top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Atchaya K - India

Entry No: 

325

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

மா மா காய் ..
அறுசீர் விருத்தம் ..

எங்கேயும் காதல் ...

கோயில் உள்ள வீதியினில்
கூட்டம் பெரிதாய்க் கூடியது
தீயின் வெம்மை சுடுவதுவாய்
தீரன் அவனின் உடலுணற
பாயில் படுத்துக் கிடந்தவனோ
பதமாய் நடந்து மேல்திசையின்
வாயில் வந்தே அடைகின்றான்
வண்ணத் தேரைக் கண்டபடி

வளையல் ஓசை குலுங்கிடவே
வண்ணப் பூக்கள் மணத்துடனே
சிலையே போன்ற அழகுடைய
சிவந்த நிறத்தை உடையவளோ
கலைகள் தன்னில் தேர்ந்தவளாய்
கடையே ஒன்றில் நின்றபடி
விலையைக் கேட்கும் சாக்கினிலே
விசயன் அவனை நோக்குகிறாள்!

மேகத் திரையே விலகியதும்
மெருகே கூடும் நிலவதுவாய்
ஏகத் துக்கும் அழகினையே
எங்கும் தேக்கி வைத்தவளோ
தேகம் தவழும் சீலையது
சிறிதே பறக்கப் பிடித்தவளாய்
சாக சங்கள் புரிகின்றாள்
சங்குக் கழுத்தை நீட்டியுமே !

இளமை தேங்கி ஒளிர்கின்ற
இனியப் பெண்ணாள் அழகையெல்லாம்
களவே செய்தான் கண்களினால்
கவிழ்த்தாள் அவளின் தலையினையே
உளவு.. பார்க்கும் ஒற்றனைப்போல்
ஓரக் கண்ணால் அவன்பார்க்க
பலமாய் மௌனம் காத்தவளோ
பாங்காய் நகைத்தாள் நாணமெழ !

விண்ணில் காணும் விண்மீனாய்
விழிகள் மின்னப் பார்த்தவளோ
கண்ணை இமைக்கும் நேரத்தில்
காதல் சொன்னாள் தன்னாலே !
மண்ணில் தொடராய் நாம்காணும்
மனத்தை சலனப் படுத்துகிற
எண்ணில் லாதக் காதலெல்லாம்
இவ்வா றேதான் பூக்கிறதோ !

bottom of page