top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

கி.இலட்சுமி கி.இலட்சுமி - India

Entry No: 

106

தமிழ் கதை (Tamil Kadhai)

புதிய சொந்தம்
******************
தீபக் விடாமல் அடம்பிடிக்க கோபம் வந்தது விமலாவிற்கு...

"இதோ பார் தீபக் நான் சொன்னா சொன்னதுதான்...தெரு நாயை வீட்டுக்குள்ள சேர்க்க முடியாது...அதுமட்டுமில்ல நாமளே வாடகை வீட்ல இருக்கறோம்...நாயை வளர்க்கறதுக்கு வீட்டு ஓனர்கிட்டே பர்மிஷன் வாங்கணும்...இந்த வயசுல இவ்வளவு அடம் கூடாது...போ போயி படிக்கற வழியைப் பாரு..." விமலாவின் பேச்சில் முகம் சோர்ந்து போனான் பத்து வயது தீபக்.

இரண்டு நாளாய் அங்குமிங்கும் தெருவில் துள்ளித்திரிந்து கொண்டிருக்கிறது, அந்த நாய்க்குட்டி. வெள்ளையும் கருப்புநிறமும் கலந்த அழகான நாய்க்குட்டி. எப்படி வந்ததோ எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை... தெருவில் உள்ள சிறுவர்கள் அதனுடன் விளையாடினர். அவ்வப்போது சாப்பிட பிஸ்கட்டும் கொடுத்தனர். தீபக்கிற்கு வெகுநாளாகவே நாய் ஒன்றை வளர்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் இந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும் பரவசமடைந்தான். இரண்டுநாளாய் தெருவிலேயே நாய்க்குட்டியுடன் சுற்றுகிறான். சின்ன கொட்டாங்குச்சியில் அம்மா அவனுக்கு தரும் பாலை ஊற்றிவைத்து, அதை நாய்க்குட்டி குடிக்கும் அழகைப் பார்த்து இரசித்தான். எப்படியாவது நாய்க்குட்டியை வீட்டுக்கு அழைத்து வந்துவிடமென்று துடித்தான். ஆனால் விமலா பிடிவாதமாய் மறுத்ததில், அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.

இரவு 10.30 மணி...வீட்டுக்குள் நுழைந்தார் தீபக்கின் அப்பா அசோகன். வெகுநேரம் ஆட்டோ ஓட்டி களைத்து போயிருந்தார்.அப்பா வரும்வரை ஆவலுடன் விழித்திருக்கும் தீபக் இன்று அழுதழுது உறங்கி போயிருந்தான்.
"என்னாச்சு விமலா...தீபக் ஏன் சீக்கிரம் தூங்கிட்டான்..." அசோகன் கேட்க, தயக்கத்துடன் நடந்ததை சொன்னாள் விமலா.

"அவனுக்கு என்னங்க தெரியும்...சின்னப்பிள்ளை ஏதோ தெரியாம அடம்பிடிக்கிறான்...நாமளே ஒண்டுக் குடித்தனத்துல ஒடுங்கிபோயி குடித்தனம் நடத்தறோம்...வாயை கட்டி வயித்தை கட்டி குடும்பம் நடத்தினாலே மாதக் கடைசியில திண்டாட வேண்டியிருக்கு...இதுல நாயை வளர்க்கறதெல்லாம் சாத்தியமா சொல்லுங்க...ரெண்டு நாள் அழுவான்... அப்புறம் எல்லாம் சரியாயிடும்...நேரமாச்சு நீங்க சாப்பிடுங்க " விமலா சொல்ல, வாடிய மகனின் முகத்தையே உற்று நோக்கினார் அசோகன்.

காலையில் எழுந்ததும் தெருவிற்கு ஓடி, நாய்க்குட்டியை பார்க்க சென்றான் தீபக். நாய்க்குட்டி கண்ணிலேயே படவில்லை. இங்குமங்கும் தேடி காணாமல், வாயிற்படியிலே உட்கார்ந்து விட்டான்.
"என்ன தீபக்...இரவும் சரியா சாப்பிடலே...இப்பவும் பால் குடிக்காம வெளியே ஓடிவந்துட்ட...ஏன்டா இப்படி படுத்தற..."

"போம்மா...என்னோட நாய்க்குட்டியைக் காணோம்...நான் உள்ள வரமாட்டேன்...போ..."
"எப்படியோ போய்த்தொலை...எவனாவது நாய்க்குட்டியை தூக்கிட்டு போயிருப்பான்... இல்லேன்னா...வண்டியில அடிபட்டு ஏதாவது ஆகியிருக்கும்...இன்னும் அரைமணியில உள்ளே வந்து பால் குடிக்கலைன்னா... முதுகிலேயே நாலு வைப்பேன்..." படபடவென பேசிவிட்டு சென்றாள் விமலா.
அம்மா சொல்லியபடி நாய்க்குட்டிக்கு அடிபட்டிருக்குமோ...இல்லை யாராச்சும் தூக்கிட்டு போயிட்டாங்களோ... யோசித்தவனின் கண்கள் கலங்கின... அந்நேரம் வந்து நின்றது ஆட்டோ...இறங்கிய அப்பா அசோகனின் கையில் காணாமல்போன நாய்க்குட்டி ...தீபக்கை கண்டதும் தாவிக்குதித்து அவன் காலை நக்கியது...மகிழ்ச்சியோடு நாய்க்குட்டியைத் தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான் தீபக்...

"உள்ளே தூக்கிட்டுப்போயி விளையாடு தீபக்...இனி இந்த நாய்க்குட்டி நம்மோடதான் இருக்கும்..." அப்பா சொல்ல, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு உள்ளே நாய்க்குட்டியுடன் சென்றான். வேகமாக வெளியே வந்தாள் விமலா...
"என்னங்க..." என்று ஆரம்பித்தவளை தடுத்து நிறுத்தி பதில் கொடுத்தான் அசோகன்.

"விடு விமலா...தீபக் வாயில்லா பிராணியை அன்போடு வளர்க்க நினைக்கறதை நாம ஏன் தடுக்கணும்...ஊர்ல மத்த பிள்ளைங்க மாதிரி வேண்டாத விலை உயர்ந்த பொருள் எதையும் வாங்கி கொடுங்கன்னு அவன் ஒருநாளும் கேட்டதில்லை...நமக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல...அந்த நாய்க்குட்டியாவது நம்மளோட இருக்கட்டும்...அதுவும் சொந்தத்தை இழந்து அநாதையாகத்தானே நிக்குது...இன்னொரு பிள்ளையா நினைச்சு வளர்த்துட்டு போலாம் விமலா...வெட்னரி டாக்டர்கிட்ட காண்பிச்சு ஊசியெல்லாம் போட்டுட்டுதான் கொண்டு வந்திருக்கேன்...நைட் வரும்போது அதுக்குன்னு விக்கிற உணவை வாங்கிட்டு வரேன்...மத்தியானம் மட்டும் சமாளிச்சுக்கோ...அப்புறம் வீட்டுஓனர் கிட்டேயும் பேசியாச்சு...பிரச்சினை வராம பார்த்துக்கோங்கன்னு சொன்னாரு...
சரின்னுட்டேன்...நான் சவாரிக்கு கிளம்புறேன்...புதிய சொந்தத்துக்கும் சேர்த்து சம்பாதிக்கணும் இல்லையா..."
புன்னகையோடு அசோகன் சொல்ல, விமலாவின் முகத்திலும் குறுநகை படர்ந்தது.

bottom of page