REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு - Ireland
Entry No:
49
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
*மழைக்கால ராத்திரியில*
மழைக்கால ராத்திரியில
ஒட்டுக் குடிசையில
ஓரமா நிக்கும்
கொங்காணி மனுசங்க…
அன்னாடம் அடுக்களையில
பத்து பாத்தரம் தேச்சு
புள்ளய பத்தரமா
வளத்து வந்த
புருசன் ஒத்தயா விட்டுட்டு
போன புண்ணியவதி அவ.
ஆத்தா காட்டுற
அத்தன பாசத்தயும்
அளவுல்லாம அனுபவிக்கிற
ஆறு வயசு நிரம்புன
பச்சப் பாலகன் அவன்
சூரியன் மொகங் காட்டுனா
மோட்டுல இருக்கற
ஓட்டகள யிருந்து
விசாலமா வெளிச்சம்
வர்ற மண் சுவத்து
குடிச அவுக இருந்தது
ஆடிக் காத்து அடிச்சா
ஆடிப் போயிடும்
அவுக இருந்த அரம்மண
அட மழை பேஞ்சுட்டா
அங்கங்க அருவி மாதிரி
அம்புட்டு மழத் தண்ணி
அனாசயமா எறங்கிடும்
மவன் கேட்டான்
மழை நிக்குமா ஆத்தா?
மண்ட நனையுது
மழத் தண்ணி வாட்டுது
அதத் தாங்கிக்கிட்டாலும்
அந்தப் பக்கம்
பைக் கட்டுக்குள்ள
புஸ்தகமெல்லாம் ஊறுது
பள்ளிக் கூடனும் போகனும்
படிச்சுப் படிச்சு
பெரியாளா ஆகணும்….
பதில் தெரியாத
ஆத்தா சொன்னா
கொட்டுற மழயெல்லாம்
கொட்டித் தீக்கட்டும்
பயிரு பச்ச
வெளஞ்சு வந்தா
பசி மயக்கம் வந்தாலும்
பகல் வேல செஞ்சுனாச்சும்
பள்ளிக்கூடம் அனுப்புறேன்
அது வரைக்கும் - அந்த
ஆண்டவன வேண்டிக்க
அர்த்த ராத்திரி மழ
வேண்டாம்னு - அப்படிப்
பேஞ்சாலும் ஒசரமா
இருக்குற ஓட்டு வீட்டுல
பெய்யனும்னு…
வெவரம் தெரியாத
சின்னப் புள்ளயும்
வெள்ளந்தியா தலயாட்டுனான்
உள்ளுக்குள்ள நினைச்சுக்கிட்டான்
ஒரு நாளக்காவது
ஓட்டு வீடு கட்டணும்னு…
ஆயுசு முச்சூடும் பாசத்த
அள்ளி அள்ளி அசராம
கொடுத்த ஆத்தா
அரவணைச்சு முத்தம் குடுக்க
ஆத்தாவோட மடியில
அப்படியே தூங்கிப் போனான்
அடுத்த நாளு காலையில
ஆளுக சத்தம் கேட்டு
வெட வெடத்துப் போயி
வெரசா எந்திருச்சு பாக்கையில
ஆத்தா அவன் மேல
பொத்துனாப்ல படுத்திருக்க
அவ மேல இடிஞ்சு விழுந்த
மண்ணு சொவரு…
மகராசி மகன காப்பாத்திட்டு
மறைஞ்சுதான் போயிட்டான்னு
ஆளுக்காளு சொல்லிக்கிட்டாக
ஆச ஆசயா பெத்த மகன
எமன் எடுத்திடக் கூடாதுன்னு
எமன்கிட்ட போராடுன தாயோட
அன்போட வெல என்னன்னு
யாருக்காவது தெரியுமான்னு
எல்லாருமே கேட்டுக்கிட்டாக
சலனமில்லாம படுத்திருந்த
ஆத்தாவோட மொகத்த பாத்து
அழுக மட்டுந்தான்
தெரிஞ்சுச்சு அவனுக்கு…
அடுத்த வேள சாப்பாடு?
இனிமே அவனுக்கு
ஒட்டுக் குடிசயா
ஓட்டு வீடா - அதத் தாண்டி
அவன் மேல அன்ப காட்ட
ஆரு இப்போ வருவாக?
அந்த ஆண்டவந்தான்
பதில் சொல்லணும்… … ….
✍தமிழ்மைந்தன்-ஜான் ரிச்சர்டு