top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

ARCHANA JAYAPAL - India

Entry No: 

492

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

*தலைப்பு - காதல்*மெய்க் காதல் என்று ஒன்றிருப்பின் ...
பொய்க் காதல் என்று ஒன்று உண்டோ?
உண்மையில் உலகத்துக் காதலில் ...


காதல் என்று உச்சரித்த அடுத்த கணம் பல்லாயிரம் நினைவுகள் கண்ணினுள் வண்ணக்கோலமாய் வர்ணம் பூசிக் கொண்டு மன வாசலில் நிற்க...

எனக்கு மட்டும் ஏதோ ஒரு விசித்திரக் காதல் நினைவிறங்க

கனத்த மனக்கண்ணீர் கருவிறங்க

உங்கள் உமிழ்நீரால் என்னை உமிழ்ந்தாலும்
நான் கவிவடிக்கக் காத்திருப்பது ....

ஒரு தேவதைக் காதல் அல்ல ..

ஒரு விலைமகளின் தன்னலமற்ற காதல்...

காதலின் மோகத்தை வலிமையின் மோகம் மீறும்போது அமைதியாய்ப் பூத்து
மரத்துப்போன பூவானவள்...

ஆகச்சிறந்த காதல் உலகில் ஆயிரம் இருப்பின்

இக்காதல் மட்டும் எக்காலமும் காயப்படுத்தபடுவதேன்?

அவமானப்படுத்தபடுவதேன்?

உறைந்தே போனாள்...

மனம் வற்றிக் காய்ந்தே போனாள்...

வறுமைத் தீயில் சிக்கி நொந்து வெந்து போனாள்...

ஒரு படி மேல் என்றால் உத்தியோகம் போய் இருப்பாள் . .
ஒருபடிக் கீழ் என்றால் உயிரைத்தான் விட்டிருப்பாள்...

இரண்டிற்கும் மத்தியில் இருந்து தொலைத்ததனால் நித்தமும் கையேந்தித் தனிமையில் தவிக்கிறாள்....

வயிறு வதைக்கிறது ...

வயதும் வதைக்கிறது...

வயதுதான் தீராதோ? வாலிபம்தான் போகாதோ?

பத்துக்கு அடுத்த வயது அறுபது என்று ஆகாதோ?

களவாணிக் கண்களால் கற்பு பற்றி எரிகிறது...

உலகத்துப் பெண்மை எல்லாம் பிறக்கையிலேயே கவசத்தோடு பிறந்திருக்க கூடாதா??

அவள் தனிமை அவள் தாவணிக்குள் தாழிட்டுக் கொண்டு இருக்கிறது முடிந்தால் உங்கள் *காதல்* என்னும் பெயரில் அவள் தனிமையை அகற்றுங்கள் ...

அவள் தாவணியை அல்ல ...

பெண்மையைத் தலைகுனிந்து வாழ வற்புறுத்திய சமூகம்...

சற்று தலைநிமிர்ந்து வாழ நினைத்து அண்ணாந்து பார்த்து அப்பன் என்றும் அண்ணன் என்றும் அழைத்தாள் ...


*காதல்* என்னும் பெயரில் பேரம்பேசி ஒரம் அழைக்கிறது...

பசித்தவனுக்கு ஒரு பிடிச் சோறு ...

ருசித்தவனுக்கு ஆடை அகற்றிய பெண்மையின் மிச்சமானவள்...

வீதியோரம் தினம்தினம் மலரும் நிர்வாணப் பூவானவள்..

ஒட்டிக்கொள்ளும் வர்ணமாய் தொட்டுக்கொள்ளும் தோளில் யாரோ செய்த *தூரிகைக் காதலி* இவள் !...


எவர் மீது கொண்ட காதலினால்..
எதன் மீது கொண்ட காதலினால் இருக்கப்பட்ட மனதுடன் அனுதினமும் முற்படுகையில் மலர்கின்றாள் ?...


முலைப்பால் அளித்தவளின் உயிரைக் காக்கவா ?...

இல்லை பால் வற்றிய அவள் முலைகளில் பிள்ளையின் பசியைத் தீர்க்கவா ?...

எதன் மீது காதல் கொண்டு அழகு நிலவின் சேலை உறிக்கிறாள் ?...

கொடூர நகங்கள் கீறிட்ட பள்ளங்களில் அவள் மரணப் பால் சுரக்கிறது ...


கொச்சை எச்சில்
முத்தம் தீண்டி
அவள் பெண்மை ருசிக்கிறது ...

நாளன்று ...
கிழமையன்று ...
தீட்டன்று ...
திணறலன்று ...


ஏதுமின்றி
அணுஅணுவாய் அவளைஇழக்கிறாள் ...

ஜடம் என்று கசங்கிப்போன அவளை உரசிவிட்டு
மீசை மயிரில் அவள் உணர்வு அறுத்த ஆண்மையின் மத்தியில் ...

கன்னி மங்கையைக் கடத்திவந்து நூறு சிங்கங்கள் மென்று துப்பிய மானைப் போல ...

விடியும் வரை விலை பேசிவிட்டு

விடிந்தவுடன் ச்சீ
விலைமகள் என்றான்...

தேவதை என்றால்
கேட்ட உடனே வரம் அளிப்பவள் என்று இருக்க ....

கேட்பவன் கேட்ட அனைத்தையும் அள்ளிக் காதலோடு அளித்த

அவள் மட்டுமே
எப்படி விலை மகள் ஆவாள் ?...

என்ன விலை கொண்டு அவளை ஆட்கொள்ள முடியும் ...

ஆண்மையின்
கர்வத்திற்கு
அங்கம் கூச அவள் உமிழ்ந்த காதல் பரிசு

அவள் உமிழ்ந்த கர்வப் பரிசு...


*எனது விலை உனது புன்னகை*

*எனது விலை உனது காதல் புன்னகை*

*சுயநலமற்ற காதலி* இனியேனும் இவளை மனிதம் கொண்டு காதல் செய்வோம் *தேவதைக் காதல்*

bottom of page