REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Geetha Manivannan - India
Entry No:
375
தமிழ் கதை (Tamil Kadhai)
அன்பின் ஆழம்
உலகிலேயே ஆழமானது எதுவென்று கேட்டால் பெண் மனம் என்பார்கள். ஆனால் அதைவிட ஆழமானது "தந்தையின் அன்பு "தான். தாயன்பு வெளிப்படையாக புரிந்துவிடும். ஆனால் நாம் தந்தையாகும் வரை அவரது அன்பை புரிந்து கொள்ளவே இயலாது. நம் வீட்டின் ஆலமரமாய் நின்று, நம் எதிர்காலத்திற்கு பாலமாய் அமைந்து காலம் தவறாமல் கடமை யாற்றும் தூய அன்பு தான் தந்தையின் அன்பு.
வெந்து, நொந்து போகும் போது ஆறுதலாய் வந்து நிற்கும் விந்தை மனிதர் தான் தந்தை. குடும்பம், வேலை, ஆரோக்கியம், நட்பு என அனைத்தையும் சமமாக நினைத்து எல்லாவற்றையும் வழிநடத்துபவர் தான் தந்தை. தான் அடித்ததும் தன் பிள்ளைகள் அழுவதைக் கண்டு தன் உள்ளத்தில் ரத்தம் வடிய நிற்பவர். அந்த ஆழமான அன்பை வெளிப்படுத்தாமல் கண்டிப்பை மட்டுமே காட்டுபவர். ஆம்! தந்தை எனும் உளி நம்மை செதுக்காவிட்டால் நாம் வெறும் கல்லாக மட்டுமே இருந்திருப்போம் அல்லவா? எப்படி சிலை யாவது?
ஒரு தந்தையின் அன்பின் ஆழத்தை அறிய ஒரு சிறு உதாரணம்(கதை )
இதோ :--
"அப்பா "-- ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டான் செல்வத்தின் 2 வயது மகன் நந்து." வேலை இருக்கும்போது தொந்தரவு செய்யாதே" என்று கைகளை விலக்கி விட்டான் செல்வம். " ஏன் குழந்தையை திட்டிக்கிட்டே இருக்கீங்க? " என்று கூறிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டாள் அவன் மனைவி சீதா.
தன் மனைவி சீதாவிடம் அதிக பாசம் கொண்டவன் செல்வம். செல்வத்தின் தந்தை ராமமூர்த்தி. சற்றே கண்டிப்பானவர். தன் தந்தையின் இறுதிக் காலத்தில் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டவள். இனி தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்ததும், உடைந்து போய் இருந்தாலும் கூட அவரையே தன் குழந்தையாய் நினைத்து பணிவிடை செய்தவள். தற்போது பல குடும்பங்களில் தன் தாய் தந்தைக்கு இடமளிக்க மனம் இல்லாதவர்களின் நடுவே, தன் மனைவியின் குணத்தை எண்ணிப் பெருமை கொண்டான்.
தந்தையின் மறைவு இருவரையும் உலுக்கியது. ஒரு நாள் மெல்ல சீதா தன் கணவனிடம், "நாம ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா?" என்று கேட்டாள். தன் மனைவியின் ஆசையை தட்ட இயலாமல் "சரி" என்றான்.
மனதில், " என் ரத்தத்தில் பிறக்காத அவனை எப்படி மகனாய்
ஏற்றுக்கொள்வது?!"-- நெருடியது செல்வத்திற்கு.
இருப்பினும் ஒரு வழியாக தத்து எடுத்து வந்தனர் நந்துவை. இரண்டு வயது சுட்டிப் பையன். சீதா அவன் மேல் பாசத்தை பொழிந்தாள். ஆனால் செல்வம் சற்று தள்ளியே தான் இருந்தான். இருப்பினும் மனைவியின் முன் காட்டிக் கொள்ளவில்லை. தந்தையாக அவனுக்கு ஒன்றும் செய்ததில்லை செல்வம்.
ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு வந்தார்
சாம்பசிவம். " வாங்க சார் "-- என்ற செல்வம் அவரை பார்த்ததும் அழுதே விட்டான். "அப்பா நம்மளை விட்டுட்டுப் போயிட்டார் சார் ".
" ரொம்ப வருத்தமா இருக்கு செல்வம்! கடைசியா அவன் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போயிடுச்சுன்னு வேதனையா இருக்கு. எனக்கு உடம்பு முடியாம போச்சு. அதான் வர முடியல. என் பையன் சொல்லித்தான் தெரியும். எனக்கு முன்னாடி போயிட்டான் பாரு ராமமூர்த்தி." - என்று கூறி வருத்தப்பட்டார். செல்வத்தின் தந்தை ராமமூர்த்தியும், சாம்பசிவமும் நெருங்கிய நண்பர்கள். குடும்ப விஷயங்கள் எல்லாம் பகிர்ந்து கொள்வர்.
சீதா காபியுடன் வந்தாள். பின்னால் வந்து கட்டிக்கொண்டான் நந்து.
" இந்தக் குழந்தை... "-- இழுத்தார் சாம்பசிவம்.
" எங்க குழந்தை தான்... தத்து எடுத்து வந்தோம்"-- சீதா பதிலளித்தாள்.
உடனே திரும்பி செல்வத்தை பார்த்தவர்," நீயும் உங்க அப்பா மாதிரியே உயர்ந்த குணத்தோடு இருக்கப்பா. ராமமூர்த்தி சாகல உன் வடிவத்துல இன்னும் இருக்கான்"-- என்றார் சாம்பசிவம். ஒன்றும் புரியாமல் பார்த்தான் செல்வம்.
" உன்னையும் ரெண்டு வயசு குழந்தையாய் இந்த வீட்டுக்கு தூக்கிட்டு வந்தோம். உன்ன தத்து எடுத்து வந்தப்புறம் உங்க அம்மா இறந்து போயிட்டாங்க. எல்லாரும் உன்ன திரும்ப அந்த அனாதை இல்லத்திலேயே விட்டுட்டு மறுமணம் செய்துக்கோ அப்படின்னு உங்க அப்பா கிட்ட சொன்னாங்க. ஆனா உங்கப்பா மறுத்துவிட்டு உன்னை தன்னந்தனியா வளர்த்தார். அந்த கஷ்டத்தை நான் கண்ணால பார்த்தவன். நீ தத்தெடுத்து வந்த பையன்னு தெரியக் கூடாதுன்னு உன்னை பார்த்து பார்த்து வளர்த்தார். ஆனா இப்ப நீ பண்ணி இருக்கிற இந்த பெரிய விஷயத்தை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. அதான் மனசு கேட்காம உன்கிட்ட சொல்லிட்டேன். ராமமூர்த்தி வளர்ப்பாச்சே நீ...அதான் மனசால உசந்து நிக்கறே"-- கூறி விட்டுக் கிளம்பினார் சாம்பசிவம்.
அவர் கூறியதைக் கேட்டதும் யாரோ சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது செல்வத்திற்கு..
மறுநாள்... வெளியே சென்றுவிட்டு, தன் மகனுக்காக கையில் பொம்மையுடனும் புது சட்டையுடனும் வீட்டிற்கு திரும்பி வந்தான் செல்வம். வழக்கம் போல அப்பா என்று கட்டிக்கொண்டான் நந்து. அவனைத் தூக்கி உச்சி முகர்ந்தான் செல்வம் முதன்முதலாக...
தான் தந்தையான பின் அவனுக்கு புரிந்திருந்தது.. தன் தந்தையின் அன்பு எவ்வளவு "ஆழமானது" என்று......
ஒருமுறை, இருமுறை அல்ல நூறு முறை ஆராய்ந்தாலும் அப்பாவின் அன்பின் ஆழத்தை அறிய முடியாது.
முற்றும்.