறுமையுடன் அவனுடைய கேலி கிண்டல்களைப் பொறுத்துக் கொண்டாள். அவனுடன் வெளி இடங்களுக்குப் போனால் சுடிதார் அல்லது புடவைகட்டி மிதமான ஒப்பனையுடன் அழகாக அமைதியாகச் செல்வாள். சந்திரனுக்கோ அவள் வெளியில் கிளம்பினால் ஜீன்ஸ் டீ-ஷர்ட் போட்டுக்கொண்டு ஆரவாரமாகக் கிளம்பவேண்டும் என நினைப்பான். அவனுடைய நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுடன் உட்கார்ந்து அவள் பேசவேண்டும் என சொல்வான். அதை மிகவும் எதிர் பார்த்தான். அப்படி அவள் இல்லை என்பதால் அடிக்கடி அவளிடம் சிடுசிடுப்பான்.
அனுஷா யோசித்தாள். அவன் வழிக்கே போய் தன் அளவில்லாத அன்பினால் அவனை நல்லதை உணரவைக்க முடியும் என்று முடிவு செய்தாள். அதனால் நாளடைவில் அவன் விருப்பப்படி உடுத்தினாள். அவன் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு வந்தால் அவர்களுடன் உற்சாகமாகப் பேசினாள். அனுஷாவின் இந்த மாறுதல்கள் சந்திரனை உச்சி குளிர வைத்தது. அவளை மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடினான்.
அவனுடைய நண்பர்கள் போகப்போக சந்திரன் இல்லாதபோதும் வரத்துவங்கினார்கள். சந்திரன் முகத்திற்காக இவளும் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பாள். சில நாட்களுக்குப் பிறகு அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் என்று அனுஷாவின் திடீர் மாறுதல்களைப் புரிந்துகொள்ளமுடியாமல் விமர்சித்தனர்.
இவை அனுஷாவின் காதிற்கும் எட்டியது. மனது வலித்தது. சந்திரன் மீது அளவில்லா அன்பு வைத்திருந்ததால் பொறுமை காத்தாள். அவனிடம் எதையும் சொல்லவில்லை. அன்பை வெளிப்படுத்தும் மொழி புன்னகை தானே!
அதனால் தினமும் புன்னகையுடன் அவனை எதிர்கொண்டாள். தான் சுவாசிப்பதே அவனுக்காகவே என்பது போல்இருந்தாள். சில நாட்களில் சந்திரனின் காதிற்கும் விமர்சனங்கள் எட்டின. ஒரு நாள் அலுவலகம் முடிந்து பரபரப்பாக வீட்டிற்கு வந்தான். எதுவும் பேசாமல் அறைக்குப் போய் விட்டான். நிதானமாக யோசித்துப் பார்த்தான். சமீபகாலமாக அனுஷாவின் செயல்களை ஒவ்வொன்றாக அசை போட்டான். தெளிவாக யோசித்ததில் தன்னுடைய தப்பு அவனுக்குப் புரிந்தது.
எனக்காக அவள் தன்னை மாற்றி கொண்டாள். ஆனால் வெளியில் அவளைத் தவறாகப் பேசுகிறார்களே என்று மிகவும் வருந்தினான். அடுத்தநாள் காலை நண்பன்ஒருவன் அனுஷாவைப்பற்றி வெளியில் ஒரு மாதிரி பேசுகிறார்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் அவனை கடுமையாகக் கண்டித்து வெளியே அனுப்பி விட்டான். பின்னர் அனுஷாவிடம் வந்து நீ நீயாகவே இரு. உன் அன்பும் பொறுமையும் தான் நம் குடும்பத்திற்குப் பாதுகாப்பு கவசம். உன்னைப் புரிந்துகொண்டேன் என தழுதழுப்போடு கூறினான். அனுஷாவும் தன்னுடைய தூய்மையான அன்பே கணவனை மாற்றியது என மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். அன்பை ஆயுதமாய்க்கொண்டு உலகையே வெல்லலாம்.

ஜெயலட்சுமி விஸ்வநாதன்

bottom of page