REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Bhuvana Prakash - India
Entry No:
501
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
✍️அன்பு ✍️
அன்பெனும் பூமியில்
முகிழ்ந்திட்ட மலர்கள்
அவனியில் அழகுடன்
ஆட்சிகள் புரியும்
அன்னையாய் தங்கையாய்
தந்தையாய் தோழனாய்
நல்வழி காட்டிடும்
நயமுடன் உலகிலே
விழுதுகள் நிறைந்திட்ட
மரங்களும் இங்கே
அன்பெனும் கயிற்றால்
கட்டியே வளர்ந்திடும்
இறைவனின் படைப்பினில்
அத்தனை உயிர்களும்
ஆனந்தம் கொண்டிடும்
தீபமாய் ஒளிர்ந்திடும்
விந்தைகள் செய்திடும்
வியத்தகு மாந்தர்கள்
நெஞ்சிலே நிறைந்தது
அன்பெனும் சாசனம்
கஞ்சியே குடித்திடினும்
மெத்தையில் உறங்கிடினும்
அமைதியாய் வாழ்வது
அன்பெனும் பிணைப்பால்
எத்தனை யெத்தனை
இறைவனின் படைப்புகள்
அத்தனை உயிர்களும்
உயிர்ப்புடன் இருப்பதும்
அகத்திலே சுழன்று
அழகாய் ஆடிடும்
காற்றுகள் அசைவதும்
அன்பெனும் மாண்பால்
நூபுரம் ஒலித்திட
நடந்திடும் வஞ்சியுள்
நிறைந்தே காண்பதும்
அன்பெனும் நறுமணம்
சக்தியாய் வலம்வரும்
சங்கரி ரூபமும்
அன்பெனும் பிடியால்
ஆனந்தம் கொள்வாள்
முகிலிடை ஒளிர்ந்திடும்
முழுமதி நகைப்பதும்
பகலவன் தந்திடும்
அன்பெனும் கிரணமே
பரிதியும் எழுந்திட
பனித்துளி விலகிட
மலர்களும் மலர்வதும்
அன்பெனும் கதிரால்
சீற்றங்கள் நிறைந்திட்ட
சீறிடும் சிங்கமும்
அடங்கியே தணிந்திடும்
அன்பெனும் செய்கையால்
வையகம் வாழ்வதும்
வளமுடன் இருப்பதும்
வாரிதி பொழிவதும்
அன்பெனும் சக்தியே
கவிஞர்கள் உயிர்ப்புடன்
கவிதைகள் படைத்திட
கரங்களில் சந்தமாய்
அமர்வதும் அன்பே
இயற்கையை இரசிப்பதும்
இன்னல்கள் மறப்பதும்
இதயங்கள் நனைவதும்
அன்பெனும் இறைவனால்
குழவியின் சிரிப்பிலே
குவலயம் மயங்கியே
மறைகளைத் தெளிவதும்
அன்பெனும் ஆட்சியால்
கவலைகள் மறப்பதும்
காவியம் படைப்பதும்
வேதனை யழிவதும்
அன்பெனும் பிடியிலே
சோதனை தாண்டியே
சாதனை செய்திட
பாதைகள் தன்னிலே
முட்களும் ஆயிரம்
இலக்கினை அடைந்திட
முயற்சிகள் கரம்தர
விழிப்புடன் உழைப்பதும்
அன்பெனும் மொழியால்
மஞ்ஞையின் ஆடலும்
மங்கையின் பாடலும்
விண்ணவர் வியந்திடும்
வியத்தகு மானிடம்
சொற்களில் வேந்தரும்
காப்பியம் ஈந்தவரும்
ஆனந்தம் கொண்டது
அருள்தரும் அன்பால்
மேதைகள் பிறந்ததும்
வெற்றிகள் நிலைத்ததும்
பாதனை தொலைவதும்
பொறுப்புகள் மிகுவதும்
சீருடன் வாழ்வதும்
செம்மையாய் இருப்பதும்
அஞ்சுகம் போன்றதாம்
அன்பெனும் உயிரால்
கற்களால் காவியம்
படைத்திடும் சிற்பியின்
கரங்களில் உளியாய்
அமர்வதும் அன்பே
தத்தைகள் மொழிவதும்
நித்திலம் பிறப்பதும்
ஆண்டவன் தருகின்ற
அன்பெனும் பிணைப்பே
மேதினி தன்னிலே
பிறந்திடும் உயிர்கள்
பாங்காக வளர்வதும்
தாயெனும் அன்பினால்
ஆலயம் தன்னிலே
வாழ்ந்திடும் இறைவனை
அவனியில் உணர்வதும்
அன்பெனும் மொழியால்
காதலின் மொழியாய்
கவின்மிகு உணர்வுகள்
கலைகளாய் மாறுவதும்
அன்பெனும் சக்தியே
மழலையின் அழுகையை
மாண்புடன் அறிந்திட்டு
அமுதினைத் தருவதும்
அன்பெனும் அன்னையே
ஊனிலே கலந்து
உயிரிலே நுழைந்து
உதிரமாய் உடலிலே
பாய்வதும் அன்பே
உண்டியில் உறைந்திடும்
உணவெனும் தெய்வமும்
உழவனாய் உழைப்பதும்
அன்பெனும் உருவிலே
சொந்தங்கள் வாழ்வதும்
ஒன்றிட இருப்பதும்
சுமைகளும் சுகமாய்
தோன்றுவதும் அன்பே
சரித்திரம் நிற்பதும்
சந்ததி தழைப்பதும்
அரியணை ஒளிர்வதும்
அன்பெனும் அழகால்
சங்கொலி முழங்கிட
சண்டைகள் முடிவதும்
அமைதியால் பூமியும்
அழகுற சுற்றிட
அன்பெனும் ஆயுதம்
கரங்களில் வைத்திட
அவனியும் உயிர்ப்புடன்
என்றுமே வாழும்
பூவிதழ் மலர்ந்திட
புன்னகை புரிவோம்
வெற்றியின் கொடிகளை
இலக்கினில் ஏற்றுவோம்
தப்பிதம் மறப்போம்
தண்டனைகள் குறைப்போம்
அன்பெனும் மந்திரம்
அகத்தினில் உரைப்போம்
பனுவலில் மட்டுமே
படிப்பதை விட்டு
வாழ்க்கையில் வளமையாய்
வாழ்ந்தே காட்டுவோம்
விதியினை மாற்றியே
விந்தைகள் புரிவோம்
அன்பெனும் அன்னையின்
கரங்களைப் பற்றியே
வெள்ளியும் முளைத்தது
அன்பெனும் வடிவாய்
பண்புகள் வளர்ந்தது
பங்கயம் மலர்ந்தது
வானிலே விண்மீன்கள்
கூட்டமாய் ஒளிர்ந்தது
அன்பெனும் இறைவனின்
இருபதம் தொழுதது
தலைமுறை வாழ்ந்திட
வகைகளும் செய்வோம்
அன்பெனும் வழிகளை
காட்டியேக் கொடுப்போம்
உலகங்கள் முழுதுமே
காற்றென நிரம்பிய
அன்பினைப் போற்றியே
வணங்கியே பணிவோம்.
புவனா பிரகாஷ்
கோவை