REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Gokila Shanmugam - India
Entry No:
336
தமிழ் கதை (Tamil Kadhai)
"எங்க பாத்தாலும்,ஒரு தூசியும், புகையுமாவே இருக்கு,எதுக்கு தான் ரோட்ல இத்தனை வண்டி போகுதோ"என வாய்விட்டு புலம்பிக்கொண்டு வண்டியில் இருந்து இறங்கியவள்,கைப்பையினுள் வீட்டுச்சாவியை தேடி கொண்டிருந்தவள்,கதவு ஏற்கனவே திறந்திருந்ததை,அப்போதுதான் கவனித்தாள்,"ஆபீஸ்ல எல்லாரையும் சமாளித்தாலும் கூட,இவங்க ரெண்டுபேரையும் சமாளிக்கவே முடியலையே"என மீண்டும் புலம்பியவள் உள்ளே நுழைய,சமையலறையிலிருந்து சத்தம் வருவதை கேட்டு அங்கே சென்று பார்க்க தந்தையும்,மகளும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்தனர்."டேய் மாறா மறுபடியும், உன் யசோகுட்டிகூட சண்டையா" என இவள் சலித்துக்கொண்டே வினவ, சிறியவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தவனோ, "ஆமா,எப்ப பாத்தாலும் பிரச்சனை பண்ணிட்டே இருக்கா,அதுதான் இங்க வந்துட்டேன்" என்றான் கேஷுவலாக.அதைக் கேட்டவளோ பக்கென நகைத்து விட்டு டைனிங்டேபிளின் மற்றொரு சேரில் அமர்ந்தவள்,"சண்டை போட்டா ஒன்ணு அவ அவிங்க அம்மா வீட்டுக்கு போகணும், இல்லனா நீ உன் அம்மா வீட்டுக்குப் போகனும்,இது ரெண்டும் இல்லாம, ஏன்டா என் வீட்டுக்கு வர்றிங்க?"என இவள் சலிப்புடன் வினவ,"ஓகே இனி நான் இங்க வர மாட்டேன்,இப்போ கோவமா கிளம்புறேன்" என்றான் இத்தோடு முப்பத்துமூன்றாவது முறையாக. சிறியவளையும் அவன் அழைக்க, அதற்கு பெரியவளோ,"நீ போய் யசோ கால்ல விழுகிறத,இவ வேற பார்க்கணுமா"என கேட்க அவ்வளவுதான் திரும்பிப்பார்க்காமல் கிளம்பிவிட்டான்.மாறனின் வீடு இவளுக்கு பக்கத்துவீடே.... மனைவியுடன் ஏதாவது பிரச்சனை என்றால்,இவன் உடனே தோழியின் வீட்டில் தஞ்சம்புகுந்துவிடுவான். மீதமிருந்த உணவையும் சிறியவளுக்கு ஊட்டிமுடித்தவள்,சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிறியவளை,நெஞ்சின்மேல் படுக்கவைத்து தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்,எதேச்சையாக மணியை பார்க்க அதுவோ,ஏழு எனக்காட்டியது.இவ்வளவு நேரமும் சிறியவளுக்கு இரவுவானில் தெரியும் நிலவை காட்டி உணவை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தவள்,அவளுடன் இவளும் சிறிது நேரம் விளையாடிகொண்டிருந்தாள். தற்போது அவளின் மனமோ மிக மகிழ்ச்சியாக காணப்பட்டது.இரண்டு நாட்களாக, திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய நட்பின் கோரிக்கையை இவள்,பிடிவாதமாக நிராகரித்துவந்தாள், விளைவு..... அவனின் மூன்று நாள் மௌன விரதம்.இன்று மறுபடியும் இவனே வந்து பேசியதால்,வந்த மனமகிழ்ச்சி தான் அது......'பேதையவளுக்கு மட்டும் திருமணம் என்றால் ஏன் கசக்கிறது'என அவன் நினைத்துக்கொண்டிருக்க பாவம் அவனுக்கு தெரியவில்லை,அதற்கு முழுமுதற் காரணம் அவன் மட்டுமே,என்ற ரகசியம்.சிறுவயது முதலே பெண்ணவளுக்கும்,ஆடவனுக்கும் இடையில், நட்பு மலர்ந்து,இன்றுவரை அவர்களின் வாழ்வில் நறுமணத்தை வீசிக்கொண்டுதான் உள்ளது.வெறும் நட்பு மட்டும் தானா?ஆம்.... ஆடவனுக்கு அது வெறும் நட்புதான்,ஆனால் பெண்ணவளுக்கோ இடைப்பட்ட காலத்தில் அது காதலாக மாறியிருந்தது. அதை அவனிடம் ஆனந்தஅதிர்ச்சியாக சொல்ல எண்ணியவள்,ஆடவனை மாலை கடற்கரைக்கு வர சொல்ல,அங்கே அவன் யசோதாவை காதலிப்பதாக உரைத்து, இவளுக்கு ஒருபடி மேலான அதிர்ச்சியை கொடுத்துவிட்டுசென்றான்.அன்று முளைத்த அவளது காதலோ,அவனிடம் சொல்லாமல் அன்றே மரித்துவிட்டது. அதை நினைத்து ஒருவாரம் உள்ளுக்குள்ளே மறுகியவள் தோழமையின் காதலியால்,கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தாள்.திருமணம் என்ற சொல்லை குடும்பத்தினர் எவ்வளவு வற்புறுத்தியும் தவிர்த்தே வந்தவளை, கடந்த ஒரு மாத காலமாக இவன் வற்புறுத்த ஆரம்பித்துவிட்டான்.முடியாது என்று விதவிதமாக கோதையவள் சொல்லியும் இவன்,அதை ஏற்காமல் மௌன விரதத்தை கையிலெடுத்தான். இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது உறங்கும் சிறியவளின்,"ம்மா"என்ற அழைப்பும்,பிஞ்சுகைகள் இரண்டும் அவளை மேலும் இறுக்கி அணைத்துகொண்டதும்.....இதோ சிறியவள் பேசும் முதல் வார்த்தை!!!!! அதுவும் இவளை பார்த்து!!!!!!அந்த கணம், மகவை ஈன்றெடுக்காமலே தாய்மையை உணர்ந்துவிட்டாள்.தாய்மையை மட்டுமா உணர்ந்தாள் கூடவே அளவற்ற காதலையும்,அன்பையும் அல்லவா.... கண்ணீர் சுரப்பிகள்,தானாக அதன் பணியை செய்ய,கன்னம் தாண்டி வந்த வெம்மையான விழிநீர் அவளின் நுனிநாக்கில் பட அதுவோ இனித்தது..... இது காதல் அல்ல சாபமா....என பலமுறை யோசித்தவள்,தற்போது உணர்ந்துகொண்டாள் இது காதல் மட்டுமே என.மழலையின் ஒற்றைச்சொல் அமிழ்தாவை வாழ்வாங்கு இவ்வையகத்தில் காதல் என்ற உணர்வு ததும்ப,ததும்ப வாழவைக்கும் என நம்புவோம்....