REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Gandhimohan P - India
Entry No:
457
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்றுதான் நிகழ்ந்தது
நம் நீண்டநாள் கனவு
உன் தோழியின்
திரு மண விழா
முடிந்து திரும்புகையில்....
நன்றாக ஞாபகம் உண்டு
அது ஒரு
கோடைக்கால வளர்பிறை இரவு
ஏதோ,
வெய்யில் பாதையில் கிடைத்த
வேப்பமர நிழல் போல்
இதமாய் வருடிச் சென்றது
மெதுவாய் வீசிய கோடைக்காற்று!
அதீத போக்கு வரத்
இல்லா சாலையில்
நெடும் நேரம் நெடுந் தூரம்
கைகள் கோர்த்து
காலால் நடை போட்டோம்,
ஏராளம் பேசிக்கொண்டே.....
ஏளனம் செய்தாய் நீ,
"என் தோழியை பார்
கணவனை கைப்பிடித்து விட்டாள்,
நீ இப்படியே இருந்தால்
நான் எப்போது பிடிக்க?"
என்றாய்,
"இப்போதே பிடித்துக்கொண்டுதானே இருக்கிறாய்"
என்றேன்.
சிலசெல்லச் திட்டுகட்குப் பின்,
எப்போதும் போல
கெஞ்சலாய் கேட்கிறாய்
"ஒரு கவிதை சொல்லேன்", என்று.
சிலநிமிட யோசனைக்குப் பின்
திடீரென கையை உதறிவிட்டு
இரண்டடி பின் செல்கிறேன்
ஏன்? எங்கிறாய்,
"நிலவோடு நானும்
தரையோடு பயணம் போகிறோம்
சந்தோசம்தான்,
கைகள் கோர்த்து நடக்க
ஆனாலும் என்னவோ
இரண்டடி தள்ளியே வருகிறேன்
விடிந்ததும் சென்றிடுவாய்
என்ற அச்சத்தில்!", என்றேன்.
நீ என்காதலி அல்லவா,
சற்றும் யோசிக்காமல்
"போனாலும்
நாளைபொழுதில்
வந்துதானே ஆகனும்", என்கிறாய்.
அதன் பின்,
பல வேடிக்கைப் பேச்சுகளோடும்
சில செல்லச் சீண்டல்களோடும்
கொஞ்சம் உணர்ச்சிப் பொங்கட்களோடும்
கொஞ்சும் மழலைச் சொட்களோடும்
இனிதே முடிந்தது பயணம்,
நன்றாக நினைவில்லை
இன்னும் என்னென்ன பேசினோமென்று
ஆனால்,
நம் காதல் நினைவில்
என்றும் நீங்காது
அன்றைய இரவும்
அன்றுவந்த நிலவும்
Entry No:
460
தமிழ் கதை (Tamil Kadhai)
ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி,துக்கம், ஏக்கம், ஏமாற்றம் என பல நினைவுகள் இருக்கும். ஆனால் அனைவருக்கும் பொதுவான மலரும் நினைவுகளெனில், காட்டாயம் நமது பள்ளிப்பருவ நினைவுகளே. அதுவும் அந்த பள்ளிப்பருவத்தில் வந்த முதல் பிஞ்சுக்காதல் என்பது சொர்க்க அனுபவம், அது என்றும் மறக்க இயலா நினைவுகள்.
பத்தாம் வகுப்புவரை எங்கள் ஊரிலேயே பயின்ற நான், மேல்நிலை வகுப்பிற்காக வெளியூரிலுள்ள பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்தது. சுமார் ஒருமணி நேர பேருந்து பயணம். புதிய பள்ளி, புதிய பாடம், புதிய ஆசிரியர்கள், பல புதிய நண்பர்கள் என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பழக, பதினொன்றாம் வகுப்பின் இடைப்பட்ட காலத்தில் இப்பொழுது புதிதாய் அந்த உணர்வுகள். நமக்கும் காதலுக்கும் வெகுதூரம் என்றிருந்த நான், நண்பர்களின் தூண்டுதலில் விளையாட்டாக ஆரம்பித்த வினை அது. அவள் என் ஊரோ, நான் பயின்ற பள்ளியோ அன்று, என் சக பேருந்து பயணி.
காதல் அது ஒருவித நெருப்பு. அதை, நாமாய் பற்றவைக்கவும் இயலாது, பற்றினால் நம்மால் அணைக்கவும் இயலாது. பற்றினாலும், அணைந்தாலும் அதுவாய் செய்வதுதான். ஆனால் இது நானாய் தேடிச்சென்று விழுந்த தீ. எல்லாம் ஒரு கெத்துக்காக, நானும் காதலிக்கிறேனென என் பருவத்தை நிரூபிக்க எண்ணி, என் வாலிபத்திற்கு குளிர்காய அத்தீயை நாடியபோது நானுமதில் பற்றுண்டேன்.
இது காதலா இல்லை வெரும் வாலிபக்கோளாரா என்று தெரியவில்லை, ஆனால் நாட்கள் அழகாகிக்கொண்டே வந்தது. ஒரு தொடக்கம், ஒரு நிலைத்தன்மை, ஒரு குறிக்கோள் என எதுவும் இல்லா என் வாழ்வை செம்மைப்படுத்தினாள். தினமும் 30 நிமிடம் அவளுடனான பயணம்,அதுவும் காலையில் மட்டும். அந்த அரை மணிநேர பயணத்திற்காக, மீதி இருபத்து மூன்றரை மணிநேரமும் தவங்கிடந்து ஏங்கினேன். அவளின் பெயரையும், ஊரையும் அவளின் அடையாள அட்டை காட்டிக்கொடுத்தது. மெல்ல மெல்ல பற்றிய நெருப்பு, இப்பொழுது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் இன்னமும் அவளிடம் நான் ஒருவார்த்தை கூட பேசியிருக்கவில்லை.
அவளால் என்மனம் அடைந்தது பாதி, அவளால் என்மனம் இழந்தது பாதி என இருந்தேன். சில நாட்களில் நான்கொண்ட உச்சகட்ட மகிழ்ச்சி என்னவெனில், அந்நெருப்பு அவளையும் ஆட்கொண்டிருந்தது. அவளும் என்னை காதலிக்கிறாள் என்ற எண்ணம், என்னை மேலும் உத்வேகப்படுத்தியது. இப்பொழுது, எப்போதும் அவள் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தேன். இருவரும் காதலித்துக்கொண்டிருந்தோம், ஒருதலையாக. பல தருணங்களில் காதலை பரிமாற முற்பட்ட போது, காலம் ஒத்துழைக்கவில்லை. ஆனால் வாழ்க்கை மேலும் அழகாகிக்கொண்டே இருந்தது. பள்ளிப்பருவ இனம்தெரியா பயத்தால், வெளிப்படுத்த இயலாமலே சென்றன நாட்கள். கடைசியில் செய்முறை, பொதுத்தேர்வு என விரைவாய் முடிந்தது பள்ளிக்காலம். இடையில் சில தருணங்களில், ஒரு சில வார்த்தைகள் பேசியிருந்தாலும், அவளை தொடர்புகொள்ள எனக்கோ, என்னை தொடர்புகொள்ள அவளுக்கோ எவ்வித வழியையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
அதன்பின் நான் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். அவள் எங்கே சென்றாள், என்ன ஆனாள் என எவ்வித தகவலும் இல்லை. பள்ளி முடிந்து நான்காண்டுகள் ஓடிவிட்டன, கிட்டத்தட்ட எங்கள் காதலுக்கும் ஆறாண்டுகள் ஆயிற்று. பல சமயங்களில் சமூகவலைதலங்களில் தேடியும், அவளை கண்டுபிடிக்க இயலவில்லை. இப்பொழுது கல்லூரி நான்காம் ஆண்டில் படித்து வருகிறேன். இன்றளவும் அவள் என்றேனும் வருவாள் என்ற நம்பிக்கையில் என்னுள் எரியும் அந்த காதல் நெருப்பிற்கு, அவளுடனான பல கார்கால நினைவுகளால் விறகூட்டி வருகிறேன்.