REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
E.Baby Chellathangam - India
Entry No:
181
தமிழ் கதை (Tamil Kadhai)
!!...ஈச்சனும் ... முள்ளனும்..!!
தார் பாலைவனத்தில் உயிரினங்களின் நடமாட்டமே அதிகம் இல்லாத பகுதி ஒன்று இருந்தது. அங்கு ஈச்ச மரமும் , உயரமாக வளரக்கூடிய முட்கள் கொண்ட ஒரு வகை கள்ளியும் அருகருகே வளர்ந்து வந்தது. இருவரும் பல வருடங்களாக நல்ல நண்பர்கள். கள்ளிச்செடி ஈச்ச மரத்தை "ஈச்சன்" என்றும், ஈச்ச மரம் கள்ளிச் செடியை "முள்ளன்" என்றும் அழைப்பது வழக்கம்.
ஒரு நாள் விடியற்காலையில் முள்ளன் சத்தமாக கத்தியது. ஈச்சனின் தூக்கமும் கெட்டது. ஈச்சன் ஏன் இவ்வாறு கத்துகிறாய் என்று கேட்டதும், முள்ளன் அதற்கு "ஏதோ வாகனங்களின் சத்தம் கேட்கிறது, மனிதர்கள் வருகிறார்கள் போல" என்று உட்சாகத்துடன் கூறியது. ஆனால் ஈச்சனோ எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி "தன்னந்தனியாக நிற்கும் நம் இருவரை பார்க்க தான் அவர்கள் வருகிறார்கள் என நீ நினைக்கிறாயா?" எனக் கேட்டது. முள்ளன் "ஆம் இங்கு நம் இருவரை தவிர வேறு யாரும் இல்லையே"என்றது.
சிறிது நேரத்தில் அந்த வாகனங்கள் அவர்களை நோக்கி வந்து பின் வேறுபாதையில் சென்றது. அதைப் பார்த்த முள்ளன் சோகத்தில் மூழ்கியது.
"நீ இங்கு வளர்வதற்கு முன்பே நானும் இதைப் போல பல முறை ஏமாந்தது உண்டு","கானல் நீரை அதிசயம் என புகைப்படம் எடுக்க வரும் மனிதர்களுக்கு , இந்த பாலைவனத்தில் கூட நாம் இருவரும் வளர்ந்து செழிப்பாக நிற்பது எல்லாம் அதிசயம் என தெரியப்போவதில்லை" என்றது ஈச்சன்.
மேலும் முள்ளனை உற்சாகப்படுத்த "என்னைப் பொறுத்தவரை என்றும் எனக்கு நீ தான் அதிசயம்" என்றது ஈச்சன். இதைக் கேட்டதும் முள்ளனோ மிக்க மகிழ்ச்சி அடைந்தது. இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி ,வெயில் கொளுத்தும் பாலைவனத்திற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொண்டு அன்போடு வாழ்ந்து வந்தனர்.
-இ.பேபி செல்லதங்கம்