REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
இயற்கைக்காதலி ரஞ்சினி - India
Entry No:
259
தமிழ் கதை (Tamil Kadhai)
என் எழுத்துக்களுக்கு உயிர் தந்தவள்:
****************************
ஐந்து ஆறு சுருக்குப்பை சொத்துக்களுக்கு சொந்தக்காரி என் எழுத்துக்களுக்கு உயிர் தந்தவள். காலையில் இருந்து மாலை வரை நாவல் பழம் விற்று விட்டு வீடு திரும்பிய கிழவி ஒருத்தி.
நீண்ட தூர பயணம் இல்லை 20 நிமிடங்கள் தான் எனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல. நேற்றும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினேன். அடிக்கடி இருக்கையில் அமரும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் என்றாவது கிடைக்கும். மூவர் அமர்ந்து போகும் இருக்கையின் நடுவில் இடம் இருந்தது. அமர்ந்து விட்டு டிக்கெட் வாங்குவதற்கானச் சில்லறைகளை கையில் எடுத்து வைத்துக்கொண்டு ஜன்னல் பக்கமாக திரும்பும் போது பக்கத்தில் பாட்டி ஒருத்தி 20 ரூபாய் தாள்கள் 10 ரூபாய் தாள்களை எடுத்து பேருந்து அசைவுக்கு ஏற்றபடி அசைந்து அசைந்து எண்ணிக்கொண்டிருந்தாள். வெயிலில் களைத்து போய் வியர்வை நனைத்த ஆடையோடு ரூபாய் நோட்டுக்களை கணக்கு பார்த்தவளிடம் பாட்டி நீங்கள் எங்கு இறங்க வேண்டும் என்ன வேலை செய்து விட்டு போகிறாய் என்றேன். என்னை பார்த்து சிரித்த படி நோட்டுக்களை எண்ணிக்கொண்டே நீ இறங்கும் இடத்தில் இருந்து இன்னும் தூரம் செல்ல வேண்டும் நாவல் பழம் விற்று விட்டு போகிறேன் என்றாள். உங்களுக்கு யாருமே இல்லையா பாட்டி நீங்கள் வீடு போய் சேர்வதற்குள் இருட்டி விடுமே நீங்கள் போய் தான் சமையல் செய்து சாப்பிட வேண்டுமானால் கஷ்டமாக இருக்குமே என்றேன். இந்த முறையும் பாட்டி சிரித்த படியே நம்மள யாரு பார்க்க இருக்கா நாம தான் மற்றவங்கள பார்க்கணும் என்று சொல்லியபடியே மருமகள் இருக்கிறாள் என்றாள். ஓ! அப்படி என்றால் சரி என்று நான் சொல்லி முடிப்பதற்குள் மருமகள் நில் என்றால் நிற்கணும் உட்கார் என்றால் உட்காரனும் என்று சொல்லிக்கொண்டே ரூபாய் நோட்டுக்களை என்னிடம் தந்து சரி பார்த்து தரச் சொன்னாள். அப்பொழுதுதான் புரிந்தது பாட்டி ஏன் நாவல் பழம் விற்பதற்கு இவ்வளவு தூரம் வந்தாள் என்று. எண்ணும்போதே அவள் கஷ்டத்தின் களைப்பு ரூபாய் நோட்டில் ஒட்டியிருந்தது தெரிந்தது. ஒவ்வொரு சுருக்குப் பையாக எடுத்துத் தந்தாள். 500 ரூபாய், 1000 ரூபாய் என்று எண்ணிக் கொடுத்தேன். முடிந்து முடிந்து சுருக்குப்பையில் வைத்து இடுப்பில் சொருகினாள். கவனமாக வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி இறங்கும் இடம் வருவதற்குள் தூங்கிவிடாதீர்கள் நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இறங்கி விடுவேன் என்றேன். சரி அப்படியானால் நீ பேசாமல் எண்ணிக்கொடு என்று மற்றொரு பையை தந்தாள். அதில் 20 ரூபாய் 50 ரூபாய் சேர்த்து மொத்தமாக 500 ரூபாய் இருந்தது. பையில் முடிந்து அதையும் இன்னொரு புறம் இடுப்பில் சொருகி விட்டு மற்றொரு பையை அவிழ்த்து கொடுத்தாள். அதில் 10 ரூபாய் தாள்கள் 16 இருந்தது. இந்தாருங்கள் பாட்டி இதில் 160 ரூபாய் இருக்கிறது என்று அவளிடம் கொடுத்தேன்.
நீயும் என் பேத்தி தானே இதை நீயே வைத்துக்கொள் என்றாள். அந்த சில நொடிகள் பல வருடங்களுக்கு முன் இறந்து போன எனது பாட்டி என் கண்ணோடு கண்ணாய் உயிரோடு நிழலாடினாள். நன்றி பாட்டி உங்கள் அன்பு மட்டும் போதும் கவனமாக வீட்டுக்குப் போங்கள் நான் இன்னும் கொஞ்சம் தூரம் தான் வருவேன் என்றவுடன் இம்முறை எல்லா சுருக்குப்பையையும் எடுத்து மொத்தமாக 2000 ரூபாய் வருகிறதா பார் என்றாள். ஒன்றாக சேர்க்கும் போதே 2000 வந்தால் தான் சரி வரும் என்று அவளுக்குள்ளே பேசினாள் தனியா போய் விடுவாயா பாட்டி கைப்பேசி ஏதும் இருக்கிறதா என்றேன். இல்லை நீ பேசாமல் எண்ணிச் சொல் என்றாள். 2000 ரூபாய் இருக்கிறது பாட்டி பையில் வையுங்கள் என்றேன். இதையும் இறுக்கமான கட்டு போட்டு இடுப்பில் சொருகினாள். மிச்சம் 160 ரூபாய் மீண்டும் கெஞ்சினாள் வாங்கிக்கொள் என்று மறுத்தேன். மனம் இல்லாமல் மடித்து சுருக்குப்பையில் சொருகிக்கொண்டே என்னை மறந்து விடுவாயா என்றாள். ஏன் பாட்டி இப்படி கேட்டிங்க என்னை கடந்து போனவர்களில் நீங்களும் மறக்க முடியாத நபர் என்றேன்.
பாட்டி சிரித்துக்கொண்டே வீட்டிற்கு போனதும் என்னை நினைப்பாயா என்றாள். நிறுத்தம் வந்து விட்டது எழுந்து வாருங்கள் என்றார் நடத்துனர். சரி பாட்டி நான் இறங்குகிறேன் கவனமாக போங்கள் என்று எழும் போது என்னை கட்டியணைத்து அவள் கையில் நெட்டி முறித்து எனக்கு தந்தனுப்பிய முத்தத்தில் இறங்கி வந்தேன் என் இதயத்தை அவளிடம் விட்டுவிட்டு.
தினமும் என்னிடம் முட்களோடு உறவாடும் உறவுகளுக்கு மத்தியில் நேற்று பேருந்து பயணத்தில் நான் பார்த்து திரும்பிய பாட்டி என்றுமே என் மனதில் வாடிப்போகாத வாசமுள்ள "ரோஜா மலர்"